Home > தொடர்கள் > உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் – 12. பால் செஸான்னே

உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் – 12. பால் செஸான்னே

இவரும் பிரான்ஸ் நாட்டு ஓவியர்தான்.

வாழ்ந்த காலத்தில் கண்டுகொள்ளப்படாதவர். இறந்த பிறகு உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடப்பட்டவர்.

பிரான்ஸ் நாட்டின் புரோவென்ஸில் உள்ள ஒரு சிறிய நகரமான எய்க்ஸில் 1889 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை பிலிப்பி அகஸ்ட்டி ஒரு வங்கியாளர். சிக்கனமானவர். கண்டிப்பானவர்.

இவரது ஓவியங்கள் இவர் உயிரோடு இருக்கும் போது அதிகமான வரவேற்புப் பெறவில்லை. ஆனால் தற்போது பால் செஸான்னே நவீன ஓவியத்தின் மகத்தான முன்னணி படைப் பாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

தனது மகன் பால் செஸான்னேயின் ஓவிய லட்சியங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லாமல் இருந்தது. ஆனால் அவரது தாயாரும் சகோதரி மேரியும் பால் செஸான்னே ஓவியம் வரைவதை ஊக்கப்படுத்தினர். ரெம்பிராண்ட், ரூபென்ஸ் போன்ற ஓவியர்களைப் பற்றியெல்லாம் பால் செஸான்னேயின் தாய் அவருக்கு சொல்லிக் கொடுத்தார். ஓவியம் வரைவதற்கான உபகரணங்கள் வாங்கிக் கொடுத்தார்.

தனது 13 ஆவது வயதில் பால் செஸான்னே போர்போனில் உள்ள கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு எழுத்தாளர் எமிலி ஸோலாவுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. மற்ற கல்லூரி நண்பர்களிடம் இருந்து அவர்கள் இருவரும் தனித்த நட்புடன் விளங்கினர். இதில் எமிலி ஸோலா எழுத்தாளராக வேண்டும் என கனவு கண்டார். பால் செஸான்னே ஓவியராக வேண்டும் என கனவு கண்டார். இருவருடைய கனவுகள்தான் அவர்களை நெருக்கமாக இணைத்தது.

ஆனாலும் எதிர்காலத்தில் தான் ஒரு ஓவியராகிவிடுவோம் என்ற முழு நம்பிக்கை பால் செஸான்னேவுக்கு ஏற்படவில்லை. 1859லிருந்து 1861 வரையில் அவர் சட்டம் படித்தார். இது அவரது தந்தைக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால், கடைசியில் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக அவர் ஓவியம்தான் தனது லட்சியம் என்ற முடிவை எடுத்தார். 1861ல் அவர் பாரீஸ் சென்று மீண்டும் எமிலி ஸோலாவுடன் சேர்ந்தார்.

இதனால் அவரது தந்தை அவருக்கு பொருளாதார ரீதியில் உதவி எதுவும் செய்வதற்கு தயக்கம் காட்டினார். பிற்காலத்தில் பால் செஸான்னேவுக்கு மரபு வழியாக வரவேண்டிய சொத்து வந்து சேர்ந்து, அவரால் வசதியாக வாழ முடிந்தது.

பாரீசில் அவர் காமிலி பிசாரோவை சந்தித்தார். பல்வேறு இம்ப்ரசனிஸ்ட் குழுவை சேர்ந்த ஓவியர்கள் குறித்து அறிந்துகொண்டார். 1874, 77 ஆகிய ஆண்டுகளில் அவர்களுடன் சேர்ந்து ஓவியக்கண்காட்சியில் இவரது ஓவியங்களையும் இடம் பெறச் செய்தார். அப்போது இவரது ஓவியங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இம்ப்ரசனிஸ்ட் ஓவியர்களில் ஒருவராக இவர் பார்க்கப்படவில்லை. அவர்களது வட்டத்தை விட்டு இவர் வெளியேதான் இருந்தார். இம்ப்ரசனிஸ்ட் ஓவியங்களில் கட்டமைப்பு போதாமை இருந்ததாக பால் செஸான்னே கருதினார்.

இம்ப்ரசனிச ஓவியங்களை அருங்காட்சியக கலையைப் போல காலத்தால் அழியாத அடர்த்தி மிக்கதாக மாற்ற அவர் விரும்பினார்.


1886 ஆம் ஆண்டு செசான்னேவுக்கு திருப்புமுனையான ஆண்டு என சொல்லலாம். ஹோர்ட்டென்ஸ் ஃபிகுவெட் என்ற மாடல் பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். பால் செஸான்னேவின் தந்தை இறந்தார். அவரது நெருங்கிய நண்பன் எமிலி ஸோலாவின் எல் ஒயூவ்ரே என்ற நாவல் இந்த ஆண்டில்தான் வெளியானது. அந்த நாவலில் கதாநாயகனே ஒரு ஒவியர்தான் (பால் செஸான்னே மற்றும் மோனெட் ஆகியோரின் பாதிப்பில் அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியிருந்தார் எமிலி ஸோலா). அந்த காதாநாயகன் தனது கலைத்திறனில் தோல்வி அடைவதைப்போல நாவலை அமைத்திருந்தார். இது பால் செஸான்னேவை மிகவும் பாதித்தது. அதன்பிறகு எமிலி ஸோலாவுடன் முற்றிலும் நட்பை முறித்துக்கொண்டார். அதன்பிறகு அவர் எமிலி ஸோலாவுடன் பேசவே இல்லை.

1886க்குப் பிறகு பால் செஸான்னே கொஞ்சம் கொஞ்சமாக தனது நண்பர்களை விட்டு விலக ஆரம்பித்தார். தனது வேலைகளில் மூழ்கினார். உருவச் சித்திரங்கள் மற்றும் இயற்கைக்காட்சி ஓவியங்களை வரைந்தார். வரைந்த ஓவியங்களையே மீண்டும் மீண்டும் சரி செய்தார். அவை முடிந்து விட்டதாக அவர் ஒருபோதும் கருதியதில்லை. ஒரு ஓவியராக பால் செஸான்னே மிகவும் மெதுவாகத்தான் முதிர்ச்சி அடைந்தார்.

அவரது வாழ்நாளின் கடைசி 25 ஆண்டுகளில்தான் அவரது மகத்தான படைப்புகளையெல்லாம் முடித்தார். ஓவியங்களில் அவர் உருவாக்கிய புதிய பாணிகள்தான் ஓவிய உலகத்தில் கியூபிசம், அப்ஸ்ட்ராக்ஷன் போன்றவற்றின் பரிணாம வளர்ச்சிக்கு காரணம். 1890லிருந்து ஓவியத்துறையில் ஏற்பட்ட ஒவ்வொரு அவென்ட் கார்டே இயக்கத்திலும் அவரது படைப்புகள் பாதிப்புகளை ஏற்படுத்தின.

1906ம் ஆண்டு அக்டோபர் மாதம் கடுமையான மழையுடன் புயல் வீசியது. பல நாட்கள் இதில் சிக்குண்டார் பால் செஸான்னே. 1906 ஆம் ஆண்டு, அக்டோபர் 22 ஆம் தேதி இறந்தார். அவரது வாழ்க்கை தனிப்பட்ட முறையிலும் கலை உலகிலும் தோல்விகள் நிறைந்ததாகவே இருந்தது. ஆனால் அவரது ஒரு சில படைப்புகள் ஐரோப்பா முழுவதும் பேசப்பட்டன.

முடிவில் அவர் வெற்றிபெற்றுவிட்டார். மிகத் தாமதமாகவே அவருடைய ஓவியங்களின் உள்ளடக்கம் புரிந்துகொள்ளப் பட்டது. அவருடைய மேதமை புரிந்தது. உலகம் அவரை ஏற்றுக் கொண்டது. நவீன ஓவியக்கலையின் தந்தை என்று அவரை மெச்சியது.

You may also like
உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் – 11. கவ்குய்ன்
உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் – 2.மைக்கேல் ஏஞ்சலோ

Leave a Reply