Home > கதை > சென்னையில் முதல் முறை

சென்னையில் முதல் முறை

2000-க்கு முன்பு எனது இலக்கு சினிமாவாக இருந்தது. முதலில் பாடலாசிரியராக வேண்டுமென இருந்த கனவு, பின்பு இயக்குநராக ஆவதாக உருமாறியது. சென்னையில் சினிமா வாய்ப்புக்குப் போராடிக்கொண்டிருந்த அண்ணனும் நண்பனுமான சுரேஷைத் தேடி முரட்டு தைரியத்தில் ஒருமுறை பஸ் ஏறிவிட்டேன்.

சென்னையில் வந்து இறங்கியாயிற்று. நிச்சயம் அவன் வரவேற்கப்போவதில்லை. அதனால் அவனை கடைசி இலக்காக வைத்துவிட்டு கொஞ்சம் வேலை தேடிப்பார்க்கலாம் என முயன்றேன். அதற்கு முன்னால் பார்த்த சென்னையெல்லாம் திரைப்படங்களில் பார்த்ததுதான்.

அந்த நேரத்தில் என் வாசிப்பெல்லாம் பெரும்பாலும் நாவல்கள்தான் என்பதால், அன்றைக்கு புகழ்பெற்றிருந்த நாவல் எழுத்தாளர்களான இரட்டையர்களிலிருந்து தொடங்கலாம் என்றெண்ணிக் கிளம்பினேன்.

தெரியாத சென்னையில் வந்து இறங்கவே காலை பதினொரு மணி வாக்கில் ஆகிவிட்டது. அப்போது சென்னை பேருந்து நிலையம் பாரீஸ் கார்னரில் இருந்தது. அங்கிருந்து தயங்கித் தயங்கி டீக்கடையில் சென்னை அடையாறுக்கு எந்தப் பஸ் போகுமென விசாரித்து, அடையாறில் வந்து இறங்கும்போது இரண்டு மணிக்கு மேலாகிவிட்டது.

அந்தக் குறிப்பிட்ட நாவல் வெளிவரும் முகவரியை அடையாறில் கேட்டால், பத்தில் எட்டுப் பேர்களுக்குத் தெரியவில்லை.

இரண்டுபேர் சரியான முகவரி தெரியாமலே தவறாக வழிகாட்டினார்கள். ஆட்டோ பிடித்துப் போகவெல்லாம் கையில் காசு கிடையாது. கெனால் பேங்க் ரோட்டில் நடந்து நடந்து கால்வலித்தது தான் மிச்சம். மணி நான்காகிவிட்டது. கால் வலியோடு, வயிற்றுப் பசிவேறு.

ஒரு டீக்கடையில் ஒதுங்கினேன். நேரம் வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. நான் தேடிப்போகவேண்டிய அண்ணன் இருந்தது அண்ணா நகர். இருட்டியபிறகு போய் அவனை இருளில் தேடி அலையவேண்டி வந்து பிளாட்பாரத்தில் தஞ்சமடையவேண்டிய இக்கட்டு வந்துவிடக்கூடாது என மனம் சொன்னது.

அதனால் மீண்டும் பிரதான சாலைக்கு வந்து, அண்ணா நகருக்குப் எப்படிப் போவதென விசாரித்து வந்துசேர்ந்தேன். தட்டுத் தடுமாறி அவன் இருந்த வீட்டை எப்படியோ அடைந்துவிட்டேன். அவனோ வீட்டில் இல்லை. அவனுடன் தங்கியிருந்த நண்பர்கள்தான் அங்கிருந்தனர்.

நைட்டு தங்கிக்கோ, அவன் காலையிலதான் வருவான் பார்க்கலாம் என்று விட்டனர். அவர்களும் சினிமாவுக்கு முயன்றுகொண்டிருந்த நண்பர்கள்தான்.

மறுநாள் காலையில்தான் அண்ணனைப் பார்க்கமுடிந்தது. பார்த்த உடனே, “உன்னை எவன் சென்னைக்கு வரச்சொன்னது” என பாசமாக வரவேற்றான்.

தனக்கே கையில் ஒரு வேலையில்லாமல், சினிமா வாய்ப்புத் தேடி அலையும் அண்ணன்களிடம் இதைவிட பாசமான வரவேற்பை எதிர்பார்ப்பது நியாயமில்லை என்று புரிந்துவைத்திருந்தேன். சுருக்கமாக அவன் சொன்னது இதுதான்.

நானே இங்கே ஒண்டிக்கிட்டு இருக்கிறேன். இதுல உன்னையும் தங்கவைக்கிறது சாத்தியமில்லை. ஊருக்குத் திரும்பிப்போ. எதாச்சும் பிடிகிடைச்சதும் நான் உன்னை கூப்பிட்டுவிடறேன். அதில் ஒரு சிக்கல்.

வீட்டுக்கு ஒரு சின்ன தகவல்கூட சொல்லாமல், இரவோடு இரவாகக் கிளம்பிவந்திருந்தேன். அடுத்தநாளே அங்கே திரும்பச்சென்று இறங்கினால் நமக்கு என்ன மதிப்பிருக்கும்… தவிரவும் கையிலிருந்த காசு, வயிறு நிறைய ஒரு மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டு ஒரு டீயும் சிகரெட்டும் பிடிக்கக் காணுமே தவிர ஊர் போகும் அளவுக்கெல்லாம் கிடையாது. சிக்கலை அவனிடம் சொன்னேன். தலையைப் பிடித்தபடி இறங்கி ஒரு டீக்கடைக்கு அழைத்துச்சென்றான்.

இரண்டு பேரும் ஆளுக்கொரு டீயும் பீடியும் முடித்தோம். நிறைய சிந்தித்துவிட்டு அந்த அரிய யோசனையைச் சொன்னான். “வேறவழியில்ல, நேரா பாரிஸ் போற பஸ்ஸுல ஏறு.

பாரிஸ் பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கம் போய் இறங்கு. ரோட்டுல குறுக்கநெடுக்க நடந்து கொஞ்சம் டீசன்டா இருக்க ஹோட்டலைப் பாரு. வெட்கப்படாம போய் வேலகேட்டுடு. ஒரு மாசமோ…. பத்துநாளோ வேலை பார்த்து சம்பளம் வாங்கிட்டு ஊருக்குப் போயிடு.”

நான் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். இந்த யோசனை சொல்றதுக்கு நீ எதுக்கு… சொல்லவில்லை மனதில் நினைத்துக்கொண்டேன்.

அந்த யோசனைப்படி பாரிஸுக்கு பஸ் ஏறியவன் ஊருக்குப் புதியவன் என்பதால் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே இறங்கிவிட்டேன். இரண்டொரு நிமிடம் தலையைக் கசக்கியவன், ஹோட்டல்ல வேலை பார்க்கிறோம்னு முடிவுபண்ணிட்ட பிறகு… அதை சென்ட்ரல்ல பார்த்தால் என்ன… பாரிஸ்ல பார்த்தா என்ன… என்று ஒவ்வொரு ஹோட்டலாகப் பார்த்தபடி பத்து நிமிடம் நடந்தேன்.

அப்போதுதான் சென்ட்ரல் புகாரி ஹோட்டல் கண்ணில் பட்டது. திடீரென உத்வேகம் வந்ததுபோல உள்ளே நடந்துசென்று காசாளர் இருக்கையில் இருப்பவரைப் பார்த்து வேலை கேட்டேன்.

முந்தைய நாள் வரை துணைக்கு வராத அதிர்ஷ்டம் அப்போது துணைக்கு வந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். கிட்டத்தட்ட அங்கு ரெண்டுமாதம் காலம்தள்ளிவிட்டு ஊருக்குத் திரும்பினேன்.

மீண்டும் சென்னைக்குத் திரும்ப ஒரு வருட காலம் இடைவெளி பிடித்தது. இந்த முறை நல்ல ஊரா இருக்கே… என்று நானும், நல்லா பையனா இருக்கானே என சென்னையும் பரஸ்பரம் பற்றிக்கொண்டோம்.

அப்புறம் என்னுடன் பேருந்தில் டிக்கெட் எடுக்காமலேயே சென்னைக்கு வந்தார்களே பாடலாசிரியனும் இயக்குனனும்… அவர்கள் என்னவானார்கள் என கேட்கிறீர்களா… இரண்டாவது முறை சென்னை வந்தபோது, ஒருசமயம் மூன்றுவேளை சோறா… லட்சியமா… என ஒரு இக்கட்டு வந்தது.

நான் சோறு என கைதூக்கினேனா… அப்போது கோபித்துக்கொண்டு போனவர்கள்தான். அப்புறம் அவர்களைப் பார்க்கவே வாய்ப்பு அமையவில்லை.

You may also like
‘சென்னை 6 மாவட்டங்களாக பிரிப்பு’
சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று மேலும் 5,546 பேருக்கு கொரொனா உறுதி
வெப்பச்சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Leave a Reply