Home > கதை > நன்றி கெட்ட தம்பி – கல்கியின் சிறுகதைகள் – 4

நன்றி கெட்ட தம்பி – கல்கியின் சிறுகதைகள் – 4

கோவிந்தசாமி நாயக்கர் செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்தவர். அவர் பிறந்தபோது அவர் தந்தை இராமானுஜலு நாயக்கருக்கு ஐந்து வேலி நன்செய் நிலமும் மற்றும் தோப்புத் துறவுகளும் இருந்தன. ஆனால் அவருக்கு வயது பத்து ஆனபோது, குடும்பத்திற்குப் பொல்லாத காலம் ஏற்பட்டது. அவருடைய தம்பி தீனதயாளு பிறந்த லக்னமே அதற்குக் காரணமென சோதிடர்கள் கூறினர்.

ஆனால் இந்தக் கொள்கையில் நமக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஏனெனில், தீனதயாளு பிறந்த லக்னத்திற்கும், இராமானுஜலு நாயக்கர் அவ்வூர் ஜமீன்தாருடன் ஒரு தாசி விஷயமாகச் சச்சரவு இட்டுக் கொண் டதற்கும் நியாயமான சம்பந்தம் என்ன இருக்க முடியும்? இது எங்ஙன மாயினும், அவ்வாண்டிலிருந்து குடும்பத்திற்குக் கஷ்டகாலம் நேரிட்ட தென்பது உண்மை. அதுமுதல் இராமானுஜலு நாயக்கர் தஸ்தாவேஜுக் கட்டுங் கையுமாய் வக்கீல்மார்களின் வீட்டு வாயிலில் நிற்கும்படி யாயிற்று. சிறிது சிறிதாக நிலங்களும், மனைக் கட்டுகளும், தோட்டங் களும் விற்கப்பட்டு வந்தன. கடைசியில் அவர் காலஞ் சென்றபோது குடும்பச் சொத்தில் இரண்டுவேலி நன்செய் நிலமும், ஒரு சிறுவீடுமே மிகுதியிருந்தன.

இராமானுஜலு நாயக்கர் மரணத் தறுவாயில் தம் மூத்த புதல்வனை அருகிலழைத்துக் கூறியதாவது:- “கோவிந்தா! தம்பி தீன தயாளுவை உன் கையில் ஒப்படைத்துப் போகிறேன். அவனுக்கு துரோகம் செய்துவிடாதே. எப்பாடு பட்டேனும் அவனுடைய படிப்பை பூர்த்தி செய்வித்துப் பாக்கியிருக்கும் சொத்தில் சரிபாதியை அவனுக்கு கொடுத்து விடு.”

கோவிந்தசாமி நாயக்கருக்கு அப்போது இருபது வயதாகியிருந்தது. அவர் தாயார் அதற்குச் சில வருஷங்களுக்கு முன்பே இறைவன் பதம் அடைந்துவிட்டார். எனவே, இப்போது அவரும் அவர் தம்பியும் தமியரானார்கள். எட்டிய உறவினளாகிய ஒரு கிழவி, வீட்டில் சமையல் செய்து போட்டுக் கொண்டிருந்தாள்.

தீனதயாளு அப்போது கும்பகோணத்தில் ஐந்தாவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்தான். இராமானுஜலு நாயக்கர் இராமனுஜலு நாயக்கர் உயிர் வாழ்ந்த காலத்தில் ஒருமுறை ஏதோ விஷேசத்தின் போது அவருடைய தூர பந்துவாகிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவ்வூர் ஜமீன்தார் அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்பு கைகட்டி, வாய் புதைத்துப் பணிவுடன் நடந்து கொண்டதை நாயக்கர் கவனித்தார். அது முதல் தமது இளைய புதல்வனுக்கு ஆங்கிலக் கல்வியளிக்க வேண்டுமென்னும் ஆவல் அவரைப் பலமாகப் பற்றிக் கொண்டது. எனவே, எத்தனையோ தொல்லைகளுக் கிடையில் தீனதயாளுவை மட்டும் கும்பகோணத்துக்கு அனுப்பிப் படிக்க வைத்து வந்தார். தமது உயிர் போகும் தறுவாயிலும் அவர் இதை மறவாமல் தமது மூத்த புதல்வனிடம் சொல்லிவிட்டுப் போனார்.

கோவிந்தசாமி நாயக்கர் தம் தந்தை மரணத் தறுவாயில் இட்ட கட்டளையைச் சிரமேற் கொண்டொழுகத் தீர்மானித்தார். ஏற்கனவே அவர் தம்பியிடம் அளவிறந்த பிரியமுடையவர். மேலும் அவன் படித்து முன்னுக்கு வந்து குடும்பத்துக்கே சிறப்பளிக்கப் போகிறா னென்னும் ஆசை அவருக்கு மிகுந்தது. எனவே, எப்போதும் போல் தம்பிக்குத் தவறாது பணம் அனுப்பி வந்தார். ஆயினும் அவனுடைய நடை உடை பாவனைகள் நாளுக்கு நாள் மாறி வந்த விதம் அவருக்கு பெரிதும் மனத்துயர் தந்தது. தீனதயாளு கும்பகோணத்திற்குப் படிக்க சென்ற பின்னர், முதல் முறை கிராமத்திற்குத் திரும்பி வந்தபோதேஅவன் தோற்றம் மாறிவிட்டது. வலைப் பனியன்;

அதற்கு மேல் மெல்லிய கிளாஸ்கோமல் *ஆபாரம்: தங்க மெருகிட்ட பொத்தான்கள்; வண்ணான் மடிப்பு நலுங்காத அங்கவஸ்திரம்: அரையில் ஒற்றைச் சுற்றில் 703-ம் நம்பர் மல். இவ்வாறு உடை தரித்து, தலையில் தைலம் தடவி வாரி முடிந்து கொண்டு, நெற்றியில் இருக்கிறதோ இல்லையோ என்று சந்தேகப்படும்படி கடுகளவு சாந்துப் பொட்டு இட்டிருந்தான். தந்தையின் மரணத்திற்குப் பின்னர் அவன் இரண்டாம் முறை ஊருக்கு வந்தபோது தோற்றம் மீண்டும் மாறிவிட்டது. இம்முறை அவன் தலைமயிரை வெட்டி விட்டு வகிடு பிளந்து வாரிக் கொண்டிருந்தான். கண்ணாடியும், சீப்பும், வாஸ்லைன் மெழுகும் இணைபிரியாத தோழர் களாகியிருந்தன.

ஆபாரமும் அங்க வஸ்திரமும், உட்சட்டை, மேற்சட்டை, கழுத்து பட்டைச் சுருக்கு ஆகியவைகளுக்கு இடங்கொடுத்துச் சென்றன. அதற்கடுத்த முறை அவன் ஊருக்கு வந்தபோது முலாம் பூசிய விளிம்பு கட்டிய மூக்குக் கண்ணாடி முகத்தை அலங்கரித்தது.

பட்டிக்காட்டு ஆளான கோவிந்தசாமி நாயக்கருக்கு இவை யெல்லாம் சிறிதும் பிடிக்கவில்லை. குடும்ப நிலைமையையும், தம்முடைய கஷ்டங்களையும் கொஞ்சமும் கவனியாமல் தம்பி இவ்வாறு படாடோபச் செலவுகள் செய்வது குறித்து அவருக்குச் கொஞ்சம் வருத்தம் இருந்தது. ஆனால் இதை அவர் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அவனைச் சிறிதும் மனம் நோகச் செய்யக் கூடாதென்று அவர் எண்ணினார். மனதில் கவலை ஏற்பட்டுவிட்டால் படிப்பிற்குத் தடை வந்துவிடுமென்றும் அவர் அஞ்சினார். எனவே, கேட்ட போதெல்லாம். சுணங்காமல் பணம் அனுப்பி வந்தார்.

ஆயினும், அவருடைய அன்பினாலும் ஆதரவினாலும் எதிர்பார்த்த பலன் விளையவில்லை. தீனதயாளு “ஸ்கூல் பைனல்” பரீக்ஷையில் தவறித்தான் போனான். நாயக்கர் அடுத்த ஆண்டுக்கும் பணம் அனுப் பினார். அந்த வருஷமும் அவன் தேறவில்லை. அதற்கு அடுத்த ஆண்டும் இதே கதியாயிற்று.

இனிமேல் என்ன செய்வதென்று நாயக்கர் கவலையடைந்தார். சென்ற ஐந்து வருஷங்களாக அவனுக்கு அனுப்பிய தொகை சுமார் ரூ. 2000 இருக்கும்; இடையில் இரண்டு மூன்று வருஷம் நிலம் நன்கு விளையாமையால் ஆயிரம் ரூபாய் வரையில் கடன் வாங்கி அனுப்ப வேண்டியிருந்தது. வட்டியுடன் சேர்ந்து ஏறக்குறையக் கடன் ரூ. 1500 ஆகிவிட்டது. ஒருநாள் அவர் அவனை அழைத்துக் குடும்ப நிலைமையை எடுத்துக்கூறி, இனி மேலும் படிப்பிற்காக பணம் செலவழிப்பது உசிதமாகத் தோன்றவில்லையென்றும், அவன் ஏதேனும் உத்தியோகத்தில் அமர்ந்து பொருள்தேடத் தொடங்குவதுதான் நலமென்றும் சொன்னார். அதற்கு அவன் கூறிய பதில், பாவம்!
அவரைத் திடுக்கிடச் செய்துவிட்டது. “சரி சரி, இதை நான் எதிர்பார்க் காமலில்லை. என்னுடைய பாகத்தைப் பிரித்து விடு” என்றான் தீனதயாளு.

இதனால் நாயக்கர் அடைந்த மனத்துயரத்தை நம்மால் விவரிக்க முடியாது. வாசகர்கள் அதை உய்த்துணர்தலும் கூட அசாத்தியமென்றே கருதுகிறோம். ஒருவன் தன் உடன்பிறந்தவனைக் கண்ணினும் அருமையானவனாகக் கருதி, அந்தரங்கபூர்வமாய் அவனிடம் அன்பு செலுத்தி அல்லும் பகலும் அவனுடைய முன்னேற்றத்தையும், நல்வாழ்வையும் பற்றியே சிந்தித்து வருங்கால், அச் சகோதரன் அவ்வன்புக்குச் சிறிதேனும் பாத்திரமற்றவனாய், நன்றி கெட்டவனாய் நடந்துகொள்வானாயின், அதனாலேற்படும் துன்பம் எத்தகையதா யிருக்குமென்று அதை அனுபவித்தவர்களே உரைக்கட்டும். கோவிந்த சாமி நாயக்கர் தம்பிக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஒன்றும் பயனில்லை. அவன் ஒரே பிடிவாதமாய்ப் பாகம் பிரித்து விடவேண்டு மென்றான். இதற்காக ஒரு நல்ல சந்தர்ப்பத்தை அவன் எதிர்பார்த்திருந்தது போல் காணப்பட்டது. நாயக்கர் யோசனை செய்து பார்த்தார். பிரித்துக் கொடுத்துவிட்டால் அவனுடைய பாகத்தை கூடிய சீக்கிரத்தில் “சூறாவளி” விட்டு விடுவான் என்பதில் சந்தேக மில்லை. ஆனால் தம்முடைய பாகத்தையாவது மீத்து விடலாம், எப்படியேனும் கஷ்டப்பட்டுச் சில வருஷங்களில் கடனை அடைத்து விடலாம். அவன் சொத்தைத் தொலைத்து விட்டுப் பின்னால் திண்டாடும் போது தம்மிடம்தான் வரும்படி நேரும்.

அப்போது அவனுக்கும் உதவிசெய்யலாம். இப்போது பாகம் பிரித்துப் கொடுக்காம லிருந்தாலோ நாளுக்கு நாள் கடன் விஷயம் போலேறிச் சொத்து முழுவதும் அடியோடு போகும். இவ்வாறு யோசனைசெய்து நாயக்கர் மிகுந்த மன வருத்தத்துடனே பாகம் பிரித்துவிடச் சம்மதித்தார். கடன் முழுவதையும் தம் பங்கிற்கு வைத்துக் கொண்டு நிலத்தைச் சமபாகமாகப் பிரித்துக் கொடுத்தார்.

ஊரிலுள்ளவர்கள் நாயக்கரைச் “சுத்த அசடு” என்று திட்டினார்கள். ஆனால் அவர் தமது தந்தையின் கட்டளையை நிறைவேற் றியதாகவும், தம் சகோதரனுக்குத் தாம் செலுத்தவேண்டிய கடமையைச் செலுத்தியதாகவும் எண்ணித் திருப்தி அடைந்தார். ஆனால் பாகப் பத்திரம் முடிந்து ஒரு வாரத்திற்குள் தீனதயாளு 5000 ரூபாய் பெறக்கூடிய நிலத்தை 3500 ரூபாய்க்கு விற்றுப் பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு போனதை யறிந்ததும் அவருக்கு அளவில்லாத் துயரம் உண்டாயிற்று. அதை ஒருவாறு அவர் எதிர்பார்த்தவரேயாயினும், இவ்வளவு விரைவில் இப்பேரிடி விழுமென்று நினைக்க வில்லை. தலைமுறையாக வந்த குடும்ப நிலம் பிறர் வசப்பட்டதை எண்ணி எண்ணி உருகினார். அதன் விலை மதிப்பைக்கூட அவர் பெரிதாகக் கருதவில்லை. இளம் பிராயத்திலிருந்து “என் நிலம், என் நிலம்” என்று எண்ணி அதன் மேல் அவருக்கு அடங்காப் பற்று ஏற்பட்டிருந்தது. மண்ணாசையின் வலிமைதான் என்னே? நிலத்தின் மீதுள்ள ஆசையினாலும், ஆரம்பத்தில் சொற்ப நிலத்தை விற்க விருப்பமில்லாமல், கடைசியில் கடன் தலைக்கேறி அடியோடு முழுகிப் போவார் பலரை நாம் பார்க்கிறோமல்லவா?

அவ்வூரில் கோவிந்தசாமி நாயக்கரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கன்னிகையொருத்தி இருந்தாள். தமிழ்நாட்டிலே, மாப்பிள் ளைகள் விலைக்கு வாங்கப்படும் இந்தக் காலத்திலே காதலைப் பற்றிச் சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள். “காதலாவது? உருளைக் கிழங்காவது? ஓய்! என்று சந்திரிகையின் கதையில் வீரசேலிங்கம் பந்துலு கேட்பதைப் போல் நமது வாசகர்களிலும் பலர் கேட்டு நகை யாடுதல் கூடும். ஆயினும் இவ்வரலாற்றை எழுதத் தொடங்கிய நாம் உள்ளது உள்ளபடி, நடந்தது நடந்தபடி, சொல்லியாக வேண்டுமல்லவா? ஆம்; கோவிந்தசாமி நாயக்கரை நீங்கள் வேண்டுமானால் ஓர் அபூர்வ ஜந்துவாகக் கருதிக் கொள்ளுங்கள். அவர் அவ்வூரிலிருந்த ஒரு பெண்ணைக் காதலித்தார் என்பது மட்டும் உண்மை. அப்பெண்ணின் பெயர் பாக்கியம். அவளும் அவள் அன்னையும் தெருக்கோடியில் ஒரு தனி வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுக்கு வேறு உற்றார் உறவினர் இல்லை. அவர்களுக்குச் சொந்தமான ஒன்றரைக் காணி நிலத்தை நாயக்கர்தான் பயிர் செய்து வந்தார். இந்த நிலத்தில் வரும் நெல்லை வைத்துக்கொண்டும் ஓர் எருமை மாட்டி லிருந்து கிடைத்த வருமானத்தைக் கொண்டும் அவர்கள் வாழ்க்கை நடத்தி வந்தனர்.

வாழ்க்கையின் மற்றத் துறைகளில் துர்ப்பாக்கியராயிருந்த கோவிந்தசாமி நாயக்கருக்கு பாக்கியத்தின் காதல் என்னும் பெரும் பாக்கியம் மட்டும் கிடைத்திருந்தது. அவள் இளங்குழவியாய்த் தவழ்ந்து விளையாடிய காலத்திலிருந்து அவளிடம் அவர் நேசம் பூண்டிருந்தார். இப்போது அந்நேசம் முதிர்ந்து காதலாகக் கனிந்திருந்தது. தன் அருமை மகளின் கலியாணத்தைக் குறித்துச் சௌந்திரத் தம்மாள் கவலை கொண்டிருந்ததில் ஆச்சரியமில்லையல்லவா?

அவள் ஒரு நாள் நாயக்கரைக் கூப்பிட்டு, “தம்பி, பாக்கியத்துக்கும் எனக்கும் உற்றார் உறவினர் யாருமில்லை. உன்னைத் தவிர உதவி செய்யக்கூட வேறு மனிதர் இல்லை. நானோ பெண் பேதை. என்ன செய்ய முடியும்? பாக்கியத்துக்குத் தக்க கணவனைத் தேடிக் கலியாணம் செய்து வைப்பது உன் பொறுப்பு” என்றாள்.

அவளை இவ்விஷயமாகக் கேட்க வேண்டுமென்று நாயக்கரும் சில காலமாக யோசனை செய்துக் கொண்டிருந்தார். எனவே, அவர் “அம்மா! என் நிலைமையும் அப்படித்தான். எனக்குத்தான் வேறு யாரிருக்கிறார்கள்? பாக்கியந்தான் எனக்குத் துணையாயிருப்பாள் என்று நம்பி யிருக்கிறேன். அவளும் இல்லையானால் வாழ்க்கையில் எனக்கு வேறு பற்றே கிடையாது. எனக்கு இருப்பது ஒரு வேலி நிலந்தான் இதற்குக் கடன் இரண்டாயிரம் ரூபா இருக்கிறது.
தங்கள் மகளையும் சொத்தையும் கட்டிக்கொள்வதற்குப் பணக்காரர் பலர் வரக்கூடும்…” என்பதற்குள் சௌந்திரம்மாள் குறுக்கிட்டு “நன்றாயிருக்கிறது, தம்பி! உன்னை விட எனக்கு வேறு யார் உயர்த்தி? எத்தனை பணக்காரனா யிருந்தால் என்ன? உன்னைப் போல் யாரும் என் பாக்கியத்தை வைத்துக் கொள்ள மாட்டார்கள். என் மகள் சந்தோஷமாயிருப்பது தான் எனக்குப் பெரிது. இனிமேல் எனக்குக் கவலை கிடையாது”என்றாள்.

நாயக்கர் ஆனந்த வெள்ளத்தில் முழுகினார். உடனே அவர் பாக்கியத்தைத் தேடிப் பிடித்து அவளிடம் மேற்படி சம்பாஷணையின் விவரத்தைத் தெரிவித்தார். காதலர்களிருவரும் அப்போது அளவளாவிப் பேசிக்கொண்டதையெல்லாம், இங்கே பகிரங்கப்படுத்துதல் நன்றாயிராதல்லவா! மேலும் அவை மற்றவர்களுக்கு ஒருக்கால் நகைப்பை யளிக்கவுங் கூடும். எனவே, பேச்சின் முடிவை மட்டும் இங்கே குறிப்பிட்டு மேற்செல்கிறோம். கடனை வைத்துக் கொண்டு கலியாணம் செய்துகொள்வது கூடாதென்றும், இரண்டு அல்லது மூன்று வருஷங்களுக்குள் எப்படியேனும் கடனைத் தீர்த்துவிட்டுப் பின்னர் மணம் புரிந்து கொள்வதென்றும் அவர்கள் கலந்துபேசித் தீர்மானித்தார்கள். பாக்கியத்தின் தாயாரும் இதை அங்கீகரித்தாள்.

நாயக்கர் அடுத்த மூன்றாண்டு காலம் அளவில்லாத ஊக்கத்துடன் பணம் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதிக உடல் உழைப்பினால் அவர் சோர்வு கொள்ளும் போதெல்லாம் பாக்கியத்தின் காதலும், அவளுடைய இன்பத் தேன் மொழிகளும் உயிரூறும் அமுதமாக அவருக்கு உற்சாகம் ஊட்டி வந்தன. ஒரு வேலி நிலம் மட்டும் உள்ள ஒரு குடித்தனக்காரன் மூன்று வருஷத்தில் 1500ரூபாய்க்கு வட்டி கொடுத்து, முதலையும் ஈடு செய்வதென்றால் இலேசான காரியமா? இத்தகைய செயற்கருஞ் செயலை கோவிந்தசாமி நாயக்கர் செய்து முடித்தார்.

“காற்றிலேறி அவ்விண்ணையுஞ் சாடுவோம் காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே”
என்பது வரகவியின் வாக்கு அல்லவா? மூன்றாம் ஆண்டு அறுவடை ஆகி, நெல் விற்றதும் நாயக்கர் அதுவரை சில்லரையாக வட்டிக்கு கொடுத்திருந்த தொகைகளை வாங்கிச் சேர்த்தார். நாளதுவரை முதலும் வட்டியும் சேர்த்து சீகாழி வட்டிக்கடைச் செட்டியாருக்கு ரூ. 2040 அவர் தர வேண்டியிருந்தது. வழிச் செலவுக்கு உள்படச் சரியாக ரூ. 2041 அவர் பெட்டியில் வைத்துப் பூட்டினார். மறுநாள் அதிகாலையில் புறப்பட்டுச் சென்று கடனைத் தீர்த்துவிட்டு வரத் தீர்மானித்திருந்தார்.

எனவே, சாயங்காலம் பாக்கியத்தினிடம் சொல்லிக் கொண்டு வருவதற்காக வீட்டிற்குச் சென்றார். நாயக்கரும் பாக்கியமும் எத்தனை நேரந்தான் பேசட்டுமே! அவர்களுக்கு அலுப்பது மட்டும் கிடையாது. பேசுவதற்கு விஷயம் என்னதான் இருக்குமோ நாம் அறியோம். காதல் என்னும் இளநிலவு வீசும்போது மிக சாமான்ய வார்த்தைகளும் கலகலவெனப் பொலியும் வெண் முத்துக்களைப் போல் இன்ப ஒளி பெற்றுத் திகழுமன்றோ? அதிலும் இன்றைய தினம் கேட்க வேண்டியதில்லை. மூன்றாண்டு காலம் அவர்கள் நோற்ற நோன்பு முடியும் நாள் நெருங்கியிருந்தது. நாயக்கர் நாளை சென்று கடனடைத்துவிட்டு வந்ததும் கலியாணத்துக்கு நாள் வைக்க வேண்டும். இந்நிலைமையில் நாயக்கர் அன்றிரவு பத்து மணிக்குத் தான் வீடு திரும்பினாரென்றால் அதில் வியப்படைவதற் கிடமுண்டா?

அந்த நேரத்தில் தம் வீட்டு வாசற்றிண்ணையில் யாரோ உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் நாயக்கருக்கு நெஞ்சம் திடுக்கிட்டது. ஏன்? நாம் அறியோம். சற்று அருகில் வந்ததும், யாரோ கறுப்பு துரைபோல் காணப்பட்டது. ஆனால் இன்னும் கிட்ட நெருங் கியதும் துரைமார்களைப் போல் காலில் பூட்ஸ், காற்சட்டை மேற்சட்டை, தொப்பி முதலியவை அணிந்திருந்த அந்த மனிதன், தம்பி தீனதயாளுவே என்று தெரியவந்தது. இப்புதிய கோலம் நாயக்கருக்கு மிகுந்த அருவருப்பு அளித்ததாயினும் அவர் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனைக் கட்டித் தழுவி கண்ணீர் விட்டார். பின்னர் உள்ளே சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் இந்த மூன்று வருஷமாக அவன் எங்கே போனான். என்ன செய்தான் என்பதைக் குறித்து நாயக்கர் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் அவன் சரியான பதில் சொல்லவில்லை. ஏதேதோ கூறி மழுப்பினான். கடைசியில் அவன் “அண்ணா ஓர் உதவியை நாடி உன்னிடம் வந்தேன். இந்தச் சமயம் என்னை நீ கைவிட்டால் வேறு கதி கிடையாது” என்றான்.

ஏற்கெனவேயே நாயக்கர் நெஞ்சந் திடுக்கிட்டார் என்று கூறி னோமல்லவா? இப்போது அவருக்கு பயம் அதிகமாயிற்று. எனினும் அவருடைய அபார சகோதர வாத்ஸல்யம் என்னும் பெரு வெள்ளத்தின் முன்னால் எந்தத் தடைதான் எதிர் நிற்க முடியும்? “தம்பி, நிச்சயமாக என்னாலியன்றதையெல்லாம் செய்கிறேன். உனக்கு உதவி செய்யாவிடில் நான் எதற்காக இருப்பது?” என்று கூறினார்.

“அண்ணா! நீ என்னிடம் காட்டும் பேரன்புக்கு இந்தப் பிறவியில் எப்படி நான் கைமாறு செய்யப்போகிறேன்? முடியவே முடியாது. மகாபாவி நான். ஆதியிலிருந்து உனக்குத் துன்பம் கொடாத நாள் கிடையாது. ஆயினும் இந்த ஒருமுறை மட்டும் நீ உதவி செய்தால் அதன் பின்னர் உனக்கு ஒருநாளும் வருத்தமளிக்க மாட்டேன். மிக நெருக்கடியான நிலைமையிலிருக்கிறேன். எனக்கு வாரண்டு பிறந் திருக்கிறது. அவசரமாக 2000 ரூபாய் வேண்டும். இன்றைய இரவு பணங் கிடைக்கா விட்டால் நாளையதினம் என்னைச் சிறைச்சாலையில் காண்பாய்” என்று தீனதயாளு சொன்னபோது, நாயக்கருக்கு வானமே இடிந்து தலையில் விழுந்துவிட்டதுபோலிருந்தது. பலவகை ஐயங்களும், பயமும், துன்பமும் அவர் உள்ளத்தைக் கலக்கின.

இதென்ன தந்திரமா? மோசமா? சோதனையா? ஒன்றுமே தெரியவில்லை. எவ்வளவோ சமாதானமாக அவர் சொல்லிப் பார்த்தார். அதில் பயனில்லாமற் போகவே கடைசியில் பிடிவாதமாய், “கொடுக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டார்.

அப்போது தீனதயாளு திடீரென்று தன் காற்சட்டைப் பையிலிருந்து ஒரு சுழல் துப்பாக்கியை எடுத்தான் கை விளக்கின் மங்கின ஒளியில் துப்பாக்கி பளபளவென்று மின்னிற்று. நாயக்கர் பிரமை கொண்டவர் போலானார். தீனதயாளு துப்பாக்கியைத் தன் மார்புக்கு நேராகப் பிடித்துக் கொண்டு, “அண்ணா! நீ எப்படியேனும் கடன் அடைத்துக் கலியாணம் செய்துகொண்டு சுகமாயிரு. கடனாளியாகச்சிறை சென்று அவமானமடைவதைவிட இதோ உன்னெதிரிலேயே உயிர் விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுத் துப்பாக்கியின் குதிரையில் விரலை வைத்தான்.
அதற்கு மேல் நாயக்கரால் எதிர்த்து நிற்க முடியவில்லை. அவர் உறுதி குலைந்தது. தீனதயாளுவின் கையைத் தாவிப் பிடித்துக்கொண்டு, “தம்பி! வேண்டாம் உன்னைவிட எனக்குப் பணம் பெரிதன்று. இந்தா சாவி!” என்று சொல்லிப் பெட்டிச் சாவியை அவன் கையில் கொடுத்தார். தீனதயாளு உடனே துப்பாக்கியைத் கீழே போட்டான்.
அண்ணன் கால்களைப் பிடித்துக்கொண்டு சிறிது நேரம் அழுதான். நாயக்கரும் மௌனமாய்க் கண்ணீர் பெருக்கினார். பின்னர் அவன் பெட்டியைத் திறந்து ரூ.2000 எண்ணி எடுத்துக் கொண்டு, போய் வருகிறேன் அண்ணா! பகவான் உன்னைக் காப்பார்” என்று சொல்லி விட்டு நடந்தான்.
ஃ ஃ ஃ
மறுநாள் காலையில் நாயக்கர் மிகவும் தயக்கத்துடன் பாக்கியத்தின் வீட்டுக்குச் சென்றார். விஷயமறிந்ததும் மகளும் தாயும் சற்றே திகைத்துத்தான் போனார்கள். எனினும், அவர்கள் நாயக்கரை கடிந்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. பாக்கியத்தினுடைய காதற் பெருமையை அன்றுதான் நாயக்கர் முற்று முணர்ந்தார். பலவிதமாக அவருக்கு அவள் தேறுதல் கூறினாள். “நீங்களும் நானும் இருக்கையில் நமக்கு வேறு என்ன குறை? நிலம், வீடு, வாசல், பணம் எது வேண்டுமானாலும் போகட்டும்” என்று பாக்கியம் கூறியபோதும் நாயக்கர் ஏறக்குறைய தமது துயரமனைத்தையும் மறந்துவிட்டார் என்றே சொல்லலாம். கலியாணத்தைப் பற்றிய வரையில் இனிமேலும் காத்திருக்க முடியாது என்று இருவரும் சேர்ந்து தீர்மானித்தார்கள். “இன்பமோ, துன்பமோ, செல்வமோ, வறுமையோ இனி நாமிருவரும் சேர்ந்தே அநுபவிப்போம்” என்றாள் பாக்கியம்,

அவள் தாயாரும் இதற்கு ஆட்சேபம் எதுவும் கூறவில்லை. ஆகவே, முன்னம் உத்தேசித்திருந்தபடியே அவர்களுக்கு அடுத்த மாதத்தில் கலியாணம் நடந்தது. ஒரு விஷயத்தில் மட்டும் சௌந்திரத்தம்மாள் ஒரே பிடிவாதமாயிருந்தாள். “ஒண்ணோ கண்ணோ வென்று எனக்கு ஒரே ஒரு குழந்தையிருக்கிறது. அதற்கு நன்றாய் நிறக்கும்படி கலியாணம் செய்து என் கண்ணால் பார்க்க வேண்டாமா? இல்லாவிட்டால் என் மனம் திருப்தியே யடையாது” என்று அந்த அம்மாள் கூறினாள். அவளுக்கு இந்தக் குறையிருக்கக் கூடாதென்றே நாயக்கரும் கருதினார். ஆனால், எவ்வளவோ இழுத்துப் பிடித்துச் செலவு செய்தும் கலியாணச் செலவு ரூபாய் 500 ஆயிற்று. அடுத்த வருஷம் நிலம் நன்றாய் விளையவில்லை. ஆகவே, எல்லாம் சேர்ந்து கடன் ரூபாய் மூவாயிரத்துக்குப் போய்விட்டது. நாயக்கரும் மறுபடியும் சம்பாதித்துக் கடன் அடைக்கலாம் என்னும் நம்பிக்கையும் குறைந்தது. எல்லா வற்றையும் நன்கு யோசித்து முக்கால் வேலி நிலத்தை ஒருவரிடம் அடமானம் வைத்து ரூபாய் 3000 வாங்கிக் கடனைத் தீர்த்தார்.
வட்டிக்கு பதிலாக நிலத்தைப் பணம் கொடுத்தவரே அநுபவித்து வருவதென்று ஏற்பாடாயிற்று!
அன்றுமுதல், பாக்கியிருந்த சொற்ப நிலத்தையும் பாக்கியத்தின் நிலத்தையும் தானே உழைத்துப் பயிரிட்டும் ஒழிந்த காலத்தில் சத்தத்திற்கு *வண்டி ஓட்டியும் நாயக்கர் ஜீவனம் செய்யலானார். விரைவிலேயே குழந்தை குட்டிகளும் ஆண்டவன் அருளினான். ஆண் மக்கள் இருவரும், பெண் குழந்தைகள் இரண்டும் பிறந்தனர்.
ஓடி ஓடிச் சம்பாதித்தாலும் குடும்ப வாழ்க்கை நடத்துவதே பிரயாசையாயிருந்தது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு மோட்டார் வண்டிகள் பிரபலமடைந்தபடியால் சத்தவண்டி ஓட்டுவதிலும் வருமானம் குறைந்தது. இந்நிலமையில் கடன் அடைக்கப் பணம் சேர்ப்பதெப்படி? பதினோரு ஆண்டுகள் கழிந்துவிட்டன. கடனைச் செலுத்தி நிலத்தை மீட்டுக் கொள்ள இன்னும் ஒரு வருஷ காலமே பாக்கியிருந்தது. அதற்குள் மூவாயிரம் ரூபாய் எங்கிருந்து கிடைக்கப்போகிறது, என்று எண்ணி நாயக்கர் பெருமூச்செறிந்தார். நிலம் திரும்பத் தன் கைக்கு வரும் என்னும் ஆசையை அவர் அடியோடு கைவிட்டு விட்டார்.
ஃ ஃ ஃ
ஒருநாள் மாலை நாயக்கர் வயல்வெளிக்குச் சென்றிருந்தார். சௌந்திரத்தம்மாள் இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு எங்கேயோ அண்டை வீட்டுக்குப் போயிருந்தாள். வீட்டில் பாக்கியமும் கடைசிக் குழந்தையும் மட்டும் இருந்தார்கள் அப்போது மூத்த மகனாகிய சாரங்கன் பள்ளிக்கூடத்திலிருந்து பரபரப்புடன் திரும்பி வந்தான். ஆறு உடைப்பு எடுத்துக் கொண்டதாகச் சொல்லு கிறார்கள் என்று அவன் கூறினான். ஊருக்குச் சமீபத்திருந்த நதியில் பலமான வெள்ளம் போய்க் கொண்டிருந்த விவரம் ஏற்கனவே பாக்கி யத்துக்குத் தெரியுமாதலால் அவள் பெரிதும் திகில் கொண்டாள்.

எனவே வயலுக்கு ஓடிப்போய் ஐயாவை அழைத்துக் கொண்டு வரும்படி அவனை அனுப்பினாள். சற்று நேரத்திற்கெல்லாம் வாயிலில் மோட்டார் வண்டியின் கொம்பு* ஊதும் சத்தம் கேட்டது. இதற்குமுன், சட்டசபைத் தேர்தல் சம்பந்தமாக ஒரே ஒருமுறைதான் அந்த ஊருக்கு மோட்டார் வண்டி வந்திருக்கிறது. எனவே, பாக்கியம் சிறிது வியப்புடன் வேடிக்கை பார்க்க வாசலுக்கு வந்தாள். அது மோட்டார் வண்டி யன்று; மோட்டார் சைக்கிள். வண்டி பாக்கியத்தின் வீட்டு வாயிலிலேயே வந்து நின்றதும் அவளுடைய ஆச்சரியம் அதிகமாயிற்று. துரையைப்போன்று தொப்பியும் உடுப்பும் தரித்த ஒருவன் வண்டியிலிருந்து வீட்டைநோக்கி வந்த போது பாக்கியம் நடுங்கியே போனாள்.“ என்ன அண்ணி, சௌக்கியமா? அண்ணன் வீட்டில் இல்லையா?” என்று வந்தவன் கேட்டான். அப்போது பாக்கி யத்துக்குப் பயம் நீங்கிற்று. பழைய நினைவுகள் வந்தன. வந்தவர்
தன் மைத்துனர். தீனதயாளுவே என அறிந்து கொண்டாள். முன்னர் இத்தகைய உடுப்புடன் வந்துதான், தன் கணவன் கடன் கொடுக்க வைத்திருந்த பணத்தை அவர் வாங்கிக் கொண்டு போனார் என்று கேள்விப்பட்டிருந்ததும் நினைவு வந்தது.

“வாருங்கள்! ஐயா வெளியில் போயிருக்கிறார். இப்போது வந்துவிடுவார்” என்று கூறிப் பாக்கியம் அவனை உள்ளே அழைத்துச் சென்றாள். தீனதயாளு முதலில் குழந்தைகளைப் பற்றியும், பின்னர் குடும்ப நிலைமையைப் பற்றியும் விசாரித்தான். பாக்கியத்துக்கு மனதிற்குள் பெரிதும் எரிச்சலாயிருந்தது. இந்தப் பாவியினால் தான் தன் குடும்பம் இப்போது இவ்வளவு வறுமையில் ஆழ்ந்திருக்கிறதென்று அவள் எண்ணினாள். ஆயினும் கேள்விகளுக்குச் சாந்தமாகப் பதில் சொன்னாள். “ஏதோ கஷ்ட ஜீவனம் செய்து வருகிறோம்” என்று அவள் தெரிவித்தபோது தீனதயாளு சிரித்தான். “ஓ! எனக்கு அப்பொழுதே தெரியும்! அண்ணாவாவது, முன்னுக்கு வரவாவது? பெரும் பைத்தியம்! குண்டில்லாத ஓட்டைத் துப்பாக்கியைக் காட்டிச் சுட்டுக்கொள்ளப் போவதாகப் பயமுறுத்தினேன். உடனே பெட்டிச் சாவியை எடுத்துக் கையில் கொடுத்துவிட்டார். இத்தகைய பேதை இந்தக் காலத்திலே முன்னுக்கு வர முடியுமா?” என்று அவன் கூறினான். அப்போது அவன் செத்துப் போயிருக்கக் கூடாதா என்று பாக்கியத்துக்குத் தோன்றிற்று. இத்தகைய நன்றி கெட்ட தம்பிக்காகத் தம் வாழ்க்கை முழுவதையும் துன்பமயமாக்கிக் கொண்ட தன் கணவன் மீதும் அவளுக்குச் சிறிது கோபம் வந்தது.

பின்னர் தீனதயாளு, “சரி, எனக்கு நேரமாகிறது, இரவு பத்து மணிக்குள் கும்ப கோணத்திற்குப் போய் ஆக வேண்டும். லயன்கரையோடு போகலா மென்றிருக்கிறேன். அண்ணனை விசாரித்ததாகச் சொல்லு” என்று கூறி எழுந்தான். அருகிலிருந்த குழந்தையைப் பார்த்து, “என்ன தம்பி! விழிக்கிறாய்? உனக்குப் பிஸ்கோத்து வேண்டுமா?” என்று சொல்லிக்கொண்டே தன்னிடமிருந்த பிஸ்கோத்துப் பெட்டியை அதன் கையில் கொடுத்துவிட்டு வெளியேறினான்; மோட்டார் சைக்கிள் புறப்படும் சத்தமும் கேட்டது.

திடீரென்று பாக்கியத்துக்கு ஓர் எண்ணம் உதித்தது. ஆறு உடைப்பெடுத்திருக்கும் செய்தி அவருக்கு தெரிந்திருக்க முடியாது, தெரிந்திருந்தால் லயன் கரையோடு போவதாகச் சொல்ல மாட்டார்.
இதற்குள்ளாக நன்றாய் இருட்டிப் போயிருந்தது. மாயமாய்ப் பறக்கும் அந்த வண்டியில் அவர் லயன் கரையோடு சென்றால் வண்டியுடன் உடைப்பில் விழுந்து நிச்சயமாய் மாண்டு போவார்.

நமது கஷ்டங்களுக்கெல்லாம் காரணமான இந்தப் பாவி மாண்டு தான் போகட்டுமே, என்று ஒரு கண நேரம் எண்ணினாள். ஆனால் அடுத்த கணத்தில் தன் கணவன் நினைவு வந்தது. இது மட்டும் அவருக்குத் தெரிந்தால்- ? உடனே மின்னலைப் போன்ற வேகத்துடன் கொல்லைப்புறம் ஓடினாள். மோட்டார் சைக்கிள் வீதி வழியாக மேற்கே சென்று அங்கிருந்த சந்தில் திரும்பிக் கொல்லைப்புறத்தில் இருந்த சாலை வழியாக அங்கு வந்ததும், பாக்கியம் போனதும் சரியாக இருந்தன. அவள் ஓடி வந்ததைப் பார்த்ததும் வண்டி நிறுத்தப்பட்டது. ஒரு நிமிஷம் பாக்கியம் பிரமித்துப் போனாள். வண்டியின் இருந்தவர் வேறு மனிதர்போல் காணப்பட்டார். தொப்பி, உடுப்பு முதலியவைகளைக் காணோம். சாதாரண கதர் வேஷ்டியும், கதர் சட்டையும் அணிந்திருந்தார். ஆயினும் முகத்திலிருந்து தன் மைத்துனர்தான் என்று அவள் அடையாளம் தெரிந்துகொண்டாள்.

இந்த மாறுதலைக் குறித்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே “லயன் கரை வழி போகாதேயுங்கள். ஆறு உடைப்பெடுத்திருக்கிறது” என்று கூவினாள். அப்போது தீனதயாளுவின் சேஷ்டைகளை வேறு யாரேனும் பார்த்திருந்தால் நகைத்திருப்பார்கள். அவன் உதடுகளைக் குவித்துக் கொண்டு சற்றே “ஊ ஊ ஊ” என்று கூவினான். பின்னர், விழுந்து விழுந்து சிரித்தான். பிறகு மோட்டாரின் கொம்பை “பூம் பூம்” என்று ஊதிவிட்டு வண்டியைத் திருப்பிக் கொண்டு காற்றைப் போல் பறந்து மறைந்தான்.

ஒரு நன்றி மொழியோ, ஒரு பிரியமான வார்த்தையோ, கிடையாது. தாங்க முடியாத துக்கத்துடன், கண்களில் நீர் ததும்ப, பாக்கியம் உள்ளே சென்றாள். குழந்தையின் முகத்தைப் பார்த்தாவது ஆறுதல் பெறலாமென்றெண்ணி அவனை எடுக்கப் போனாள். ஓ! அப்போது அவள் கண்ட காட்சி அவளைப் பிரமிக்கச் செய்துவிட்டது. குழந்தை பிஸ்கோத்து பெட்டியைத் திறந்து கீழே கொட்டியிருந்தான். அவன் வாய் நிறைய பிஸ்கோத்து இருந்தது. கையில் ஒரு கட்டுக் காகிதம் வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாய் எடுத்து எறிந்து கொண்டிருந்தான். அக்காகிதங்கள் அவ்வளவும் நூறு ரூபா நோட்டுகள்!

சிறிது நேரங் கழித்து நாயக்கர் வந்தபோது கூட பாக்கியம் திக்பிரமை கொண்டவள் போலவே உட்கார்ந்திருந்தாள். நாயக்கர் கொஞ்சங் கொஞ்சமாக அவளிடமிருந்து விஷயங்களைத் தெரிந்து கொண்டார். நோட்டுகளை எண்ணிப் பார்த்ததில் சரியாக 2000 ரூபாய் இருந்தது. அவற்றுடன் ஒரு கடிதமும் இருந்தது. அந்தக் கடிதத்தின் உள்ளூரை வருமாறு:-

“தேவரீர் அண்ணா அவர்களுக்கு, அடியேன் தீனதயாளு பணிவுடன் எழுதிக் கொண்டது. தங்களுக்கும் அண்ணிக்கும் நான் செய்த தீங்கு மன்னிக்க வொண்ணாதது. ஆயினும் தங்கள் இருவரின் கருணைக் குணத்தை நன்கறிந்தவனாதலின் மன்னிப்புக் கேட்கத் துணிந்தேன். நான் பழைய தீனதயாளு அல்லவென்பதையும், முற்றும் புதிய மனிதனாகி விட்டேன் என்பதையும் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு வருஷங்களுக்கு முன்பு மகாத்மா காந்தியை ஒருமுறை தரிசனம் செய்து அவருடைய உபந்நியாஸத்தைக் கேட்டேன். அது முதல் அவருடைய போதனைகளில் பற்றுண்டாகி என் வாழ்க்கை முற்றும் மாறுதலடைந்து விட்டது. தங்களை நேரில் பார்க்க வெட்கமாயிருப்பதால் இக்கடிதம் கொடுத்து விட்டுச் செல்கிறேன். என் குற்றங்களையெல்லாம் மறந்து மன்னித்து விடுங்கள்.

– (ஆனந்த விகடன் , 17-9-1931, 17-10-1931)

You may also like
மகேந்திர ஜாலபுரம் – கல்கியின் சிறுகதைகள் – 9
கல் சொன்ன கதை – கல்கியின் சிறுகதைகள் – 8
பிச்சுவையர் பவுன் வாங்கியது – கல்கியின் சிறுகதைகள்- 6
அபலைகள் – கல்கியின் கதைகள் – 2

Leave a Reply