Home > கதை > சர்மாவின் புனர் விவாகம் – கல்கியின் சிறுகதைகள் – 5

சர்மாவின் புனர் விவாகம் – கல்கியின் சிறுகதைகள் – 5

அட்வகேட் கோபாலசாமியைச் சந்திப்பது என்றால் எனக்குப் எப்போதும் சந்தோஷம்தான். அவர் வரும்போதெல்லாம் வெறுங்கையுடன் வரமாட்டார். ஏதாவது ஒரு பெரிய சர்வதேசப் பிரச்சினையைத் தீர்த்து எடுத்துக் கொண்டுதான் வருவார். அவர் வெறும் அட்வகேட் மட்டுமல்ல;

மந்தைவெளி பார்லிமெண்டு சபையில் ஒரு பிரபல அங்கத் தினர். மலையில் விளைந்ததானாலும் உரலில் மசிந்துதான் ஆக வேண்டும் மென்பது போல எவ்வளவு பெரிய மகத்தான சர்வதேசப் பிரச்சினையாயிருந்தபோதிலும் சரி, அது மந்தைவெளி ‘ஓர்ல்ட்’ பார்லிமெண்டில் வந்து அடிபட்டுத்தான் ஆக வேண்டும்!
அப்படி அடிபட்டுத் தீர்ந்த விஷயத்தைத் தாமே வைத்துக் கொள்ளும் வழக்கம் அவரிடம் கிடையாது. யாரிடமாவது சொன்னால் தான் அவருக்குத் திருப்தி. அதிலும் நான் குறுக்கே பேசாமல் கேட்டுக் கொண்டிருப்பவனாதலால், என்னிடம் சொல்லுவதில் அவருக்குப்பரம சந்தோஷம்.

இன்று கோபாலசாமியைக் கண்டதும், “வாருங்கள், வாருங்கள்! யுத்தம் எப்படியிருக்கிறது? ஹிட்லருடைய இரகசிய ஆயுதம் எது வென்பதைக் கண்டுபிடித்தாகிவிட்டதா? மகாத்மா காந்தி கடைசியாக என்ன பிசகு செய்திருக்கிறார்? பல்கேரியாவுக்கு யாரை சர்வாதிகாரியாகப் போடுவதென்று முடிவு செய்துவிட்டீர்களா ? பிரஸிடெண்ட் ரூஸ்வெல்டுக்கு, குடியரசுச் சட்டத்தை போதிப்பதற்கு யாரைப் அனுப்புவதென்று தீர்மானித்திருக்கிறீர்கள்?…” என்று கேள்விகளை அடுக்கினேன்.

“அந்த அசந்துஷ்டியான விஷயமெல்லாம் என்னத்திற்கு? இன்றைக்கு ஏதாவது சந்தோஷமான விஷயமாகப் பேசுவோம். – கதைக்குக் கால் உண்டா ? சொல்லுங்கள்” என்றார் கோபாலசாமி.
“இல்லையென்றுதான் கேள்வி. ஆனால், காலில்லாமல் அது எப்படி நடக்கிறது என்பதுதான் தெரியவில்லை” என்றேன்.

“இருக்கட்டும்; காதல் இல்லாத கதை உண்டா? சொல்லுங்கள்” என்றார்.
“ராம ராம ராம!” என்றேன்.“அது ஏன் அவ்வளவு அங்கலாய்ப்பு?” என்று கேட்டார் கோபாலசாமி.
“காதல்- கதை- கல்யாணம் இதையெல்லாம் பற்றிப் படித்துப் படித்துத்தான் எல்லாருக்கும் அலுத்துப்போய் விட்டதே! உலகத்திலே வேறு விஷயமே கிடையாதா ? கொஞ்ச நாளைக்கு முன்பு ஸ்ரீமதி சாவித்திரியம்மாள் ரேடியாவிலே இதைப்பற்றிப் பேசினாரே, கேட்க வில்லையா?” என்றேன்.

“ஏன் சரியில்லை? அந்த அம்மாள் சொல்வது நிஜந்தானே? நம்முடைய வாழ்க்கையில் காதல் என்பது இல்லாமலிருக்கும்போது, கதைகளில் மட்டும் காதலைப் புகுத்துவதில் என்ன பிரயோஜனம்? அந்த அம்மாள் சொல்வதுபோல், உலகத்திலே பெண்ணாசையைத்
தவிர, மண்ணாசையும் பொன்னாசையும் இருக்கின்றனவல்லவா? இவைகளை விஷயமாகக் கொண்டு கதை ஏன் எழுதக்கூடாது?”
என்று கேட்டேன்.

கோபாலசாமி ஐயர் வெறும் பேச்சாளர் மட்டும் அல்ல; எழுத்தாளர் உலகிலும் பிரசித்தி யடைந்தவர். இங்கிலீஷிலும் தமிழிலும்
சிறு கதைகள் பல எழுதியிருக்கிறார்.

அவர் சொன்னதாவது:- “மண்ணாசையையும் பொன்னாசையையும் விஷயமாகக் கொண்டு கதை எழுதலாம்; ஆனால் ரொம்பப் பேர் ரஸிக்க மாட்டார்கள். நமது வாழ்க்கையில் காதல் கிடையாது என்பதும் தவறு. சுற்று முற்றும் பார்க்காமல் கிணற்றுத் தவளையாயிருப்பவர் கள்தான் அப்படிச் சொல்வார்கள். நம் சமூகத்தில், நூற்றுக்கொருவர் விஷயத்தில் தான் காதல் நிஜமா யிருக்கலாம்; ஆனால் பாக்கி 99 பேரும் அந்த ஒருவருடைய காதலைப் பற்றிப் பேசி சந்தோஷப் படுகிறார்கள்.

அதில் உள்ள ருசி அவர்களுக்கு வேறு எதிலும் இருப் பதில்லை. கோர்ட்டுகளில் மண்ணாசையையும் பொன்னாசையையும் பற்றிய கேஸுகள்தான் பெரும்பாலும் நடக்கின்றன. ஆனால், நாலு வக்கீல்கள் சேரும்போது இதைப் பற்றிப் பேசுகிறோமா? கிடையாது. முப்பது வருஷத்துக்கு முன்னால் ராவ்பகதூர் சேஷாத்ரி ஐயர் பால்யமாயிருந்தபோது, அவருக்கும் ஒரு பர்மா நாட்டுப் பெண்ணுக்கும் நடந்த காதல் விவரத்தை ஞாபகப் படுத்திக் கொண்டு பேசி சந்தோஷப் படுகிறோம்.- இருக்கட்டும்; சோமதேவ சர்மாவை உங்களுக்கு தெரியுமா?” என்று கோபாலசாமி திடீரென்று கேட்டார்.

“எந்த சோமதேவ சர்மா?” என்றேன். “பி.ஏ., எல்.டி. சோமதேவ சர்மாவைச் சொல்கிறேன். அவரை உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. நம்முடைய வாழ்க்கையில் காதல் கிடையாது என்று சொல்கிறவர்களுக்கு சோமதேவ சர்மா தான் சரியான பதில்” என்றார் கோபாலசாமி.
“அப்படியா சமாசாரம்?” என்று நான் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு, “விவரமாய்ச் சொல்லுங்கள்!” என்றேன்.

2

அட்வகேட் கோபாலசாமி சொல்லத் தொடங்கினார்:-
“மூன்று வருஷத்துக்கு முன்பு வரையில் சோமதேவ சர்மா என்னுடைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்தார். ஜார்ஜ் டவுனில் வராக மூர்த்தி செட்டியார் ஹைஸ்கூலில் அவர் வெகுகாலமாக வாத்தியார். பார்ப்பதற்கு ஜோராயிருப்பார். நல்ல சிகப்பு நிறம்; காதில் வயிரக் கடுக்கன் ஜொலிக்கும்; நெற்றியில் பிறைச் சந்திரன் போல் சந்தனம், அதற்கு நடுவில் சாந்துப் பொட்டு, அதற்கு மேலே குங்குமம் – இவ்வளவும். பூரி சங்கராச்சாரியார் பிரசங்கத்துக்குக்
கழுத்தில் ருத்ராட்சத்துடன் போவார்; பள்ளிக்கூடத்துக்குப் போகும் போது காலரும் நெக்டையும் கட்டிக்கொள்வார். காலையில் வீட்டில் பூஜை, விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் எல்லாம் நடக்கும்; சாயங்காலம் ஸீனிமாக் கொட்டகையில் பார்க்கலாம். இப்படி நவ நாகரிகத்துக்கு நவ நாகரிகம், வைதிகத்துக்கு வைதிகமாயிருப்பார். மொத்தத்தில் ரொம்ப நல்ல மனுஷர்; அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடம் சுமுகமாய்ப் பேசிப் பழகுவார். பள்ளிக் கூடத்திலோ அவருக்கு ரொம்ப நல்ல பெயர்.

இப்படிப்பட்டவருக்கு ஒரு துரதிர்ஷ்டம் இருந்தது. குடும்ப சுகம் இல்லை. அப்படியென்றால் தெரிகிறதா? பெண்டாட்டி பெரிய சிடு மூஞ்சி. புருஷனுக்கும் மனைவிக்கும் ஓயாத சண்டைதான். இவர் எவ்வளவுதான் அடங்கிப் போனாலும் பிரயோஜனமில்லை. காமாட்சி யம்மாளுடைய ஆக்ரோஷம் அதிகமாகும். சில சமயம் இவருக்குத் தம்மையறியாமல் கோபம் வந்துவிடும் தபதபவென்று போட்டு அடித்துவிடுவார். அந்த அம்மாள் ‘ஐயையோ! ஐயையோ!’ என்று அலறுவாள். ‘என்னாலே இந்த உயிரை வச்சிண்டிருக்க முடியாது.

இதோ கிணத்துலே விழுந்து பிராணனை விட்டுடறேன்’ என்று ஓடுவாள். பின்னோடு இந்த மனுஷர் ‘அடி காமாட்சி! வேண்டாண்டி! என் மானத்தை வாங்காதேடி!’ என்று கத்திக் கொண்டு ஓடுவார்.
அப்புறம், அரைமணி நேரம் சமாதானப்படுத்திய பிறகுதான் காமாட்சி அம்மாளின் கோபம் தீரும்.
இந்த நாடகம் அடிக்கடி நடந்து கொண்டிருக்கும். ‘ஐயோ! பாவம்! இந்த நல்ல மனுஷனுக்கு இப்படி வர வேண்டாம்’ என்று நான் பரிதாபப்படுவேன். அடுத்த வீட்டில் இப்படியெல்லாம் நடப்பதனால், நம்மாத்திலே இவளுக்குக் கூட ஒரு மாதிரி கர்வம் அதிகமாகிக் கொண்டு வந்தது. ‘இருங்கோ, இருங்கோ! நான் சாதுவாயிருக்கக் கொண்டுதானே இப்படி என்னை ஏய்க்கிறேள்? அடுத்தாத்துக் காமாட்சி யைப் போலே உங்களைப் படுத்திவைச்சா, அப்போது தெரியும்’ என்று இம்மாதிரி யெல்லாம் சொல்வாள்.

சோமதேவ சர்மா எங்கள் அடுத்த வீட்டுக்குக் குடிவந்து இரண்டு மூன்று வருஷம் ஆயிற்று. அவருடைய வீட்டுச் சண்டை எங்களுக்கு சர்வ சகஜமாய்ப் போய்விட்டது. இப்படிப்பட்ட சமயத்தில் ஒரு நாள் என்னுடைய வீட்டுக்காரி ஒரு பெரிய வெடிகுண்டைத் தூக்கிப் போட்டாள். ‘கேட்டீர்களா, சமாசாரம்! அடுத்தாத்துப் பிராமணனைப் பரம சாது என்று நினைச்சுண்டிருந்தோமே? காமாட்சிதான் அவரைப் படுத்தி வைக்கிறாள் என்று சொல்லிண்டிருந்தோமே? பிராமணன் அப்படி ஒன்றும் இலேசில்லையாம்! யாரோ ஒரு டீச்சர், தாலி அறுத்தவள் இருக்காளாம்; அவள் காலிலே விழுந்து கிடக்கானாமே இந்த பிராமணன்?” என்றாள்.

பாருங்கள்; இந்த மாதிரி சமாசார மெல்லாம் எப்படியோ முதலில் ஸ்திரீகளுக்குத்தான் தெரிகிறது. இத்தனைக்கும் நாம் வெளியிலே வாசலிலே போய் வருகிறோம்; ஸ்திரீகள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார்கள் ஆனால் ரேடியோவில் சமாசாரம் வருவது போல் அவர்களுக்கு எப்படியோ சமாசாரம் கிடைத்துவிடுகிறது.
‘அது என்ன கூத்து?’ என்றேன் நான்.

“கூத்தோ, டிராமாவோ, ஸினிமாவோ ? இந்த பிராமணனுக்கு இதுவேண்டாம். விபூதி, ருத்ராட்சம், ஜபதபம் – இந்த வேஷத்தில்யெல்லாம் குறைச்சலில்லை. சிவ சிவா! உலகமே கெட்டுப் போச்சு! ஒத்தரையும் நம்பறத்துக்கே இல்லை’ என்று சொல்லிவிட்டு என்னை ஏற இறங்கப் பார்த்தாள்.
‘சரியாப்போச்சு’ என்று சொல்லி நான் வேறு பேச்சு ஆரம்பித்தேன்.

ஆனால், மனதிலே மட்டும் சர்மாவைப் பற்றிய ஞாபகமே இருந்தது. அவர் இப்படி ஏதாவது அனுசிதமான வியாபாரம் வைத்துக் கொள்வாரென்று என்னால் நம்ப முடியவில்லை. நம்முடைய ஜனங்கள் சமாசாரமுந் தான் எனக்குத் தெரியுமே? இம்மாதிரி விஷயங்களைக் கற்பனை செய்வதிலும், வம்பு பேசுவதிலும் நமக்கு அசாத்திய ருசி யாயிற்றே! ஆகையால் முதலில் நான் நம்பவேயில்லை. ஆனால், நாளடைவில் காதில் விழுந்த செய்திகளிலிருந்து ஊர் வம்புக்கு ஆதாரம் உண்டு என்று தெரிந்தது. அவர் எந்த ஹை ஸ்கூலில் உபாத்தியாயரோ, அந்த ஸ்கூலையொட்டி ஒரு பெண் பாடசாலையும் நடந்தது. இந்தப் பாடசாலையில் உபாத்தியாயினி வேலை பார்த்த ஒரு பால்ய விதவை ஸ்தீரீ கிருஷ்ணப்ப முதலிதெருவில் குடியிருக்கிறாள் என்றும், அவளையும் சர்மாவையும் பற்றித்தான் இம்மாதிரி வதந்தி என்றும் தெரிய வந்தது.
எனக்கு உண்டான அதிசயத்துக்கு அளவேயில்லை. ஒரு நாளைக்கு சர்மாவிடம் நேரிலேயே கேட்டுவிட்டேன். ‘என்ன, சர்மா ! ஊரிலே கன்னா பின்னாவென்ற பேசுகிறார்களே, அதெல்லாம் வெறும் பொய்தானே ?’ என்றேன்.

சர்மாவினுடைய மனதில் அடைப்பட்டுக் கிடந்த ஆத்திரம் ‘குபுக்’ கென்று பொங்கிக் கொண்டு வந்தது. ‘ஸார், என்னைப் பற்றி என்ன வேணுமானாலும் சொல்லட்டும்; பாதகமில்லை. ஆனால் அந்தப் பெண்ணைப் பற்றி ஏதாவது அபவாதம் சொன்னால் சொன்னவர்கள் நாக்கு அழுகிப்போகும்’ என்றார்.

‘நம் ஊர்க்காரர்கள் சமாசாரம் தெரியாதா, சர்மா! யாரைப் பற்றி என்ன வம்பளக்கலாம் என்றுதான் காத்துக் கொண்டிருப்பார்களே? ஒன்றைப் பத்தாகச் சொல்வது வழக்கமாயிற்றே!’ என்றேன்.
கொஞ்சம் அநுதாபத்துடன் நான் பேசியதும், சர்மா தமது இருதயத்தில் குமுறிக் கொண்டிருந்த உணர்ச்சிகளையெல்லாம் கொட்டிவிட்டார். ஸ்ரீமதி ஸுலோசனாவைப் போல் புத்திசாலி, படித்தவள், மரியாதையும் தன்னடக்கமுள்ளவள், இன்னும் சகல உத்தம குணங்களும் வாய்ந்தவள் இந்த உலகத்தில் யாருமே இருந்ததில்லை, இப்போதும் இல்லை, இனி எப்போதுமே இருக்க முடியாது என்று அவருடைய வர்ணனையிலிருந்து ஊகிக்கும்படியிருந்தது. அவ்வளவு வர்ணித்தும் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை.

‘நான் ஏதோ அதிகமாய்ச் சொல்கிறது போல் தோன்றக்கூடும், மிஸ்டர் கோபாலசாமி! நீங்களே நேரில் பார்த்தால்தான் தெரியும். பாருங்கள், அந்தப் பெண் அநாதை, உற்றார் உறவினர் யாரும் கிடையாது. ஒரு பாட்டிக் கிழவிதான் வீட்டில். அந்த கிழவிக்கு இவள் செய்கிற பணிவிடையைப் பார்த்தால் கண்ணிலே ஜலம் வரும். பள்ளிக்கூடத்திலே வாத்தியார் வேலையும் பார்த்துக் கொண்டு, வீட்டு வேலையையும் கவனித்துக் கொண்டு- உத்தமி என்றால் அவள்தான் உத்தமி. நம் தேசத்திலே பால்விவாகம் என்று ஒன்று வைத்து, புனர் விவாகம் பண்ணிக்கொள்ளக்கூடாது என்றும் வைத்திருக்கின்றார்களே, அதைப்போல் அநியாயம் ஒன்றுமேயில்லை. அதிலே என்ன நியாயம் இருக்கிறது, நீங்கள்தான் சொல்லுங்களேன்?’ என்று
என்னுடன் யுத்தம் செய்யத் தாயாரானார் சர்மா.

ஆனால், நான் அவருடன் யுத்தம் செய்யத் தயாராயில்லை. அவருடைய கருத்தையொட்டியே பேசினேன். அவரிடம் எனக்கு உண்மையாகவே அநுதாபம் இருந்தது. வீட்டிலே அவர் படும்
பாடெல்லாம் எனக்கு நன்றாய்த் தெரியுமல்லவா? குடும்பத்திலே சந்தோஷம் இல்லாதபடியால்தான் இப்படி வெளியிலே சந்தோஷத்தைத் தேடத் தொடங்கிவிட்டார், பாவம், என்று எண்ணி இரக்கப்பட்டேன்.

என்னுடைய அநுதாபமான பேச்சு, சர்மாவுக்கு என்னிடமிருந்த அபிமானத்தைப் பன்மடங்கு ஆக்கிவிட்டது. ஸுலோசனா எவ்வளவு களங்கமற்றவள், ஊரார் பேச்சு எவ்வளவு அபவாதமானது என்று அடிக்கடி எனக்கு எடுத்துச் சொல்லி வந்தார். நேரில் அதை எனக்கு நிரூபித்து விடவும் தீர்மானித்து, என்னை ஒரு நாள் அவள் வீட்டுக்கு வரவேண்டுமென்று வற்புறுத்தினார். அவருடைய இலட்சியப் பெண் தெய்வம் எப்படித்தான் இருப்பாள் என்று பார்க்க எனக்கும் ஆவலாயிருந்த படியால், ஒரு நாள் நான் அவருடன் போனேன். ஸுலோசனாவிடம் அப்படிப்பட்ட அதிசயம் ஒன்றையும் நான் காணவில்லை.

‘விகட’ னில் எஸ்.வி.வி.* அடிக்கடி நவ நாகரிகப் பெண்களைப் பற்றி எழுதுகிறார் அல்லவா? அதைப் பார்த்துக் ‘காபி’ அடித்தவள்போல் இருந்தாள் ஸுலோசனா. ஏதோ களையான முகம் என்று கூடச் சொல் வதற்கில்லை. முகவாய்ப் பல் இரண்டு கொஞ்சம் நீட்டிக் கொண்டிருந்தது. பேசும்போது அடிக்கடி அந்தப் பற்களை மூடிக்கொள்ள முயன்று சங்கடப்பட்டாள். பேச்சிலும் நடை உடை பாவனைகளிலும் கொஞ்சங்கூடத் தன்னடக்கம் இல்லை. ஒன்றுந் தெரியாதவளாயிருந்தும் எல்லாந் தெரிந்தவள்போல் பேசினபடியால், ஒவ்வொரு நிமிஷமும் அவளுடைய அறியாமை வெளியாயிற்று, சர்மா அவளைப் பாடச் சொன்னபோதுதான், எல்லாவற்றிலும் பெரிய ஏமாற்றம் எனக்கு உண்டாயிற்று. பாட்டு மகா பயங்கரம்; குரல் சுருதியுடன் சேரவேயில்லை. ஒரே அபஸ்வரக் களஞ்சியமாயிருந்தது.

இதெல்லாம் எப்படியிருந்தா லென்ன? ஒரு விஷயம் மிகவும் தெளிவாய்த் தெரிந்தது. சர்மாவும் ஸுலோசனாவும் பரஸ்பரம் பிரேமை யாகிற சாகரத்தில் மூழ்கிக் கிடந்தார்கள். அவள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையையும் சர்மா ஐம்புலன்களினாலும் கேட்டு அநுபவித்து மகிழ்ந்தார்கள். அவள் எந்தப் பக்கம் திரும்புகிறாளோ, அந்தப் பக்கம் அவருடைய கண்களும் தாமே திரும்பும். ஸுலோசனாவினுடைய பிரேமை அவ்வளவு வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், நடை உடை பாவனைகளினாலும் அதைப்பற்றி சந்தேகிக்க இடமில்லாம லிருந்தது.

3

அன்று நான் வீடு திரும்பியபோது, விதியின் விசித்திர விளை யாட்டைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டே போனேன். அடாடா! இந்த சோமதேவ சர்மாவும் ஸுலோசனாவும் மட்டும் கல்யாணம் செய்து கொள்ளக்கூடுமானால் அவர்களுடைய இல்வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமாயிருக்கும்? உலக வாழ்க்கையில் ஏன் இப்படி விபரீதமான சேர்க்கைகள் எல்லாம் ஏற்படுகின்றன? சோமதேவ சர்மா ஏன் காமாட்சியைக் கட்டிக் கொண்டு அழவேண்டும்? ஸுலோசனா ஏன் இப்படித் தன் வாழ்நாளெல்லாம் தனிமையில் காலங்கழிக்க வேண்டும்? இவர்களைப் பற்றிய வீண் அபவாதங்கள் ஏன் ஊரில் பரவ வேண்டும்? கடவுள் ஏன் இவ்வளவு குரூர சித்தராயிருக்கிறார்? இப்படியெல்லாம் பொருந்தாத முடிச்சுகளை ஏன் போடுகிறார்?
அவற்றை அவிழ்க்க முடியாதபடி நிர்ப்பந்தங்களை ஏன் ஏற்படுத்துகிறார்?…

இவ்வாறெல்லாம் அன்று மட்டுமல்ல, பல தினங்கள் நான் சிந்தனை செய்து கடவுளையும் நமது சமூகக் கட்டுப்பாடுகளையும் நிந்தித்துக் கொண்டிருந்தேன்.ஆனால், கடவுள் உண்மையில் அவ்வளவு குரூர சித்தரல்ல வென்று சீக்கிரத்திலே எனக்குத் தெரிந்து போயிற்று. ஒருவேளை என்னுடைய நிந்தனைக்குத்தான் பயந்தாரோ, என்னமோ, மூன்று மாதத்துக்கெல்லாம் காமாட்சியம்மாள் பிரசவித்து இறந்துபோனாள்…”

இத்தனை நேரமும் ஸ்ரீகோபாலசாமியின் கதையைக் கேட்டு வந்தபோது, மரியாதைக்காக நான் அவ்வப்போது ஆச்சரியம் தெரிவித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் எனக்கு அவர் கதை
அவ்வளவு ஆச்சரியமளித்ததாகச் சொல்ல முடியாது. ஆனால் காமாட்சி யம்மாள் பிரசவித்து இறந்துபோனாள் என்ற செய்தி உண்மையிலேயே தூக்கிவாரிப் போட்டுவிட்டது.
“அடடா! அப்புறம் என்ன ஆயிற்று?” என்று கேட்டேன்.

“அப்புறம் என்ன ஆயிற்று? பகவானே பார்த்து சோமதேவ சர்மாவுக்கு விடுதலை அளித்துவிட்டார். சர்மா ஒருவேளை அந்த விடுதலையைப் பயன்படுத்திக் கொள்ள மாட்டாரோ – இப்போது நமது தேசத்துக்கு ஏற்பட்ட அருமையான சந்தர்ப்பத்தை நமது தலைவர்கள் உபயோகப்படுத்தாமல் பழக்கிவிட்டார்களே, அந்த மாதிரி பிசகு…..” “ஆரம்பித்து விட்டீர்களா? இத்தனை நேரமும் நமது தலைவர்கள் மண்டை உருளவில்லையே என்று நினைத்தேன்” என்றேன்.

கோபாலசாமி புன்னகை செய்துவிட்டுக் கூறினார்:- “அந்த மாதிரி “வரம் செய்து விடுவாரோ என்று எண்ணினேன். ஏனெனில், காமாட்சியம்மாள் இறந்தபோது அப்படி அவர் அழுது புலம்பினார்.
ஆனால், இந்த துக்கமெல்லாம் கொஞ்ச நாள்தான் இருந்தது. காமாட்சி போன மூன்றாவது மாதம் ஸுலோசனாவை அவர் கல்யாணம் செய்து கொண்டார். நாலு பேர் நாலு சொல்வார்களே என்று கொஞ்சமும் தயங்கவில்லை. சமூகக் கட்டுப்பாட்டுக்கும் பயப்படவில்லை. ஆரிய சமாஜ முறைப்படி மந்தரோக்தமாய்க் கல்யாணம் நடந்தது. சந்தேகத்துக்கு இடமின்றி சட்டரீதியான ரிஜிஸ்டர் விவாகமும் செய்து கொண்டார். ஆனால், அந்த பழைய வீட்டில் இருக்க மட்டும் அவருக்கு பிடிக்க வில்லை போலிருக்கிறது. வீட்டைக் காலி செய்துவிட்டு போய்
விட்டார். ஏறக்குறைய மூன்று வருஷம் ஆகிறது. நுங்கம்பாக்கத்துக்குக் குடி போகிறதாகச் சொன்னார். இப்போது எங்கே இருக்கிறாரோ, தெரியாது”என்ற முடித்தார் கோபாலசாமி.

“ஆமாம்: நுங்கம்பாக்கத்தில்தான் இன்னும் இருக்கிறார்கள்.
எங்கள் சித்தி வீடு அங்கே இருக்கிறதோ, இல்லையோ? அதற்குப்
பக்கத்து வீடுதான். நான் கூட அவரைப் பார்த்துப் பேசியிருக்கிறேன்” என்றேன்.
“என்ன? நிஜமாகவா ? அப்படியென்றால் ஸுலோசனாவையும் பார்த்திருப்பீர்களே? அவர்கள் எப்படி இருக்கிறார்கள், ஏதாவது தெரியுமா? ஒரே காதல் மயமாகத்தான் இருப்பார்கள், கேட்பானேன்?” என்றார் கோபாலசாமி.

“அது எனக்குத் தெரியாது. ஆனால், முந்தா நாள் என் சித்தி வீட்டுக்குப் போயிருந்தபோது, அடுத்த வீட்டில் ஒரே ரகளையாயிருந்தது. தபதப என்று அடிவிழும் சத்தம் கேட்டது. ஒரு பெண்
குரல், ‘என்னால் இனிமேல் ஒரு நிமிஷங்கூடப் பொறுத்துக் கொண் டிருக்க முடியாது; இதோ போய்க் கிணற்றில் விழுந்து பிராணனை விடுகிறேன்’ என்று அலறிற்று. சர்மா, ‘வேண்டாண்டி, அடி வேண் டாண்டி! என் மானத்தை வாங்காதேடி!’ என்று கூவிக் கொண்டே ஓடிய சத்தமும் கேட்டது. நான் பயந்து போனேன். அனால், இது ஒன்றும் அதிசயமில்லை. அடிக்கடி நடக்கிற விஷயந்தான். என்று என்சித்தி வீட்டில் சொன்னார்கள்” என்றேன்.

கோபாலசாமி, “ராம ராம ராம ராம ராமா !” என்று சொல்லிக் கொண்டே வெளியேறினார்.

– ஆனந்த விகடன் , 7-7-1940

You may also like
வாழ்வும் தாழ்வும் – கல்கியின் சிறுகதைகள் – 10
பிச்சுவையர் பவுன் வாங்கியது – கல்கியின் சிறுகதைகள்- 6
அபலைகள் – கல்கியின் கதைகள் – 2

Leave a Reply