Home > கதை > சிரிப்பும் கண்ணீரும் -கல்கியின் சிறுகதைகள் – 7

சிரிப்பும் கண்ணீரும் -கல்கியின் சிறுகதைகள் – 7

வர வர எனக்கு ஜாதகங்களிலும் கிரகங்களிலும் நம்பிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது. மனுஷ்யனுடைய வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்கள் ஏற்றத்தாழ்வுகள், வெற்றி தோல்விகள் இவற்றுக்கெல்லாம், அவனுடைய புத்திக்கெட்டாத சில காரியங்கள் இருக்கத்தான் வேண்டுமென்று தோன்றுகிறது. இல்லாமற்போனால், ஐரோப்பாவிலே சில பைத்தியக்காரர்கள் ஒரு யுத்தத்தைக் கிளப்ப, அதன் பயனாக இங்கே சென்னைப் பட்டணத்தில் சொற்ப ஜீவனம் செய்து கொண்டிருந்த எனக்கு வேலை போவானேன்? ஐரோப்பாவின் யுத்தத்தின் பயனாக நம் நாட்டில் தேசபக்த வீரர்களான காங்கிரஸ் மந்திரிகளுக்கு வேலை போயிற்று; என்னைப் போன்ற ஏழைக் குமாஸ்தாக்கள் சிலருக்கும் வேலைபோயிற்று.

மந்திரிகள் வேண்டுமென்று ராஜினாமா செய்தார்கள். நாங்களோ எங்கள் இஷ்டத்துக்கு விரோதமாகவே உத்தியோகத்தை இழந்தோம். பிரசித்திபெற்ற ஜெர்மன் கம்பெனி ஒன்றில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மாதம் 105 ரூபாய் சம்பளம். யுத்தம் ஆரம்பித்த அன்று காலை நாங்கள் ஆபீஸுக்கு போனதும், மானேஜர் எல்லாக் குமாஸ்தாக்களையும் சிப்பந்திகளையும் கூப்பிட்டார். தலைக்கு மூன்று மாதச் சம்பளத்தைக் கொடுத்து, “போய் விட்டு வாருங்கள். மறுபடியும் கடவுளின் சித்தமிருந்தால் சந்திப்போம்” என்றார். எங்களுக்கெல்
லாம் கண்ணில் ஜலம் தளும்பிற்று. அன்று சாயங்காலம் போலீஸ் அதிகாரிகள் வந்து கம்பெனியை இழுத்து மூடிவிட்டார்கள். ஜெர்மன் மானேஜரையும் பாதுகாப்பில் வைத்துவிட்டார்கள்.

யுத்தம், யுத்தம் என்று வெகு நாளாகவே பேச்சு நடந்து கொண் டிருந்தபடியால், இந்த மாதிரி நிஜமாகவே யுத்தம் வருமென்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்படி வந்தாலும், முதல் நாளே கம்பெனியை மூடி விடுவார்களென்று சொப்பனத்தில் கூட நினைக்க வில்லை. ஆகவே இது எங்களுக்கெல்லாம் எதிர்பாராமல் விழுந்த இடியாகத்தான் தோன்றிற்று.

நமது நாட்டில் ஏற்கெனவே வேலையில்லாமல் திண்டாடுகிறவர்கள் போதாதென்று நாங்கள் வேறு சேர்ந்துகொண்டோம். இவ்வளவு பேருக்கும் வேலை எங்கே கிடைக்கப் போகிறது? வேலை கிடைத்தால் தான், நாங்கள் ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் கிடைக்க போகிறதா? எங்களில் ஒருவர், பிரசித்தி பெற்ற ஒரு பிரிட்டிஷ் பாங்கியின் மானேஜரைப் போய் வேலைக்காகப் பார்த்தாராம். அந்த ஆங்கில துரைக்கு வெகு கோபம் வந்து விட்டதாம்.

“சத்துரு கம்பெனியில் ஊழியம் செய்த உமக்கு வேலை வேறுகேடா ? போம்! போம்!” என்றாராம். ஜெர்மனியும் பிரிட்டனும் இன்றைக்குத்தானே சத்துருக்களானார்கள்? நேற்று வரையில் சேம்பர்லினும் ஹிட்லரும் சிநேகம் கொண்டாடவில்லையா? மேலும், கொயரிங்கும் ரிப்பன்டிராப்பும் யுத்தவெறி பிடித்தவர்களாயிருந்தால், அதற்கு நாங்கள் என்ன செய்வோம்? அவர்கள் மேல் உள்ள கோபத்தை எங்கள் மேல் காட்டினால் என்ன பிரயோஜனம் ? இப்படிப்பட்ட நிலைமையில் எனக்கு வேலை தேடப் புறப்படு வதற்குக்கூட உற்சாகமில்லை. மனது அவ்வளவு சோர்வடைந்து விட்டது. மனைவி மக்களின் வருங்காலத்தை நினைக்கும்போது பெரிதும் கவலை உண்டாயிற்று.
இவ்வளவு மனச்சோர்வுக்கிடையில் ஒரு சிறு நம்பிக்கை மட்டும் இருந்தது. ஏதாவது ஒரு வேலை பார்த்துக் கொடுக்கும்படி ராவ்பகதூர் தசரதராமய்யரைக் கேட்கலாமென்று எண்ணியிருந்தேன். அவன் மனது வைத்தால் கட்டாயம் வேலை பண்ணிக் கொடுக்கலாம்.

ராவ் பகதூர் தசரதராமய்யர் பெயரை ஒருவேளை நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம். பிரசித்திபெற்ற ‘நவசூரியன் இன்ஷியூரன்ஸ் கம்பெனி’யின் சென்னைக் கிளைக்கு அவர் மானேஜர். சம்பளம் மாதம் ரூ. 1800. இதைத் தவிர வீட்டுவாடகை, மோட்டார் அலவன்ஸ் எல்லாம் உண்டு. ‘ஷேர் மார்க்கெட்டிலும்’ ‘பைனான்ஸ் வட்டாரங்களிலும் அவருடைய செல்வாக்கு அபாரம். ரொம்பப் பொல்லாத மனுஷர். யாரையாவது முன்னுக்கு கொண்டு வர வேண்டுமென்றாலும் கொண்டு வந்துவிடுவார், கெடுக்க நினைத்தாலும் கெடுத்து விடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

இவ்வளவு பெரிய மனுஷருடன் எனக்கு எப்படி சிநேகம் ஏற்பட்டதென்று உங்களுக்கு ஆச்சரியமாயிருக்கலாம். அவருக்கும் எனக்கும் சமீப காலத்துக் கடற்கரை சிநேகந்தான். இரண்டு மூன்று மாதமாய் நான் தினந்தோறும் தவறாமல் ‘பீச்’ சுக்குப் போய்க் கொண்டிருந்தேன். என்னுடைய தேக ஸ்திதியை உத்தேசித்து கடற் காற்று வாங்கும்படி டாக்டர் கட்டளையிட்டதனால் தான் போய்க் கொண்டிருக்கிறேன். இல்லாவிட்டால், சிந்தாதிரிப்பேட்டையில் வசிக்கும் நான் தினமும் கடற்கரைக்குப் போவது முடிகிற காரியமா? ஆபீஸ் விட்டானதும் நேரே வீட்டுக்குப் போய்க் குழந்தைகளைப் பார்க்கலாமென்று தான் தோன்றுகிறது.

கடற்கரையில், வாலாஜா ரோட்டுக்கு எதிரிலுள்ள பெஞ்சியில் நான் தினம் போய் உட்கார்வது வழக்கம். அதே பெஞ்சில் தசரதராம அய்யரும் வந்து உட்கார்வார். நாளடைவில் எங்களுக்குள் பேச்சு வார்த்தை ஏற்பட்டு, ஒரு மாதிரி சிநேகமும் உண்டாயிற்று. லோகா பிராமமாய்ப் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம். பேசுவதற்கு விஷயங்களுக்குத் தான் இப்போது குறைவு இல்லையே! யுத்தம் இருக்கவே இருக்கிறது. அடுத்தபடியாக, காங்கிரஸைக் குற்றம் சொல்வதில் அவருக்கு ரொம்பப் பிரியம். இடையிடையே ஸோஷலிஸம், பொது உடைமை இவை பற்றிய விவகாரங்கள் எங்க ளுக்குள் வெகு காரசாரமாக நடக்கும்.

தசரதராமய்யர் பிரசித்த மனிதரானாலும், அவரைப் பற்றி எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அவருக்கு என்னைத் தெரியவும் தெரியாது; என்னுடைய சொந்த விஷயங்களைப் பற்றி அவர் ஒரு நாளாவது விசாரிக்கவும் இல்லை. எங்களுடைய கம்பெனியை மூடிய அன்றுமட்டும், அவரிடம் எனக்கு வேலை போன சமாசாரத்தைத் தெரிவித்தேன். மேலே நான் என்ன செய்ய போகிறேன், என்ன சமாசாரம் என்று அவர் ஏதாவது விசாரிக்க வேண்டுமே, கிடையாது.

ஆனால் நம்முடைய அவசியத்துக்கு நாம் தானே கேட்டாக வேண்டும்? ஆகவே, ஏதாவது வேலைக்குச் சிபார்சு பண்ணும்படி அவரை நானே கேட்பதென்று உத்தேசித்தேன். மனதில் மட்டும் ஒருவிதமாக தயக்கம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஆகவே, ஒவ்வொரு நாளாகக் காலம் போய்க்கொண்டிருந்தது. ஒரு நாள் சாயங்காலம், வழக்கம் போல் நானும் தசரதராமய்யரும் கடற்கரை பெஞ்சியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். என் மனத்திற்குள் அவரிடம் வேலை கேட்கலாமா, வேண்டாமா என்பதைப் பற்றிப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று தசரதராமய்யர், “அதோ பாரும்! அதோ பாரும்! அந்தக் காரில் உட்கார்ந்து போகிறவனைப் பார்த்துக் கொள்ளும்!” என்றார். நான் மிக்க அதிசயமடைந்து, அவர் சுட்டிக்காட்டிய பேர்வழியைப் பார்த்தேன்.

ஆமாம், எனக்கு அதிசயமாகத்தானிருந்தது. சிலபேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு சென்னையில் உள்ள ஒவ்வொரு காரின் நம்பரும், அதன் ‘மேக்’ கும், அதன் சொந்தக்காரர் யார் என்பதும் தெரியும். இன்னின்ன நம்பர் வண்டியில் இன்றைக்கு யார் யார் ஏறிக் கொண்டு போனார்கள். என்றுகூட அவர்கள் சொல்லுவார்கள். ஆனால், தசரதராமய்யர்- ஐம்பது வயதுக்கு மேலான பெரிய மனுஷர் – இவரும் என்ன இப்படி பிள்ளைத்தனமாயிருக்கிறாரே என்று நான் அதிசயப் பட்டு முடிவதற்குள், அவர் சொன்னார்:- “அந்த மனுஷன் மூன்று வருஷத்துக்கு முன்னால் கையில் காலணாக்கூட இல்லாமலிருந்தான்; இப்போது எப்படி அமர்க்களமாயிருக்கிறான், பார்த்தீரல்லவா?”

“இதில் என்ன ஆச்சரியம்? உலகத்தில் ஏழைகள் பணக்காரர் களாவதும், பணக்காரர்கள் ஏழைகள் ஆவதும் சகஜந்தானே? ‘ஆறிடுமேடு மடுவும் போலாஞ் செல்வம்’ என்று தெரியலாமா பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்? உலகம் முழுவதிலும் பொது உடமைக் கொள்கை ஸ்தாபிதமாகிற வரையில் அப்படித்தானிருக்கும்” என்றேன் நான்.“வாஸ்தவந்தான். நீர் சொல்வதை நான் ஒத்துக்கொள்கிறேன். பொதுவுடைமை வந்தாலொழிய ஏழைக்கும் விமோசனம் இல்லை; பணக்காரனுக்கும் விமோசனம் இல்லை” என்றார் தசரதராமய்யர். இதற்கு என்ன பதில் சொல்லுவது என்று நான் யோசிப்பதற்குள் அவர் மறுபடியும் சொன்னார்:-

“பொது உடைமை, பொது உடைமை என்று என்னை நீர் பயமுறுத்த வேண்டாங்காணும்! பொது உடைமை வந்தால் உண்மையில் ஏழைகளைவிடப் பணக்காரர்களுக்குத் தான் நல்லது. ஒரு தேசத்தில் 99-பேர் ஏழையாயிருந்து ஒரு மனுஷன் மட்டும் பணக்காரனாயிருந்தால், அவனுக்கு அதைக் காட்டிலும் நரகாவஸ்தை வேறு வேண்டிய தில்லை. இன்று காலையில் நடந்ததை சொல்கிறேன். கேளும். சரியாக ஆறு மணிக்குப் படுக்கையை விட்டு எழுந்து வெளியே வந்தேனோ, இல்லையோ, வாசலில் ஒரு பிள்ளையாண்டான் காத்துக் கொண் டிருந்தான். ‘என்னடாப்பா போது விடியறதுக்குள்ளேயே விசேஷம்?’ என்று கேட்டேன். ‘வேலைக்கு மனுப்போட்டிருந்தேன்; கேட்கலாமென்று வந்தேன்’ என்றான். எனக்குக் கோபமாய் வந்தது. ‘ஏண்டாப்பா! வேலை என் தலைக்காணிக் கடியில் இருக்கிறது, எடுத்துண்டு வந்து கொடுப்பேன் என்று நினைச்சுண்டாயோ? போ! போ!’ என்று அவன் மேல் எரிந்து விழுந்து போகச் சொன்னேன்.

காப்பி சாப்பிட்டுவிட்டு வந்தேனோ, இல்லையோ, இன்னொரு ஆசாமி கையில் ஒரு ஜாபிதாவுடன் காத்திருந்தான். ‘யார்? என்ன வேண்டும்?’ என்று கேட்டேன். ‘இந்த வாரம் வரச் சொன்னீர்களே?’ என்று அவன் புன்னகை புரிந்தான். ‘என்னத்துக்கு என்று சொல்லும்; எனக்கு ஞாபகமில்லை’ என்றேன். ‘கிரிக்கெட் கிளப்’ என்று சொல்லி அவன் மறுபடியும் புன்சிரிப்புச் சிரித்தான். எனக்கோ பற்றிக் கொண்டு வந்தது. ‘என் தலையைப் பாரும் ஓய்!’ என்றேன். அவன் முழித்தான். ‘தலை எப்படி நரைத்துப் போச்சு பார்த்தீரா? இனிமேல் நான் எங்கே கிரிக்கெட் ஆடப் போறேன்?’ என்றேன். அவன் நாசமாய்ப் போக – இன்னும் அதிகமாய்ப் பல்லைக்காட்டினான் ‘நீங்கள் விளையாட வேண்டாம் ஸார்! நன்கொடை கொடுத்தால் போதும்’ என்று சொல்லிக் கொண்டு ஜாபிதாவை நீட்டினான். யாராரோ உபயோகமற்றவன் பெயர்கள் எல்லாம் அதில் காணப்பட்டன. நானும் இரண்டு ரூபாயைக் கொடுத்துக் தொலைத்தேன்.

ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் வாசலில் ஒரு பழைய செருப்பு ஜோடியைப் பார்த்து, ‘இது எப்படி இங்கு வந்தது’ என்று யோசித்தேன். திடீரென்று ஒரு ஞாபகம் வந்து, ‘என்னுடைய புதுச் செருப்பு எங்கே?’ என்று பார்த்தேன். காணவில்லை. கிரிகெட் கிளப்பு சந்தாவுக்காக வந்தவன் பழைய செருப்பை போட்டுவிட்டுப் புதுச் செருப்பைப் போட்டுக் கொண்டு போய்விட்டான். ‘அட பாவி!’ என்று மனத்திற்குள் அவனை வைது கொண்டிருக்கையில், இன்னொரு பையன் கையில் நோட்டு புத்தகத்துடன் வந்தான். ‘ஸார்! பிள்ளையார் கோவில் பஜனை’ என்றான். ‘ஆகட்டும்; பஜனை நடக்கிறபோது சொல்லியனுப்பு; நான் வரேன்’ என்றேன். ‘ஏதாவது உங்க கையாலானது கொடுத்தனுப்புங்க, சாமி!’ என்றான் பையன். என் கையாலானது அறைதான்; வேணுமா?’ என்று கையை ஓங்கினேன். பையன் வாய்க்குள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு போய் விட்டான்.

நான் வேலைக்காரனைக் கூப்பிட்டு, ‘அடே முட்டாள்! கேட்டைப் பூட்டி வை என்று எத்தனை தடவை உனக்குச் சொல்கிறது?’ என்று இரைந்தேன். வேலைக்காரன் போய்க் கதவைப் பூட்டினான். பத்து நிமிஷத்துக்குகெல்லாம் வாசலில் ஒரு மோட்டார் வண்டி வந்து நின்றது. ‘இது யாரடா சனியன்?’ என்று ஜன்னல் வழி எட்டிப் பார்த்தேன். வண்டியில் ராவ் பகதூர் ஜானகிராம் ரெட்டியார் உட்கார்ந்திருந்தார். போன வாரத்தில் தான் அவருக்கு உத்யோகத்தில் ‘பிரமோஷன்’ ஆயிற்று. நானே அவரைப் பார்க்க வேணுமென்று நினைத் திருந்தேன். அவரே வந்துவிட்டார். இந்த சமயத்தில்தான் வேலைக்காரன் கேட்டைப் பூட்டிவிட்டான். ‘அடே திருப்பதி! திருப்பதி!’ என்று கத்தினேன். அப்போதுதான் சாப்பிட உட்கார்ந்திருந்தவன் எச்சிற் கையோடு ஓடி வந்தான். ‘ஏண்டா கேட்டைப் பூட்டினாய், முட்டாள்!’ என்று ரெட்டியார் காதில் விழும்படி அவனைத் திட்டினேன். அவன் போய் கேட்டைத் திறந்ததும் கார் உள்ளே வந்தது. ரெட்டியார் இறங்கி வந்து உட்கார்ந்தார். அவர் எதற்காக வந்தார் என்று நினைக்கிறீர்? ‘நம்ப ‘கிளப்’ பிலே நீங்க மெம்பராய்ச் சேர வேண்டாமா?’ என்று கேட்பதற்குத்தான். ‘ஏற்கனவே நான் சென்னைப் பட்டணத்திலுள்ள மூன்று பெரிய கிளப்புகளிலே மெம்பர்’ என அவரிடமும் சொன்னபோது, ‘அதனாலென்ன? நம்ம ராயப்பேட்டை கிளப்பிலும் நீங்கள் கட்டாயம் மெம்பரா யிருக்கவேணும்’ என்றார். பிரவேசக் கட்டணம் பத்து ரூபாயும், மாதச் சந்தா ஐந்து ரூபாயும் தொலைத்தேன். மனுஷர் எடுத்துக் கொண்டு தொலைந்தார்.

பிறகு, சங்கீத சபைக்காரர்கள் நாலு பேர் வந்தார்கள். அவர்களுடைய சபைக்கு நான் போஷகர் ஆகவேண்டும் மென்று சொல்லி, ‘போஷகர் சந்தா ரூ. 50’ என்றார்கள். நான் ஐந்து ரூபாயைக்
கொடுத்து, ‘இந்த ஐந்து ரூபாயைக் கொண்டு சங்கீதத்துக்கு எவ்வளவு போஷணை கொடுக்க முடியுமோ அதைக் கொடுங்கள்’ என்றேன். அவர்கள் போன பிறகு வீட்டில் இருக்கவே பிடிக்காமல், காரைக் கொண்டு வரச் சொல்லி ஏறிக்கொண்டு வெளியே போனேன். எலியட் பீச்சு வரையில் போய் விட்டு அரை மணி நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பியபோது, அங்கே, பள்ளிக்கூடத்துச் சம்பளத்துக்காக ஒரு பையனும், திருப்பதி வேண்டுதலுக்குப் பணம் வசூலிப்பதற்காக ஒரு புருஷன் பெண்சாதி குடும்பமும், அமெச்சூர் நாடக சபை டிக்கட் விற்பதற்காக இரண்டு பேரும், சமையலுக்கு ஆள் வேண்டுமா என்று கேட்டுக் கொண்டு ஒருவனும்- ஆக ஏழெட்டுப் பேர் காத்துக் கொண்டிருந்தார்கள்!-”

இப்படி தசரதராமய்யர் மூச்சுவிடாமல் தம்முடைய கஷ்டங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டு வந்தார். கடைசியாக, என்னால் பொறுக்க முடியாமல் போகவே, அவரைத் தடுத்து, “ஆமாம் ஸார் ! பணக்காரர்கள் பாடு ரொம்ப கஷ்டந்தான். ஆனாலும் அவர்களைத் தொந்தரவு படுத்துவதற்காக வருகிறார்களே ஏழைகள், அவர்களுக்கும் கஷ்டம் இல்லாமலா இருக்கும்? கஷ்டம் தாங்காமல் தானே யாசகத்துக்காக வருகிறார்கள்? இல்லாவிட்டால் வருவார்களா?” என்றேன்.

“அப்படியா சொல்கிறீர்? நீர் சொல்வது தப்பு, பத்து பேர் யாசகத்துக்கு வந்தால், ஒருவன் தான் அதில் உண்மையில் கஷ்டப் படுகிறவனாயிருக்கிறான். ஆகவே, யாருக்கு உதவி செய்ய வேண்டும், யாருக்கு உதவி செய்யக் கூடாது என்று தெரிந்துகொள்ள முடியாமல் போகிறது. சற்று முன்னால் மோட்டாரில் போனானே, அந்த மனுஷன் ஒரு சமயம் என்னை அந்த மாதிரி நெருக்கடியான நிலைமையில் வைத்து விட்டான்…” என்றார் ராவ் பகதூர். “ஆமாம்: அவனைப் பற்றித்தான் சொல்ல ஆரம்பித்தீர்கள்; அதற்குள் பணக்காரர்களுடைய கஷ்டங்களைச் சொல்ல ஆரம்பித்து விட்டீர்கள்” என்று நான் ஞாபகப்படுத்தினேன். “அது கொஞ்சம் பெரிய கதை; உமக்குச் சாவகாசம் இருந்தால் சொல்கிறேன்” என்றார்.
இதற்குள் நன்றாக அஸ்தமித்துவிட்டது. கடற்கரையில் இருள் சூழ்ந்தது. பீச் ரோட்டில் இப்போது விளக்குகள்* தான் போடுவது இல்லையா? எப்போதும் ஜகத்ஜோதியாயிருக்கும் அந்தக் கடற்கரை இப்போது இருள் சூழ்ந்திருப்பதைப் பார்த்தால் மனத்திற்கு ஒருவித திகிலும் சோகமும் உண்டாயின. வீட்டில் என் மனைவியும் குழந்தைகளும் காத்திருப்பார்கள். ஆனாலும், தசரதராமய்யர் சொல்கிறதைக் கேட்டுவிட்டுத்தான் போவதென்று தீர்மானித்து விட்டேன். ஏனெனில் மோட்டாரில் போன அந்த மனுஷரை எனக்கு முன்பே தெரியும்.
மூன்று வருஷத்துக்கு முன்னால் அவர் ரொம்பவும் சிரம தசையில் தான் இருந்தார். ஆனால் திடீரென்று அதிர்ஷ்டம் வந்தது. மளமளவென்று நல்ல நிலைமைக்கு வந்த காரணம் எல்லாருக்கும் ஒரு மர்மமாக இருந்தது. அந்த மர்மம் ஒரு வேளை இப்போது வெளியாகலாமென்ற ஆவலினால், “எனக்கு சாவகாசந்தான்; சொல்லுங்கள்” என்று தசரதராமய்யரைத் தூண்டினேன். தசரதராமய்யர் சொல்லத் தொடங்கினார்.

“மூன்று வருஷத்துக்கு முன்னால் நடந்தாலும் நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஏனெனில் அன்றைக்குத் தீபாவளிக்கு முதல் நாள். தீபாவளி சமயம் பார்த்து வீட்டில் யாராரோ பந்துக்கள் உறவு கொண்டாட வந்திருந்தார்கள். எல்லாருக்கும் துணிமணி வகையராக்கள் வாங்க ரூ. 500/-செலவாயிற்று. குழந்தைகள் இருபது ரூபாய்க்குப் பட்டாசுக் கட்டுகள் வாங்கிக் கொண்டார்கள். அப்படியும் யாருக்காவது திருப்தி உண்டா? கிடையாது. ஒரே மூக்கால் அழுகைதான். இதனால் ஏற்பட்ட மனவெறுப்புடன் நான் ஆபீஸுக்குப் போனேன். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சேவகன் ஒரு சீட்டைக் கொண்டு வந்து கொடுத்தான். அதில், ‘கே. சுந்தரமய்யர் – ரொம்பவும் அவசர காரியம்’ என்று எழுதி இருந்தது.

இந்த மாதிரி ‘அவசர காரியம்’ என்று சொல்லிக் கொண்டு எத்தனையோ பேர் வருவார்கள். கடைசியில், ஏதாவது யாசகம் கேட் பார்கள். இது வழக்கமாகையால், ‘பார்க்க முடியாது’ என்று சொல்லி விடலாமா என்று பார்த்தேன். அப்புறம் மனது கேட்கவில்லை. ஒருவேளை உண்மையாகவே ஏதாவது அவசர காரியமாயிருந்துவிட்டால்? ‘வரச் சொல்லு!’ என்றேன்.

இதோ மோட்டாரில் போனானே, அந்த மனுஷன் உள்ளே வந்தான். அப்போது அவனுடைய தோற்றத்துக்கும், இப்போதுள்ள தோற்றத்துக்கும் சம்பந்தமே கிடையாது. வாடி உலர்ந்து போயிருந்தான். இடுப்பில் ஒரு அழுக்குத் துணி; மேலே ஒரு அழுக்குச் சட்டை; அதற்குமேலே ஒரு கிழிந்த துண்டு. முகத்திலே சோகம் குடிக் கொண்டிருந்தது. கண் முனைகளில் ஐலம் தேங்கி அணையைக் கடந்து பாய்வதற்குத் தயாராய்க் காத்துக் கொண்டிருந்தது.

அவனைப் பார்த்ததுமே ஏதோ யாசகந்தான் என்று தெரிந்து போயிற்று. ‘யார், ஐயா! – என்ன அவசர காரியம்?’ என்று அதட்டிய குரலில் கேட்டேன். அவன் பதில் சொல்ல ஆரம்பித்தான். ஆனால் தொண்டையை அடைத்துக்கொண்டது. கண்களிலிருந்து ஜலம் பெருகிற்று. அவன் அடக்கி அடக்கிப் பார்த்தும் முடியாமல் தேம்பி அழத் தொடங்கி விட்டான். ‘இதேதடா அவஸ்தை!’ என்று எனக்குப் பெரிதும் சங்கடமாய்ப் போயிற்று. ‘ஓய் உட்காரும்! சமாசாரம் என்னவென்று சொல்லும்! எனக்கு ஆபீஸ் ஜோலி இருக்கிறது’ என்றேன்.

அவன் கண்ணைத் துடைத்துக் கொண்டான். இடையிடையே விம்மலுடன் பொத்துக் கொண்டு வந்த துக்கத்தை அடக்கிக் கொண்டு விஷயம் இன்னதென்று சொன்னான். அவனுக்குத் திருச்சிராப்பள்ளிக்குப் பக்கத்தில் மஞ்சக்குடி என்ற கிராமமாம். அவனுடைய சம்சாரத்துக்கு உடம்பு சரியில்லாததால், அவளுக்கு வைத்தியம் பார்ப்பதற்காகச் சென்னைப் பட்டணத்துக்கு வந்தானாம். ராயபுரம் ஆஸ்பத்திரியில் விட்டிருந்தானாம். கொண்டு வந்த பணமெல்லாம் ஆகிவிட்டதாம். சிகிச்சை ஒன்றும் பயன்படாமல் அன்று காலையில் அவன் சம்சாரம் இறந்து போனாளாம். ஆஸ்பத்திரி அதிகாரிகள் பிரேதத்தை எடுத்துப் போகும்படி சொன்னார்களாம். பிரேதத்தை எடுத்துக் கொண்டுபோய் தகனம் செய்வதற்குக்கூட அவனிடம் பணம் இல்லையாம். ‘இல்லாவிட்டால், இப்படிப் பிச்சை எடுக்க வந்திருக்க மாட்டேன், ‘ஸார்! நான் நல்ல நிலைமையிலிருந்தவன் ஸார்!’ என்று சொல்லி அவன் மறுபடியும் விம்மி அழத்தொடங்கினான்.

அப்போது எனக்கு எப்படியிருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? என் மனதில் ஒரு பெரிய போராட்டம் நடந்தது. ‘அவ்வளவும் பொய்; இப்படி நடக்கவே நடக்காது. இவன் நம்மை ஏமாற்றப்பார்க்கிறான்’
என்று என்னுடைய புத்தி சொல்லிற்று. ஆனால் ஒருவேளை நிஜமா யிருந்துவிட்டால்? என்ன பரிதாபமான நிலைமை? இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் உதவி செய்யாவிட்டால் மகாபாபமில்லையா?’ என்று என் இருதயம் கூறிற்று. ‘இருந்தாலும், பெண்டாட்டி செத்துப் போய் விட்டாள் என்று ஒருவன் பொய் சொல்வது, அதற்கு ஏமாந்து போய் நாம் பணங்கொடுத்து விடுவதா? அப்படியானால், நம்மை விடக் கோழை யார்?’ என்று ஒரு சமயம் தோன்றிற்று.

இப்படி நான் யோசித்துக் கொண்டிருக்கையில், அவன், தேம்பிக் கொண்டே, ‘நான் இங்கே தெருத்தெருவாய் அலைகிறேன்; அவள் அங்கே செத்துக் கிடக்கிறாள். கற்பகம்! கற்பகம்! உனக்கா இந்த கதி என்று சொல்லி, முகத்தை மேல்துணியால் மூடிக்கொண்டு, விசித்து விசித்து அழத் தொடங்கினான். அவன் ‘கற்பகம்’ என்ற பெயரைச் சொன்னதும் எனக்கு மயிர்க் கூச்செறிந்தது. யோசிப்பதற்கு இது சமயமில்லை! ‘பொய்யாயிருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும்; என்னவெல்லாமோ தண்டச் செலவெல்லாம் ஆகிறது; அதோடு இதுவும் இருக்கட்டும்’ என்று தீர்மானித்து, பத்து ரூபாய் நோட்டு ஒன்று எடுத்து அவனிடம் கொடுத்தேன்.

‘போய் வருகிறேன், ஸார்! இந்த ஒத்தாசையை ஆயுள் உள்ள வரையில் மறக்கமாட்டேன்’ என்று சொல்லிக் கொண்டு அவன் எழுந்து போனான். அவன் வாசற்படி தாண்டிச் சென்றதும், மறுபடியும் எனக்குச் சந்தேகம் உண்டாயிற்று. இவன் நம்மை ஏமாற்றித்தான் விட்டானோ? மனதார எத்தனையோ பணம் தொலைக்கிறோம்; அதெல்லாம் அவ்வளவு தோன்றுகிறதில்லை. ஆனால் ஏமாந்து போய்க் கொடுத்து விடுவதென்றால், மனதுக்கு என்னமோ சங்கடமாயிருக்கிறது.

மேஜை மீதிருந்த மணியை அடித்தேன். ஆபீஸ் பையன் வந்தான். அவனிடம் எட்டணாவைக் கொடுத்து ‘அடே! இப்போ ஒரு மனுஷர் போனாரல்லவா? அவர் பின்னோடேயே போ! எங்கே போகிறார் என்ன செய்கிறார் என்று பார்த்துக்கொள். அவர் எந்த வீதியில் எந்த வீட்டில் வசிக்கிறார் என்று தெரிய வேண்டும். வீட்டு நம்பர் பார்த்துக் கொண்டு வா. ஆனால் அவர் பின்னோடு வருகிறாய் என்பது அவருக்குத் தெரியக்கூடாது, தெரியுமா?’ என்றேன்.
பையன் விரைந்து சென்றான். எனக்கென்னமோ அன்று வேலையே ஓடவில்லை. அந்த மனுஷன் ‘கற்பகம் கற்பகம்’ என்று புலம்பினானல்லவா? அது எனக்குப் பழைய ஞாபகங்களை உண் டாக்கிற்று…”இப்படி தசரதராமய்யர் சொல்லிவிட்டு நிறுத்தினார். ‘கற்பகம்’ என்ற பெயர் உண்மையில் என்னைக்கூடத் தான் திடுக்கிடச் செய்தது. ஆனால் இதை அவரிடம் நான் சொல்லவில்லை. என்னுடைய ஆவல் அதிகமாகவே, “என்ன பழைய ஞாபகங்கள்?” என்று கேட்டேன்.

“எத்தனையோ நாளான பழைய சங்கதி. இப்போது உம்மிடம் சொன்னால் என்ன வந்துவிடப் போகிறது? சொல்லித்தான் வைக்கிறேன். பதினைந்து வருஷத்துக்கு முன்னால் என்னுடைய முதல் மனைவி, மூன்று குழந்தைகளை விட்டு விட்டு இறந்துபோனாள். அப்போது எனக்கு வயது 37 தான். அந்த வயதில் நான் இரண்டாவது கலியாணம் பண்ணிக் கொள்வதில் எவ்வித குற்றமும் இருப் பதாகத் தோன்றவில்லை. ஆகா! இப்போதல்லவா அது எவ்வளவு பெரிய பிசகென்று தெரிகிறது?…”

அவரை உற்சாகப்படுத்த எண்ணிய நான், “முப்பத்தேழு வயதில் கல்யாணம் செய்துகொள்வதே குற்றம் என்று சொல்ல முடியுமா? வயதுப் பொருத்தம் இருந்து, பெண்ணும் சம்மதித்தால், பிசகென்ன?” என்றேன்.
“மேலே நடந்ததைக் கேளுங்க, ஐயா! பத்து வயது மரப்பாச்சியை கல்யாணம் செய்துக்கொள்வதாக எனக்கும் எண்ணமில்லை. பெண்ணின் சம்மதத்தை நேரில் கேட்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்வதென்று உறுதி செய்து கொண்டேன். நான் எவ்விதப் பிரயத்தனமும் செய்யாமலே, ஜாதகங்களும் போட்டோக்களும் வரத் தொடங்கின. என்னுடைய இரண்டாவது கல்யாணத்தை எப்படியாவது முடித்து வைப்பதென்று அநேகம் பேர் கங்கணம் கட்டிக்கொண் டிருந்ததாகத் தோன்றியது. கல்யாணத் தரகர்களும், பெண்ணைப் பெற்ற தகப்பனார்களும் வந்து மொய்த்தார்கள்.

வந்திருந்த போட்டோக்களில் ஒரு பெண்ணின் போட்டோ எனக்குப் பிடித்திருந்தது. அவளுக்கு ஜாதகப்படி பதினாலு வயது, ஆனால் நிஜத்தில் பதினேழு வயது என்று கல்யாணத் தரகர் சொன்னார். மேலே ஏற்பாடுகள் நடந்தன. பெண்ணின் பெற்றோர்களுக்கு என்னை மாப்பிள்ளையாக அடைவதில் பரம சந்தோஷந்தான்! கேட்கவே வேண்டியதில்லை’ என்று சொன்னார்கள். ஆனால் நான் ‘அதெல்லாம் முடியாது. பெண்ணை நான் நேரில் கேட்டுத்தான் ஆகவேண்டும்’ என்று சொல்லி விட்டேன். ஆகவே அவர்களுடைய ஊருக்குப் போனேன். பெண்ணைப் பார்த்ததும் எனக்கு ரொம்பவும் பிடித்துப் போயிற்று. போட்டோவில் இருந்ததை விட அழகாய் இருந்தாள். எனக்கு முன்னால் நமஸ்காரம் செய்துவிட்டு, எழுந்து நின்றாள்.

அவளுடைய தகப்பனார், ‘குழந்தை! மாப்பிள்ளை உன்னுடைய சம்மதத்தைத் தெரிந்து கொண்டுதான் கல்யாணம் நிச்சயம் செய்ய வேணுமென்று சொல்கிறார். நாங்கள் சொன்னால் போதாதாம். நீயே சொல்ல வேண்டுமாம். உனக்கு சம்மதந்தானே? சொல், அம்மா!’ என்றார். அப்போது, என் வாய்க் கொழுப்பு, சும்மா இருக்கக்கூடாதா ‘நீங்கள் எல்லாம் பக்கத்தில் இருந்தால், அவள் வாய்விட்டுச் சொல்ல மாட்டாள்; சங்கடப்படுவாள். நீங்களெல்லாம் கொஞ்சம் ஒதுங்கிப் போங்கள்’ என்றேன். ‘பட்டணத்து மனுஷ்யாளோல்லியோ? எல்லாம் புதுசாயிருக்கிறது!’ என்று சொல்லிவிட்டு அவள் தகப்பனார் பக்கத்திலிருந்த சாஸ்திரிகளை அழைத்துக் கொண்டு வாசல் திண்ணைக்குப் போனார். பெண்ணின் தாயாரும் மற்றவர்களும் அடுப்பங்கரைப் பக்கம் போனார்கள். ‘இப்போது தைரியமாய்ச் சொல்லு, என்னைக் கல்யாணம் செய்து கொள்ள உனக்கு இஷ்டந்தானா? எனக்கு வயது 37 ஆச்சு!

வயதானவன்தான். அப்புறம், அம்மா அப்பா கொண்டு போய்க் கிணற்றில் தள்ளிவிட்டார்கள் என்று புகார் சொல்லக்கூடாது. இஷ்ட மில்லாவிட்டால் இப்பொழுதே சொல்லிவிடு’ என்றேன். இப்படி நான் சொன்னபோது, எனக்கென்னமோ வெகு பெருமையாயிருந்தது. வேறு யாரும் இப்படிக் கேட்டிருக்க மாட்டார்கள்.
நாமாக இருக்கக் கொண்டு கேட்கிறோமென்று பெருமை. அதோடு, அந்தப் பெண் என்ன பதில் சொல்வாள் என்பதிலும் எனக்கு சந்தேகம் இருக்கவில்லை. கொஞ்ச நேரம் மென்று முழுங்குவாள், கடைசியாக, ‘எனக்குச் சம்மதம் தான், உங்களைவிட நல்ல இடம் எனக்கு எங்கே கிடைக்கப் போகிறது?’ என்று சொல்வாள் என்பதாக எனக்கு சர்வ நிச்சயமிருந்தது.

ஆனால், அந்த நிச்சயம் அடுத்த நிமிஷமே பறந்து போயிற்று. அந்தப் பெண் தயங்கவில்லை; சங்கோசப்படவில்லை. கணீரென்று, ஆனால் எனக்குமட்டும் கேட்கும்படி பேசினாள். ‘நிஜத்தைத் தானே சொல்லச் சொல்கிறீர்கள், மாமா! அப்படியானால், உங்களைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள எனக்கு இஷ்டமில்லை. எங்க அத்தானைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளத்தான் இஷ்டம். அத்தான் திருச்சினாப்பள்ளியில் படிக்கிறான். அவன் ஏழை. இந்த வருஷம் பரீட்சையும் பாஸ் பண்ணவில்லை. அதற்காக அவனுக்கு என்னைக் கொடுக்காமல் நீங்கள் பணக்காரர் என்று உங்களுக்குக் கொடுக்கப் பார்க்கிறார்கள். ஆனால் எனக்குப் பணம் வேண்டியதில்லை. அத்தான் ஏழையா யிருந்தாலும் அவனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளத்தான் இஷ்டம்’ என்று பளிச் பளிச் சென்று பேசி முடித்தாள். அவளுடைய வார்த்தை ஒவ்வொன்றும் என் தலையில் ஆணி அடித்தாற் போல் விழுந்தது.

ஆச்சரியத்தினாலும் ஆத்திரத்தினாலும் திகைத்துப் போனேன். ஆனால் ஆத்திரப்பட்டு என்ன பிரயோஜனம்? ஒருவாறு சமாளித்துக் கொண்டு, ‘சரி அம்மா! அப்படியானால், உன் இஷ்டம்போல் செய். நான் உன்னை வற்புறுத்த மாட்டேன்’ என்றேன். அங்கிருந்து எப்படி கிளம்பினேன், அவளுடைய பெற்றோர்களிடம் என்ன சொன்னேன் என்பதெல்லாம்கூட எனக்கு நன்றாய்த் ஞாபக மில்லை. ‘பெண் தன் இஷ்டத்தைத் தெரிவித்து விட்டாள். நான் ஊருக்குப் போய்க் கடிதம் எழுதுகிறேன்’ என்று சொன்னதாக ஞாபகம். இந்த மாதிரி ஒரு பெண்ணினால் அவமான மடைந்த ஆத்திரத்தில் அடுத்தபடியாக வந்த பெண்ணை பார்க்காமலே கல்யாணம் செய்து கொண்டு விட்டேன். இப்போது நினைத்தால் என்ன முட்டாள் தனம் செய்தோமென்று தோன்றுகிறது. என்னுடைய சம்சாரத்தைச் சேர்ந்தவர்கள் இருபது பேருக்கு மேல் நான் சம்ரக்ஷிக்கிறேன். முப்பத் தைந்து பேருக்கு வேலை பண்ணி வைத்திருக்கிறேன். இன்னும் அவர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்!…”

தசரதராமய்யர் இங்கே கதையை நிறுத்தினார் ஆரம்பித்த இடத்தை மறந்துவிட்டார் என்று நினைத்து, “கே. சுந்தரமய்யரின் பின்னால் ஒரு ஆளை அனுப்பினீர்களே? அவன் திரும்பி வந்தானா? என்ன சொன்னான்?” என்று கேட்டேன். “மறக்கவில்லை, ஐயா, மறக்கவில்லை! சொல்கிறேன்” என்றார் தசரதராமய்யர்.

“சேவகன் திரும்பி வந்து, ‘ஸார்! அந்த ஆசாமி நேரே சைனா பஜாருக்குப் போய் இரண்டு பட்டாசுக் கட்டும், நாலு மத்தாப்புப் பெட்டியும் வாங்கிட்டாரு. பிறகு, சிந்தாதிரிப்பேட்டை டிராமிலே ஏறிக்கிட்டாரு. நானும் பின்னோடு ஏறிக்கொண்டு போனேன். சிந்தாதிரிப்பேட்டை சையத் தெருவில் இறங்கி ரிக்ஷா வச்சுண்டு சித்தி விநாயகர் தெருவுக்குப் போய் அங்கே 44-ம் நெம்பர் வீட்டிலே நுழைஞ்சாரு. நான் திரும்பி வந்துட்டேன்’ என்றார். நான் சந்தேகப்பட்டது நிஜமாய்ப் போயிற்று. கே. சுந்தரமய்யர் பொல்லாத வேஷதாரிதான். என்னை ஏமாற்றிப் பணம் வாங்கிக் கொண்டு போய்விட்டான். அப்போது எனக்கு வந்த கோபத்துக்கும் ஆத்திரத்துக்கும் அளவேயில்லை. அவனை எப்படியாவது மறுபடியும் முகத்துக்கு முகம் பார்த்து அவனுடைய வேஷத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று எனக்குத் தோன்றிவிட்டது. எனவே, அன்று சாயங்காலம் ஒரு ரிக்ஷா பிடித்துக் கொண்டு சிந்தாதிரிப்பேட்டை- சித்தி விநாயகர் தெருவுக்கு போனேன். ஆர்ப்பாட்டம் செய்யாமல் போய் அவனைப் பிடிக்க வேண்டுமென்ற எண்ணத்தினால் காரில் போகவில்லை.

அப்படி அவனுடைய வீடு தேடிப் போகும்படியாக என்னைத் தூண்டியதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவன் ‘கற்பகம்! கற்பகம்!’ என்று சொல்லிக் கொண்டு விம்மியது என் காதை விட்டு அகலவில்லை. ஒருவேளை என்னை வேண்டாமென்று நிராகரித்த கற்பகமா யிருக்குமோ என்ற நினைவும், ‘சீ! ஒருநாளும் இருக்காது’
என்ற எண்ணமும் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருந்தன. நேரில் பார்த்து, அந்தக் கற்பகம் இல்லையென்று தெரிந்து கொள்ளாமல் போனால் இராத்திரியில் தூக்கம் வராது போல் தோன்றிற்று.
எனவே, மாலை சுமார் ஆறு மணிக்கு மேற்படி சித்தி விநாயகர் தெரு 44-ம் நம்பர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். கதவைத் தட்டியதும் ‘யார்?’ என்று கேட்டுக் கொண்டு ஒரு ஸ்திரீ வந்தாள்.

மாலை நேரத்து மங்கிய வெளிச்சத்திலும் அவளை உடனே நான் அடையாளம் கண்டு கொண்டேன். முன் மாதிரி அவள் சிறு பெண்ணில்லை: குழந்தைகளைப் பெற்றெடுத்த தாயார். அதற்குரிய மாறுதல்கள் அவள் தோற்றத்தில் இருந்தன. ஆனாலும், அவள் அதே கற்பகந்தான்; சந்தேகமில்லை. என்னுடைய குழப்பத்தை ஒருவாறு சமாளித்துக் கொண்டு ‘யாரையோ தேடிக்கொண்டு வந்தால் வேறு யாரோ அகப்படுகிறார்கள். கற்பகமில்லையோ, நீ?’ என்றேன். கற்பகம் திகைத்து நின்றாள் . ‘நீங்கள் யார் தெரியவில்லையே?’ என்றாள்.
‘என்ன? என்னை நிஜமாகத் தெரியவில்லையா? பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் பார்த்தது, ஞாபகமிருக்குமா? தவிர, நானும் ரொம்ப மாறிப் போயிருக்கிறேனில்லையா?’ என்றேன்.

அப்போது கற்பகத்துக்கு தெரிந்து போயிற்று. அவளுடைய முகம் ஒரே ஆச்சரியக்குறியாக மாறிய போதிலும் தைரியத்துக்கும் துணிச்சலுக்கும் குறைவில்லை. ‘ஓஹோ! நீங்களா? வாருங்கள், வாருங்கள். எங்கே வந்தேள்? என்ன சமாசாரம்? சௌக்கியமா இருக்கேளா? நிற்கிறேளே! உட்காருங்கள்’ என்று, தாழ்வாரத்தில் இருந்த நாற்காலியைக் காட்டினாள். நாற்காலியில் நான் உட்கார்ந்து கொண்டு, ‘எனக்கொன்றும் சௌக்கியத்துக்குக் குறைச்சலில்லை. நீ சந்தோஷமாயிருக்கியோல் லியோ?’ என்றேன்.

‘எல்லாம் நீங்கள் பண்ணின உபகாரந்தான். அடிக்கடி உங்களை நினைச்சுண்டுதானிருக்கேன். உங்களுடைய பெருந்தன்மை யாருக்கு வரும்? இன்னிக்கு நான் சந்தோஷமாயிருக்கிறதெல்லாம் நீங்கள் கொடுத்த வரம்தான்’ என்றாள். சந்தோஷமாயிருக்கிறதாக அவள் சொன்னபோது எனக்கு மனத் திற்குள் சிரிப்பு வந்தது.
‘எத்தனை நாளாய் இந்த ஊரிலே இருக்கேள்? ஆத்துக்காரருக்கு என்ன உத்தியோகம்?’ என்று கேட்டேன்.

உடனே, ஏன் இப்படிக் கேட்டோம் என்று உதட்டைக் கடித்துக் கொண்டேன். ஆனால், அவள் கொஞ்சமாவது மனங் கலங்க வேண்டுமே, கிடையாது.‘இவாளுக்குக் கம்பெனியிலே வேலை. 80 ரூபாய் சம்பளம். நாலு குழந்தைகளை வைச்சுண்டு குடித்தனம் பண்ணறது கஷ்ட மாய்த்தானிருக்கு. ஆனாலும், போதுமென்கிற மனமே பொன் செய்யும் மருந்து என்கிறாப்பலே கிடைக்கிறதைக் கொண்டு சந்தோஷப் படறோம். பகவான் இந்த மட்டுமாவது வைத்திருக்கிறாரோல்லியோ?” என்றாள். அம்மா! ஸ்திரீகள்தான் எவ்வளவு பொல்லாதவர்கள் எவ்வளவு கூசாமல் இவள் பொய் சொல்லுகிறாள்? கம்பெனி உத்தியோகமாம்!

80 ரூபாய் சம்பளமாம்! என்ன புளுகு? அந்தப் பாவியோ இவளை மனதாரச் சாக அடித்து, இவளுடைய பிரேதத்தைத் தகனம் செய்வதற்காகவென்று சொல்லிப் பணம் யாசகம் செய்து கொண்டு வருகிறான்! அந்த விஷயம் இவளுக்குத் தெரிந்தால் எப்படியிருக்கும்?- இம்மாதிரி ஒருபுறத்தில் எண்ணிய நான், மற்றொரு புறத்தில், அவளுடைய உயர்ந்த குணத்தை மெச்சிக்கொண்டேன். பெண் என்றால் இவள் அல்லவா பெண்? இவ்வளவு கேவலமான புருஷனைப் பற்றி எவ்வளவு விட்டுக் கொடுக்காமல் பேசுகிறாள்? இத்தனை கஷ்டங்களுக்கிடையில் எவ்வளவு தைரியமாயிருக்கிறாள்? இப்படிப் பட்ட உத்தமியைக் கல்யாணம் செய்து கொள்ள நமக்குக் கொடுத்து வைக்கவில்லை; அந்தப் போக்கிரித் தடியனுக்குத்தான் கொடுத்து வைத்திருந்தது!

இப்படியாக என் மனத்தில் இரக்கமும் வியப்பும் மாறி மாறித் தோன்றிக்கொண்டிருந்தன. அவளுடைய புருஷன் வீட்டுக்கு வரும் போது நான் அங்கே இருக்கக்கூடாது என்றும் தோன்றிற்று. ஒரு வேளை அங்கே என்னைத் திடீரென்று பார்த்த படபடப்பில், பைத்தியக்காரத்தனமாய்த் தன்னுடைய குட்டைத் தானே உடைத்து விட்டானானால் இவளுடைய மனது என்ன பாடுபடும்? எவ்வளவு அவமான மடைவாள்? அந்த கண்றாவியை நாம் பார்க்க வேண்டாமென்று போவதற்கு கிளம்பினேன். ‘அவர் வெளியிலே போயிருக்கார், அநேகமாக இப்போ வந்தாலும் வந்துடுவர். இருந்துட்டுப் போங்களேன்!’ என்றாள் கற்பகம். ‘வேண்டாம்; எனக்கு ஒரு வேலை இருக்கிறது. இன்னொரு சமயம் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

‘இன்னொரு சமயம் கட்டாயம் வரணும், வந்து இவாளையும் பார்த்துட்டுச் சாப்பிட்டு விட்டுப் போகவேணும்’ என்றாள். ‘ஆகட்டும்!’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன். வந்து, அங்கே காத்துக் கொண்டிருந்த ரிக்ஷாவில் ஏறிக்கொண்டேன். அதேசமயத்தில், அங்கே இன்னொரு ரிக்ஷா வந்து நின்றது. இதற்குள் நன்றாய் இருட்டிவிட்ட போதிலும், வீதியில் போடப்பட்டிருந்த மின்சார விளக்கின் வெளிச்சத்தில், அந்த ரிக்ஷாவிலிருந்த ஆசாமி யார் என்று நன்றாய் தெரிந்தது. மகா-ள-ள-ஸ்ரீ சுந்தரமய்யர்தான். என்னைப் பார்த்ததும் அந்த மனிதனுடைய முகம் பீதியடைந்து பிரேதக் களையை அடைந்தது. ஆசாமி அப்படியே பிரம்மஹத்தி பிடித்தவனைப் போல் ஆகிவிட்டான். நான் அவனுக்குக் கேட்கும் படியாக, ‘ஓய்! பயப்படாதேங்கணும்! உம்ம சமாசாரம் ஒன்றும் உள்ளே சொல்லவில்லை. தைரியமாய்ப் போம்!’ என்று சொல்லி விட்டு, ரிக்ஷாக்காரனை விடச்சொன்னேன். கே. சுந்தரமய்யர் ஏதாவது பதில் சொன்னாரோ, என்னமோ அது என் காதில் விழவில்லை.

ரிக்ஷாக்காரன், நாங்கள் வந்த திசைக்கு எதிர்த் திசையாக வண்டியை இழுத்துக் கொண்டு போனான். ஆனால் அந்தத் தெரு முனைக்குப் போனதும், அங்கே சாலை செப்பனிட்டுக் கொண்டிருந் தார்களாதலால், அதே வீதி வழியாகத் திரும்பி வர வேண்டியதாயிற்று. மறுபடியும் அந்த 44-ம் நம்பர் வீட்டைத் தாண்டிச் செல்லுகையில் அந்த வீட்டிற்குள்ளிருந்து வந்த சப்தம் என் காதுகளில் பயங்கரமாக ஒலித்தது. அதைக் கேட்டதும் மயிர்க் கூச்சல் எடுத்துவிட்டது. அது என்ன சப்தமாயிருக்கும், சொல்லும் பார்க்கலாம்!…”“தெரியவில்லையே, சீன வெடி சப்தமோ?” என்று கேட்டேன்.

“பைத்தியந்தான், சீன வெடி சப்தத்தைக் கேட்டா நான் பயங்கர மடைந்துவிடுவேன்? நாலைந்து பேர் சேர்ந்தார்போல் உரத்த குரலில் கலகல வென்று சிரித்த சப்தந்தான். அதில் ஸ்திரீயின் குரல், புருஷன் குரல், குழந்தைகளின் குரல் – எல்லாம் கலந்திருந்தன. என்ன சந்தோஷம்! என்ன குதூகலம்! இவர்கள் மனுஷர்கள்தானா? மனுஷர்களாயிருந்தால், இவ்வளவு தரித்திரத்துக்கு மத்தியில் எப்படி இத்தனை குதூகலமாய்ச் சிரிக்க முடிகிறது? நம்முடைய வீட்டில் நினைத்தது நினைத்தபடியெல்லாம் நடப்பதற்கு வேண்டிய பணமும் வசதியும் இருந்தும் என்ன பிரயோஜனம்? எல்லாரும் ஏன் இப்படி அழுமூஞ்சியாயிருக்கிறார்கள்? ஒருவேளை, பகவானுடைய சித்தம் இப்படித் தானோ? பணத்துக்கு மத்தியில் துக்கத்தையும், தரித்திரத்துக்கு மத்தியில் சந்தோஷத்தையும் அவர் வேண்டுமென்றே வைத்திருக் கிறாரோ? அப்படியானால், ஸ்வாமிக்கு ‘ஸென்ஸ் ஆப் ஹ்யூமர்’- நகைச்சுவை – என்று சொல்கிறார்களே, அது ரொம்ப இருக்க வேண்டு மல்லவா?…”

இவ்வளவுடன் தசரதராமய்யர் கதையை நிறுத்திவிட்டு எழுந் திருந்தார்.“நன்றாய் இருட்டிப் போய்விட்டது. வீட்டுக்கு போகலாமா? விளக்குப் போடாத இந்தக் கடற்கரையில் இருப்பதே மனத்துக்கு ரொம்ப உற்சாகக் குறைவாயிருக்கிறது” என்றார். “போகலாம்; ஆனால் பாக்கிக் கதையைச் சொல்லிவிடுங்கள் அப்புறம் என்ன ஆச்சு?” என்று கேட்டேன்.

“அப்புறமா? அப்புறம் நான் என் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். அவ்வளவுதான்” என்றார் தசரதராமய்யர். நானும் எழுந்து நின்றேன். அவர் முகத்துக்கு நேரே உற்றுப் பார்த்தபடி, “நீங்கள் பாக்கியைச் சொல்லாமற் போனால், நானே சொல்கிறேன்”என்றேன். அவர் திகைத்துப் போய் என்னையே பார்த்துக்கொண்டு நின்றார்.

“ஆமாம்; நானே சொல்கிறேன். அப்படி அந்த வீட்டிலிருந்து வந்த சிரிப்பு சத்தத்தைக் கேட்டபோது அந்தக் குடும்பத்தின் மேல் நீங்கள் பொறாமையும் துவேஷமும் கொண்டீர்கள். கற்பகத்தின் மேல் அதற்கு முன்னால் ஏற்பட்டிருந்த இரக்கம் அநுதாபமெல்லாம் பறந்து விட்டது. அவர்கள் அவ்வளவு சந்தோஷமாயிருந்தது உங்களுக்குப் பொறுக்கவில்லை. சில நாள் வரையில் மனத்திற்குள் புழுங்கிக் கொண்டிருந்தீர்கள். பிறகு ஒரு நாளைக்கு கே. சுந்தரமய்யரைக் கூப்பிட்டு அனுப்பி ஷேர் மார்க்கெட்டில் பிரபலமான ஒரு மார்வாடியிடம் ஏஜென்ட் வேலை பண்ணி வைத்தீர்கள். அவர் எப்படி யாவது பணக்காரராகிவிட்டால், அவருடைய குடும்ப சுகம் நாசமாகும் என்ற துர்எண்ணத்தின் பேரில் அப்படிச் செய்தீர்கள். இதெல்லாம் உண்மையா, இல்லையா?” என்று கேட்டேன்.
தசரதராமய்யர் வாயைப் பிளந்துவிட்டார். “அடப்பாவி! இவ்வளவு சரியாய் எப்படி ஐயா சொன்னீர்? ஏதாவது உம்மிடம் தேவதாசக்தி இருக்கிறதா? என்ன?” என்று கேட்டார்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை. இந்த கே. சுந்தரமய்யர் என்பவரைக் கொஞ்ச நாளைக்கு முன்பு எனக்குத் தெரியும். அவருக்கு திடீரென்று யாரோ முக்கிய மனுஷர் சிபார்சின் மேல் நல்ல உத்தி யோகம் ஆன விவரமும் தெரியும். ஆனால், யார் அந்தப் பெரிய மனுஷர், இவர்மேல் அவருக்கு என்ன சிரத்தை என்பதெல்லாம் தெரியாது. நீங்கள் சொன்னதிலிருந்து, இரண்டும் இரண்டும் நாலு என்று கணக்குப் போட்டுப் பார்த்தேன். அவ்வளவுதான்” என்றேன்.
“பலே கெட்டிக்காரர் ஐயா, நீர்! பலே கெட்டிக்காரர்” என்றார் தசரதராமய்யர். மேலும்,“ஆனால், நீர் சொன்னதில் ஒன்றுமட்டும் சரியாயில்லை. துவேஷத்தினாலே வேலை பண்ணிவைத்துவிடுவேனா? கற்பகத்தின் கதியில் இரக்கப்பட்டுத்தான் அவனைக் கூப்பிட்டு வேலை பண்ணி வைத்தேன். அவனும் பலே கைகார ஆசாமி. கொஞ்ச நாளைக்குள் தானே ‘புரோக்கர்’ ஆகி மள மளவென்று பணம் சேர்த்துவிட்டான். கெட்டிக்காரன் தான், சந்தேகமில்லை. ஆனால் கொஞ்சமும் நன்றி யில்லாத மனுஷன் கைதூக்கி விட்டானே என்று அவனுக்குக் கொஞ்சம் கூட விசுவாசம் கிடையாது. ஒருவேளை வெட்கமாயிருந்ததோ, என்னமோ, அப்புறம் என்னிடம் வருவதேயில்லை. பின்னே நானே எப்படி அவனுடன் சினேகம் கொண்டாடி கொண்டு போவது?… ஆமாம்; அவனை உமக்குத் தெரியும் என்றீரே? இப்போது கூடப்பழக்கம் உண்டோ? அவன் வீட்டுக்கு போவதுண்டோ?” என்று
கேட்டார்.

“கிடையாது, கிடையாது. எப்போதோ ஒரு சமயம் நான் குடியிருந்த வீட்டிலேயே அவரும் குடியிருந்தார். அப்போது பழக்கம். அவர் நல்ல அந்தஸ்த்துக்கு வந்த பிறகு நான் பார்க்கவேயில்லை. எழும்பூரிலே ஒரு பங்களாவிலே அவர் இப்போது இருக்கிறார் என்று மட்டும் தெரியும். வேறொன்றும் தெரியாது.”தசரதராமய்யர் “இவ்வளவு தானா?” என்றார். பிறகு சட்டென்று ஏதோ யோசனை தோன்றியவர் போல் என் கையைப் பிடித்துக்கொண்டார். “நான் ஒன்று சொல்கிறேன் கேட்கிறீரா? நாம் இரண்டு பேரும் இப்போது எழும்பூர்ப் பக்கம் போவோம். அவன் வீட்டு
வாசல் வழியாகப் போய்ப் பார்ப்போம்” என்றார். எனக்கும் அந்த ஆவல் இருந்தபடியால் நான் சம்மதித்தேன்.
காரில் ஏறிக் கொண்டு கிளம்பினோம். போகும்போது அவர், “ஆமாம்; கற்பகத்தின் மேல் இரக்கப்பட்டுத்தான் அவள் புருஷனுக்கு வேலை பண்ணி வைத்தேன். ஆனால், இப்போது பணம் வந்த பிறகும் அவர்கள் முன்போல் சந்தோஷமா யிருக்கிறார்களா? இதைத் தெரிந்து கொள்ள ஆவலாய்த்தான் இருக்கிறது…” என்று முணுமுணுத்துக்
கொண்டு வந்தார்.

எழும்பூரில் குறிபிட்ட சாலை வந்ததும், வண்டியை நிறுத்தினோம். இரண்டு பேரும் இறங்கி அந்தச் சாலை வழியே நடந்து சென்றோம். “கே.எஸ். ஐயர்” என்று போட்டிருந்த பங்களாவின்
எதிரே ஒரு ‘பங்’கில் சோடாக் கடை ஒன்று இருந்தது. அங்கே நின்று வெற்றிலை பாக்குப் போட்டுக் கொள்ளத் தொடங்கினோம். அப்போது, எதிரே பங்களாவின் மச்சிலிருந்து ஒரு ஸ்திரீயின் விம்மல்குரல் கேட்டது. அந்த மாதிரி சோகமான குரலை நான் கேட்டதே கிடையாது. திடீரென்று ஒரு புருஷக் குரல், “ஏ தரித்திரமே! பிணமே! நீ ஆஸ்பத்திரியிலேயே செத்து வைத்திருக்கக் கூடாதா? இங்கே வந்து என் பிராணனை வாங்குகிறாயே?” என்று கத்திற்று.

பட், பட், பட் என்று அடிக்கும் சத்தம் கேட்டது. அந்த ஸ்திரீயின் விம்மல் குரல் இப்போது அழுகையாக மாறிற்று. அந்த அழுகைச் சத்தத்தை அடக்கிக் கொண்டு, புருஷக் குரல், “ஆமாம், நான் சொல்றதை நன்றாய்க் கேட்டுக்கோ. அவள் இங்கே வரத்தான் வருவாள். இந்த வீட்டில் உனக்கிருக்கிற பாத்தியதை அவளுக்கும் உண்டு. உனக்கு இஷ்ட மில்லாமற் போனால், நீதான் வீட்டை விட்டுப் போகணும்” என்று இரைந்தது. என்னுடைய நெஞ்சு பிளந்துவிடும் போலிருந்தது. தசரதராமய் யரைப் பார்த்தேன். அவர் வேறு பக்கம் திரும்பிக் கொண்டிருந்தார்.

அவர் சந்தோஷப்பட்டாரோ, துக்கப்பட்டாரோ, எனக்குத் தெரியாது. அப்போது சோடாக் கடைக்காரன், “ஐயா நன்னாத் தண்ணி போட்டுட்டு வந்திருக்காங்க; அதுதான் இந்தப் பாடுபடறது. போது விடிஞ்சால் எல்லாம் சரியாய்ப் போய்விடும் ஐயாவும் அம்மாவும் கொஞ்சிக் குலாவுவாங்க” என்று சொல்லிப் புன்னகை புரிந்தான். பின்னோடு “இந்தச் சென்னைப் பட்டணத்திலே மதுவிலக்குச் சட்டம் கொண்டு வராமே, காங்கிரஸ் மந்திரிங்க போய்ட்டாங்களே, அதுதான் வருத்தமா யிருக்கு” என்றான்.

நாங்கள் இருவரும் வந்த வழியே திரும்பிப் போனோம். வண்டியை அடைந்ததும், “உங்கள் மனது இப்போது திருப்தியாகி விட்டதா?” என்று ஆத்திரத்துடன் கேட்டேன். தசரதராமய்யர் அதற்கு பதில் சொல்லாமல், “காரில் ஏறிக்கும் ஐயா! உம்மை வீட்டில் கொண்டு விட்டுப் போறேன்” என்றார். நான் மறுத்துவிட்டேன். அவர் எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லியும் கேட்கவில்லை. “என் வீடு இங்கே கிட்டத்தான் இருக்கு; நான் போய்க் கொள்கிறேன்; நீங்கள் போய் வாருங்கள்” என்றேன். “அப்படியானால் சரி” என்று அவர் போய் விட்டார்.
* * *
உண்மையில் அங்கிருந்து என்னுடைய வீடு முக்கால் மைலுக்கு மேல் இருந்தது. மூடி போட்டதனால் மங்கலடைந்த சாலை விளக்குகளின் வெளிச்சத்தில் இரவு எட்டு மணிக்கு அவ்வளவு தூரம் நடந்து போவது உற்சாகமான காரியம் இல்லை. ஆனாலும், தசரதராமய்யருடைய மோட்டாரில் என்னுடைய வீட்டுக்குப் போய் இறங்க எனக்கு விருப்பமில்லை. பிறருடைய சந்தோஷத்தைக் கண்டு பொறுக்காத அந்த மனுஷனை என் வீட்டுக்கு ஏன் அழைத்துப் போகவேண்டும்? அதனால் என்ன கெடுதல் விளையுமோ, என்னமோ, என்ற ஒரு குருட்டு நம்பிக்கை அச் சமயம் எனக்கு ஏற்பட்டு விட்டது. அதை விட முக்கியமான இன்னொரு காரணமும் இருந்தது.

சித்தி விநாயகர் கோவில் தெரு 44-ம் நம்பர் வீடுதான் என்னுடைய வீடு என்று அவருக்கு தெரியப்படுத்தவும் எனக்கு இஷ்டமில்லை. அதோடு, அவரை நிராகரித்த கற்பகத்தின் கணவன் கே. சுந்தரமய்யர் அல்ல அந்த பாக்கியத்தை செய்தவன் நான் என்பதும் தான் அவருக்கு ஏன் தெரிய வேண்டும்? ஆம்; தசரதராமய்யர் சொன்ன கதையில் அவருக்குத் தெரியாத சில விஷயங்கள் எனக்குத் தெரிந்திருந்தன. மேற்படி 44-ம் நம்பர் வீடு என்னுடைய சொந்த வீடு; கற்பகம் எவ்வளவோ செட்டாகக் குடித்தனம் பண்ணி, என்னுடைய சொற்ப சம்பளத்தில் மிச்சம் பிடித்துச் சேர்த்த பணத்தைக் கொண்டு வாங்கியது. எங்கள் வீட்டு மாடியை மட்டும் சில சமயம் வாடகைக்கு விடுவோம். அந்த மாதிரி மூன்று வருஷத்துக்கு முன்னால், கல்யாண சுந்தரம் அய்யருக்கு மாடியை வாடகைக்கு விட்டிருந்தோம். சில சமயம் அவர் கல்யாண சுந்தரமய்யராயும் சில சமயம் கே. சுந்தரமய்யராகவும் வேறு சில சமயம் கே. எஸ். ஐயராகவும் இருப்பார். அவரும் அவருடைய மனைவியும் ஒரே ஒரு குழந்தையுடன் வந்து சில நாளைக்கு எங்கள் மாடியில் குடியிருந்தார்கள். மனைவிக்கு ஏதோ உடம்பு சரியில்லையென்றும் சிகிச்சைக்காக அழைத்து வந்திருப்பதாகவும் சொன்னார். பிறகு, கொஞ்ச காலம் ஆஸ்பத்திரியில் கொண்டுவிட்டிருந்தார்.
கையில் பணமில்லாமல் ரொம்பக் கஷ்டப்படுகிறார் என்று தெரிந்தது. இன்னும் சில நாளைக்கெல்லாம், அந்த ஸ்திரீ அவருடைய சொந்த மனைவியல்ல, அவர்மேல் காதல் கொண்டு ஓடி வந்து விட்டவள் என்றும் தெரிய வந்தது. அதன் மேல் நானும் கற்பகமுமாக யோசித்து, அவர்களைப் போகச் சொல்லி விடுவதென்று தீர்மானித்தோம்.

“நீங்கள் இருந்த நாளைக்கு வாடகை கொடுக்க வேண்டாம்; வீட்டை மட்டும் காலி பண்ணி விடுங்கள்” என்று நல்ல வார்த்தையாகச் சொல்லி அனுப்பி வைத்தோம். கொஞ்ச காலத்துக்குப் பிறகு, திடீரென்று அவர்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்று அறிந்து சந்தோஷப்பட்டோம். அவர்கள் எங்கள் வீட்டு மாடியில் குடியிருந்த சமயத்தில்தான், ஒருநாள், கல்யாண சுந்தரமய்யரைப் பார்ப்பதற்காக தசரதராமயயர் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டுப் போனது. அச்சமயம் நான் வீட்டில் இல்லை. கே. சுந்தரமய்யர் வாசலில் ரிக்ஷாவில் வந்திறங்கவே, அவர்
தான் கற்பகத்தின் புருஷன் என்ற எண்ணத்தை ஊர்ஜிதம் செய்து கொண்டு தசரதராமய்யர் திரும்பிப் போயிருக்க வேண்டும். ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் நானும் குழந்தைகளுக்குத் துணிமணி பட்டாசுக் கட்டுகள் வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தேன். கற்பகம் என்னிடம், “யார் வந்திருந்தார்கள், தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, தசரதராமய் யரைப்பற்றிச் சொன்னாள். அப்போது பழைய கல்யாண சம்பவம் ஞாபகம் வரவே அதைப்பற்றிச் பேசத் தொடங்கினோம். “உங்களைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள எனக்கு இஷ்டமில்லை” என்று நான் சொன்னவுடனே, தசரதராமய்யரின் முகம் எப்படிப் போயிற்று என்று கற்பகம் ‘இமிடேட்’ பண்ணிக் காட்டினாள். அதைப் பார்த்துவிட்டு நானும் குழந்தைகளும் ‘ஹோ’ என்று சிரித்ததும், அவளும் எங்களுடன் சேர்ந்து சிரித்ததும் எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது.

அந்த சிரிப்பைக் கேட்டுத்தான் தசரதராமய்யருக்கு அவ்வளவு கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால், அவர் கூறிய கதையில் எனக்கும் புரியாதது ஒன்றே ஒன்றுதான். கே.சுந்தரமய்யர் எதற்காகக் கற்பகத்தின் பெயரை உபயோகப்படுத்துகிறார்? நாங்கள் என்றைக்காவது பழைய கதை பேசிக் கொண்டிருந்தது அவர் காதில் விழுந்து, அதன் மேல் தசரதராமய்யரிடம் பணம் வாங்குவதற்கு அதுதான் வழி என்று நினைத்தாரோ, என்னமோ? எப்படியானாலும், அவர் வெற்றி யடைந்துவிட்டார். தசரதராமய்யர் ஏமாந்துபோய், கற்பகம் தம்மை நிராகரித்ததற்கு அவளைப் பழிவாங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்! இந்த நிலைமை யில், மறுபடியும் அவரை என் வீட்டுக்கு அழைத்துப் போவானேன்?

அவர் தம்முடைய தவறுதலை உணர்ந்து மறுபடியும் கோபம் அடைய இடங்கொடுப்பானேன்? பொல்லாத அந்த மனுஷனுக்குக் கோபம் வந்தால் என்ன செய்வானோ, என்னமோ யார் கண்டது? ஆகையினால்தான் வீட்டுக்குக் கால் நடையாகவே போகிறதென்று தீர்மானித்து அவ்வாறே சென்றேன்.
* * *
சுமார் எட்டரை மணிக்கு என்னுடைய வீட்டை அடைந்தேன். வாசல் கதவு முக்கால்வாசி சாத்தியபடி இருந்தது. உள்ளே கற்பகமும் குழந்தைகளும் பேசும் குரல் கேட்டது. ஒரு நிமிஷம் வாசற்படியிலேயே நின்று – ஆமாம் – ஒட்டுத்தான் கேட்டேன். “தெரியுமா, குழந்தைகளே! இந்தத் தடவை பட்டாசு வேண்டும், மத்தாப்பு வேண்டும் என்று நீங்கள் அப்பாவைத் தொந்தரவுபடுத்தக்கூடாது. அப்பாவுக்கு இந்த வருஷம் வேலை இல்லையோல் லியோ?” என்று கற்பகம் சொன்னாள்.

என்னுடைய மூத்த பெண் ராஜம், “ரொம்ப நன்றாயிருக்கு அம்மா, நீ சொல்கிறது? இந்த வருஷம் தீபாவளிக்கு யாராவது பட்டாசு, மத்தாப்பு சுடுவாளோ? காங்கிரஸ்காராளே மந்திரி வேலையை விட்டுவிட்டாளாம்! தேசம் ஒரே துக்கத்திலே ஆழ்ந்திருக்கு; இப்பத்தானா பட்டாசு சுடுகிற சமயம்?” என்றாள்.

இதைக் கேட்டபோது என்னை அறியாமல் என் கண்களில் ஜலம் வந்தது. அப்போது, என்னுடைய இரண்டாவது பிள்ளை ரகு சொன்னான்:- “அம்மா! நான் ஒன்று சொல்றேன், கேக்கறாயா? நான் ஜெர்மன் ஹிட்லருக்கு ஒரு தந்தி அனுப்பப் போறேன்! ‘அடே ஹிட்லர் ராஸ்கல்! நீ யுத்தம் பண்ணப்போகத்தானே எங்க அப்பாவுக்கு வேலை போச்சு? அதனாலே தீபாவளிக்கு எங்களுக்குப் பட்டாசுக் கட்டு இல்லை. ஆகையால், நீ ஒரு ஏரோப்ளேனைத் தீபாவளி அன்னிக்குக் காலம்பர அனுப்பி, எங்காத்து வாசல்லே, திடும் திடும் திடும்னு பத்து
வெடிகுண்டு போடச் சொல்லணும்!…”

இப்படி ரகு சொன்னதும், கற்பகம், ராஜம், ராகவன் எல்லாரும் சேர்ந்து கலீர் என்று சிரித்தார்கள். ரேழியில் நின்று நானும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சிரித்தேன். பகவானை நினைத்துக் கைகூப்பி, “ஸ்வாமி! எனக்கு வேலை கிடைக்கட்டும், கிடைக்காமல் போகட்டும்; தரித்திரமோ, சம்பத்தோ எது வந்தாலும் சரிதான். ஆனால் என் வீட்டில் மட்டும் எப்போதும் இந்த மாதிரியே குதூகலச் சிரிப்பின் ஒலி கேட்டுக் கொண்டிருக்கும்படி அருள்புரிய வேண்டும்” என்று வேண்டிக்கொண்டேன்.

– ஆனந்த விகடன், தீபாவளி மலர், 5-11-39

You may also like
வாழ்வும் தாழ்வும் – கல்கியின் சிறுகதைகள் – 10
கல் சொன்ன கதை – கல்கியின் சிறுகதைகள் – 8

Leave a Reply