Home > கதை > பிச்சுவையர் பவுன் வாங்கியது – கல்கியின் சிறுகதைகள்- 6

பிச்சுவையர் பவுன் வாங்கியது – கல்கியின் சிறுகதைகள்- 6

பாபவிநாசம், பிராணதார்த்திஹர அய்யர் குமாரர், பிச்சுவையரின் அகடவிகட சாமர்த்தியங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவருடைய சாமர்த்தியங்கள் அவருக்கே நன்றாய்த் தெரிந்தவை. தம்மை ஏமாற்றக் கூடியவன் இந்த ஜம்புத்வீபத்தில் ஒருவரும் கிடையாது என்று சொல்லிக் கொள்வார். அவருடைய கிராமாத்தாருக்கும் அவ
ருடைய வல்லமைகளில் பூரண நம்பிக்கையுண்டு. “பா.பி. பிச்சுவை யரா? அவர் ஏமாந்தால் எமன் ஏமாந்த மாதிரி!’ என்று அவர்கள் பேசிக் கொள்வார்கள்.

ஆனால் பிச்சுவையரின் சாமார்த்தியங்களில் நம்பிக்கையில்லாத ஒரே ஒரு ஆத்மா உண்டு. அது அவருடைய தர்ம பத்தினியாகிய பர்வதத்தம்மாள்தான். பெயருக்கேற்ப பர்வாதகாரமாய் விளங்கிய அந்த அம்மாள் தினம் நூறு முறை “இந்த அசடைக் கட்டிக்கொண்டு நானில்லாமல் வேறொரு பொம்மனாட்டியினால் குடித்தனம் பண்ண முடியுமா?” என்பதாகத் தன்னுடைய அந்தரங்க அபிப்ராயத்தை வெளிப்படுத்துவது வழக்கம்.

ஒரு மாதத்திற்கு முன்பு ஒருநாள் காலையில் பா.பி. பிச்சுவையர் பழையது சாப்பிட்டுவிட்டு, தாழ்வாரத்தில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டே, “இரண்டு* தம்பிடி புகையிலையை இந்த முட்டாள் காலணாவுக்கு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான். நான் கண்ணை மூடினால் நீங்க ளெல்லாரும் உருப்பட்டு வாழ்வது ஏது? இரண்டு நாளில் சொத்தெல்லாம் சூறாவளிதான்” என்பதாகத் தமது எட்டு வயதுப் பையனைக் கடிந்து கொண்டிருக்கையில், வாசலில் “சாமி!” என்று சத்தம் கேட்டது.

பிச்சுவையர், வெற்றிலைப் பெட்டியை மூடி பத்திரமாய் அலமாரியில் வைத்துவிட்டு, வெளியே வந்தார். ஒரு குறத்தி நின்று கொண்டிருந்தாள். அவள் பிச்சை கேட்க வந்தவள் என்று நினைத்த பிச்சுவையருக்கு மிகக் கோபம் வந்தது. “யார் நீ ? இங்கென்ன வேலை? போ ! பிச்சை கிடையாது!” என்று இடி இடித்தாற்போல் கர்ஜித்தார்.
குறத்தி அக்கம் பக்கம் பார்த்துவிட்டுக் கொஞ்சம் மெதுவான குரலில் “ஓ ஐயரே! கோபம் என்னத்திற்கு ? நான் பிச்சை கேட்க வரவில்லை. கொஞ்சம் பவுன் இருக்கிறது, வாங்கிக் கொள்கிறீரா?” என்று கேட்டாள்.

பிச்சுவையர் திடுக்கிட்டுப் போனார். உண்மையென்னவென்றால், சென்ற ஒரு மாத காலமாக பிச்சுவையரின் மனதெல்லாம் பவுன் மேலேயே இருந்தது. சதா பவுனையே தியானித்துக் கொண் டிருந்தார் என்று சொல்லலாம். “அடடா! ஒரு மாதத்திற்கு முன்னால் கையில் ரொக்கமாய் ரூ.1500 இருந்ததே! அதை அப்படியே கொடுத்து பவுன் வாங்கி வைக்காமல் போனோமே! இருந்தபடி இருக்கட்டுமென்று 100 பவுன் வாங்கிப் போட்டிருந்தால் இப்போது 500 ரூபாய் ஒரு கஷ்டமில்லாமல் ‘பிரைஸ்’ அடித்திருக்கலாமே! மோசம் போயிற்றே! என்ன முட்டாள்தனம்?” என்று ஓயாது ஜபித்துக் கொண்டிருந்தார். ஆகவே, இப்பொழுது “பவுன் வாங்கிக் கொள்கிறீரா?” என்று குறத்தி கேட்டதும், பிச்சுவையரின் நெஞ்சு பட்பட் என்று அடித்துக் கொள்ளத் தொடங்கியது. “பவுனா? எத்தனை பவுன் ? என்ன விலை? எங்கே யிருக்கிறது?” என்று பரபரப்புடன், ஆனால் மெதுவான குரலில் கேட்டார்.

குறத்தி “எவ்வளவு இருந்தால் உங்களுக்கென்ன சாமி? எல்லாம் உங்களால் வாங்க முடியுமா? 100 பவுனுக்குக் கிட்டத்தட்ட இருக்கிறது. உங்களுக்கு வேண்டுமென்பதற்குப் பணம் கொண்டு வாருங்கள்.
நம்ம ஆண்பிள்ளை அய்யனார் கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கிறாங்க. அவங்களிடம் இருக்கிறது” என்றாள் “என்ன விலை, சொல்லு” என்றார் பிச்சுவையர்.

“விலை என்னாங்க? ஐயருக்குத் தெரியாதா? இப்பொழுது பவுன் 181/2 ரூபாய் விற்கிறது. 16 ரூபாய்க்குத் தருகிறோம்” என்றாள் குறத்தி. பிச்சுவையர் நாவில் ஜலம் கொட்டியது. எப்படியாவது உருட்டி மிரட்டி பவுன் பத்து ரூபாய்க்கு வாங்கி விட முடியாதா என்று நினைத்தார். 14 ரூபாய்க்குக் கட்டாயம் வாங்கி விடலாமென்று தீர்மானித்தார். ஆனால் திடீரென்று ஒரு சந்தேகம் உதித்தது. குறவர்கள் ஆயிற்றே? ஏமாற்றி அழைத்துக் கொண்டு போய் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு விட்டால்? “போய் ஆண் பிள்ளைகளை இங்கேயே அழைத்து வந்துவிடு” என்றார் பிச்சுவையர்.

“அது முடியாது. சந்தேகமிருந்தால் விட்டுவிடுங்கள். தெருவுக்குள் அவங்க வரமாட்டாங்க. நாலு பேருக்குத் தெரியக்கூடிய சங்கதியா?” என்றாள் குறத்தி. பிச்சுவையருக்கு இது நியாயமென்றே தோன்றியது. ஊருக்கு வெளியில் காதுங் காதும் வைத்தாற் போல் காரியத்தை முடிப்பது தான் நல்லது என்று அவரும் நினைத்தார். முன் ஜாக்கிரதையாக ஒரே ஒரு பவுனுக்குப் பணம் கொண்டு போய்ப் பார்த்து விஷயம் உண்மையாயிருந்தால் மறுபடியும் வந்து பணம் எடுத்துக் கொண்டு போகலாம் என்று முடிவு செய்து உள்ளே சென்றார். இரும்புப் பெட்டியைத் திறந்து பதினாலு ரூபாய் எடுத்து, பத்து ரூபாயைத் தனியாகவும், நாலு ரூபாயைத் தனியாகவும் முடிச்சுப் போட்டுக் கொண்டு கிளம்பினார்.

அடுப்பங்கரையிலிருந்த பர்வதத்தம்மாள் பெட்டி திறக்கும் சத்தம் கேட்டு தன்னுடைய பெண் குஞ்சம்மாளை “அப்பா எங்கே போகிறார் கேளு” என்றாள். குஞ்சம்மாள் கூடத்துக்கு வந்து “அப்பா! எங்கே போறே?” என்று கேட்டாள். “மூதேவி! மூதேவி! போகிறபோது எங்கே போறேயென்று கேட்கிறது. எத்தனை தடவை சொன்னாலும் தெரிகிறதில்லை” என்று சொல்லிக் கொண்டே பிச்சுவையர் வெளியே சென்றார். குஞ்சம்மாள் அடுப்பங்கரைக்குப் போய் “அம்மா! அப்பா மூதேவிக்குப் போறாளாம்!” என்று தெரிவித்தாள்.

2

அய்யனார் கோவிலுக்கு அப்பாற் சென்றதும், ஒரு சப்பாத்திப் புதரின் மறைவில் இரண்டு குறவர்கள் உட்கார்ந்திருப்பதைப் பிச்சுவையர் பார்த்தார். “இரண்டு பேர்தான்! மோசமாயிருந்தாலும் ஒரு கை பார்க்கலாம்” என்று அவர் எண்ணிக்கொண்டார். “சாமி! உட்காருங்க!” என்றான் ஒரு குறவன். “எவ்வளவு பணம் கொண்டு வந்தீங்க?” என்றான் மற்றவன்.

“விலை என்ன? முதலில் அது தீரணும்” என்றார் பிச்சுவையர்.கொஞ்ச நேரம் பேரம் நடந்த பிறகு, “பதினாலு ரூபாய்தான் கொண்டு வந்திருக்கின்றேன். இஷ்டமிருந்தால் கொடு, இல்லாவிட்டால் போ!” என்று கண்டிப்பாய்ச் சொன்னார். “சரி! ஐயரை ரொம்ப கசக்கிறதில் பிரயோஜனமில்லை. எவ்வளவு பவுன் வேண்டும்? சொல்லுங்கள்” என்றான் குறவன்.

“இப்பொழுது ஒரு பவுனுக்குத்தான் பணம் கொண்டு வந்திருக் கிறேன். அப்புறம் வேண்டுமானால் வாங்கிக் கொள்கிறேன்” என்றார் பிச்சுவையர். “ஒரு பவுனுக்குத்தானா இவ்வளவு பாடு? சரி! எடுங்கள் பணத்தை” என்றான் குறவன். பிச்சுவையர் இரண்டு முடிச்சுக்களையும் அவிழ்த்துப் பதினாலு ரூபாயையும் கையில் எடுத்துக்கொண்டார். “எங்கே? பவுனை எடு!” என்றார்.

“நானும் பார்த்தாலும் பார்த்தேன். இந்த ஐயரைப் போல் பார்த்ததில்லை. எவ்வளவு சந்தேகம்?- சரி. மூட்டையைப் பிரி” என்று மற்றவனைப் பார்த்து முதல் குறவன் சொன்னான். இரண்டாவது குறவன் கையில் அழுக்குத் துணியால் கட்டிய ஒரு மூட்டை இருந்தது. அவன் அந்த அழுக்குத் துணியால் கட்டிய ஒரு மூட்டையை அவிழ்த்தான். கண் கொட்டாமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார் பிச்சுவையர். மூட்டையை அவிழ்த்ததும் அதனுள்ளிருந்த பவுன் திரள்கள் பளபள வென்று கண் கூசும்படி பிராகசித்தன. பிச்சுவையரின் தலை கிறுகிறு வென்று சுழன்றது. அவ்வளவு பவுன்களையும் அள்ளிக்கொண்டு விடலாமாவென்று தோன்றியது. “போடுங்கள் பணத்தை” என்று சொல்லி முதல் குறவன் கையை நீட்டினான். பிச்சுவையர் தன்னையறியாமல் பணத்தை அவன் கையில் போட்டார்.

அதே சமயத்தில் அவருக்குப் பின்னால் கொஞ்ச தூரத்திலிருந்து “ஓய் அய்யரே! எத்தனை நாளாக இந்த வேலை செய்கிறீர்?” என்று யாரோ கூறியது கேட்டது. பிச்சுவையர் திரும்பிப் பார்த்தார். இரண்டு போலீஸ்காரர்கள் கையில் விலங்குகளுடன் வருவதைக் கண்டார். அவர் உடம்பு நடுநடுங்கிற்று. மேலெல்லாம் வியர்வை வியர்த்து வழிந்தது.
இதற்குள், குறவர்களில் ஒருவன் ரூபாயையும், மற்றவன் பவுன் களையும் மூட்டைக் கட்டிக் கொண்டான். போலீஸ்காரர்கள் வந்து இரண்டு குறவர்களில் கைகளிலும் விலங்கைப் பூட்டினார்கள்.
தமக்கும் விலங்கு போடாததைக் கண்டதுந்தான் பிச்சுவையருக்கு கொஞ்சம் உயிர் வந்தது.
சேவகர்கள் கையிலிருந்த தடியினால் குறவர்களைத் தலைக்கு ஒரு அடி கொடுத்து “நடுவுங்கள், போலீஸ் ஸ்டேஷனுக்கு” என்றனர்., “ஐயரே ! நீரும் வாரும்” என்றான் சேவகர்களில் ஒருவன்.

முதலில் ஒரு சேவகனும், பிறகு குறவர்களும், அவர்களுக்குப் பிறகு பிச்சுவையரும், எல்லாருக்கும் பின்னால் இன்னொரு சேவகனு மாகக் கொஞ்ச தூரம் போனார்கள். பிச்சுவையர் என்னவெல்லாமோ ஆயிரம் யோசனை செய்தார். கொஞ்சங் கொஞ்சமாக அந்த ஊர்வலத் திலிருந்து நழுவி ஒருபுறம் ஒதுங்கினார். சேவகர்கள் ஒன்றும் சொல்ல வில்லை. எனவே சிறிது தைரியங் கொண்டு பின் தங்கினார். அதற்கும் சேவகர்கள் ஆட்சேபிக்கவில்லை.
பிச்சுவையரின் சங்கடம் அதிகமாயிற்று. அவர்களைப் பின் தொடர்ந்து போவதா, திரும்பி வீட்டுக்குச் செல்வதா என்ற சந்தேகம் அவரைப் பற்றிக் கொண்டது. “நாம் பின் தங்குவதைச் சேவகர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? எல்லாம் மோசமாயிருக்குமோ?” என்று சந்தேகித்தார். “பின் தொடர்ந்து போனால் போலீஸ் ஸ்டேஷன் சேர வேண்டியதாகுமோ?” என்று பயந்தார். திரும்பிவிட்டால் ரூ. 14 அடி யோடு போனதுதானே?” என்று தவித்தார்.
இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவருடைய நடை மெதுவாகி வந்தது. கடைசியில், மற்ற நால்வரும் அவரைத் திரும்பிப் பார்க்காமல் வெகு தூரம் போன பின்னர், அவர் நின்று வந்த வழியே திரும்பினார். உடனே அவருக்கு ஒன்று ஞாபகம் வந்தது. குறத்தி எங்கே? அய்யனார் கோவில் சப்பாத்திக் காட்டில் தம்மைக் கொண்டு விட்ட பிறகு அவள் மாயமாய் மறைந்து போனாள்! எப்படி, எங்கே போயிருப்பாள்?
3
பிச்சுவையரின் கால்கள் அவரை நேராகச் சப்பாத்திக் காட்டில் கொண்டு போய்ச் சேர்த்தன. குறவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் ஏதோ பளபள வென்று மின்னுவதைக் கண்டார் பிச்சுவையர். ‘ஆகா! என்ன ஆச்சரியம்! பவுனைப் போலல்லவா காணப்படுகிறது? குறவர்கள் சத்தியந் தவறாதவர்கள் என்று சொல்கிறார்களே?
ஒருவேளை வாங்கிக் கொண்ட ரூபாய்க்கு பவுனைப் போட்டு விட்டுப் போயிருக்கிறார்களே? என்றெண்ணி நெருங்கினார்.

‘ரொம்ப சின்னதாய் இருக்கிறதே? ஒருவேளை அரைப்பவுனா இருக்குமோ?’ கையில் எடுத்தார். சீச்சீ என்ன ஏமாற்றம்! கையிலெடுத்ததை வீசியெறிந்தார் பிச்சுவையர். அது ஒரு அம்மன் காசு, மூலாம் பூசியது. ஓரணா கூடப் பெறாது… இப்பொழுது பிச்சுவையருக்கு உண்மை விளங்கிற்று. குறவர்கள் மூலாம் பூசிய அம்மன் காசுகளை காட்டி ஏமாற்றி விட்டார்கள். அதி சாமார்த்தியசாலியாகிய தம்மை அந்தப் பட்டிக்காட்டுக் குறவர்கள் தலையைத் தடவி விட்டார்கள். என்ன அவமானம்?… ஆனால் அந்தப் போலீஸ்காரர்கள் அங்கு எப்படி வந்து குதித்தார்கள்? தம்மை மட்டும் விட்டுவிட்டு அவர்கள் போன காரணம் என்ன? இது மட்டும் இன்னும் மர்மமாகவே யிருந்தது. பிச்சுவையருக்கு மற்றொரு யோசனை தோன்றி, எறிந்த அம்மன் காசை மறுபடியும் கையில் எடுத்துக் கொண்டார். விரைவாக வீடு திரும்பினார்.
* * *
அவர் வீடு வந்தபோது அப்போது பர்வதத்தம்மாள் வீட்டில் இல்லை. குழந்தை குஞ்சுவைக் கூப்பிட்டார். “இதோ பார்! எங்கேயாவது போகும்போது ‘எங்கே போறே’ ன்னு கேட்க கூடாது என்று செல்லியிருக்கிறேனோ, இல்லையா” என்று கேட்டார். குஞ்சு பேசாம லிருந்தாள். பிச்சுவையர் அவள் முதுகில் பொத்து, பொத்து என்று நாலடி போட்டார். குஞ்சு கூகூ வென்று அழுதுக்கொண்டே “அம்மா வரட்டும், சொல்றேன்” என்றாள். பிச்சுவையருக்கு தூக்கி வாரிப் போட்டது. எல்லா விஷயமும் பர்வதத்தம்மாளுக்குத் தெரிந்துவிட்டால்? – சீச்சீ குஞ்சுவுக்கு அதெல்லாம் என்ன தெரியும்? வீண் கிலி!

இருந்தாலும், பர்வதத்தம்மாள் குளத்திலிருந்து வருவதற்குள் குஞ்சுவை சமாதானப்படுத்தி விடுவது நல்லதென்று தோன்றியது. “குஞ்சு! இதோ பார். உனக்கு ஒரு பவுன் வாங்கி வந்திருக்கிறேன்” என்று சொல்லி, அம்மன் காசை கையில் கொடுத்தார். குஞ்சு அதை வாங்கி வீசி எறிந்தாள். அது சாக்கடையில் போய் விழுந்தது. பிச்சுவையருக்குத் தலைக்குமேல் கோபம் வந்தது. “இப்பொழுது போய் அதை எடுத்துக் கொண்டு வரயா இல்லையா?” என்று கையை ஓங்கினார்.

குஞ்சு போய் எடுத்துக் கொண்டு வந்தாள். “அப்பா குழந்தைக்குப் பவுன் வாங்கி வந்தால் சமத்தா வாங்கிறதா? எறிகிறதா?” என்றார் பிச்சுவையர். “எனக்குத் தெரியாதாக்கும்? அது அம்மன் காசு” என்றாள் குஞ்சு.
பிச்சுவையர் அளவிலா ஆச்சரியத்துடன் “உனக்கு எப்படித் தெரியும்?” என்றார். “அம்மாதான் எனக்குக் காசு மாலைக்காக நிறைய வாங்கியிருக்கிறாளே ஏஏஏ” என்று விம்மினாள் குஞ்சு. “என்ன? அம்மா வாங்கியிருக்கிறாளா? கொண்டுவா பார்க்கலாம்!” என்றார் பிச்சுவையர். குஞ்சு உள்ளேயிருந்து ஒரு மரப்படியைக் கொண்டு வந்தாள். அதற்குள் பிச்சுவையர் கொண்டு வந்தது போன்ற அம்மன் காசுகள் நிறையக் கிடந்தன. எடுத்து எண்ணியதில் சரியாகப் பதினான்கு இருந்தன. “நீ வெளியிலே போனயோல்லியோ? அப்புறம் ஒரு குறத்தி வந்தாள். அவளிடம் அம்மா வாங்கினாள்” என்றாள் குஞ்சு. பிச்சுவையர் கணக்குப்போட்டுப் பார்த்தார். 15 – ரூபாய்க்கு சரியாக 15 அம்மன் காசு கிடைக்கும். ஆனால் அவர் 14 ரூபாய்க்கு ஒரு அம்மன் காசு வாங்கி வந்தார். அவருடைய மனைவியோ ஒரு ரூபாய்க்கு 14 அம்மன் காசு வாங்கியிருந்தாள். இருவரில் சமர்த்து யார் என்பது அவருக்கு சந்தேகமற விளங்கியது.
ஃ ஃ ஃ
பர்வதத்தம்மாள் குளத்திலிருந்து திரும்பியதும் பிச்சுவையர் அவளுடன் சண்டை பிடிக்கத் தொடங்கினார். “கால் ரூபாய் பெறாத அம்மன் காசுகளை ஒரு ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறாயே?” என்று ஆரம்பித்தார். ஆனால் பர்வதத்தம்மாள் அவரை அதிகம் பேச விடவில்லை. “நன்றாயிருக்கிறது! ஒரு ரூபாய்க்கு 14 காசுக்கு மேல் யாராவது வாங்கி விடட்டும், பார்க்கலாம், காதை அறுத்துக் கொண்டு போகிறேன். நீங்களாயிருந்தால் ரூபாய்க்கு ஒன்று வாங்கிக் கொண்டு வந்து நிற்பீர்கள். தெரியாதா?” என்றாள். தம்முடைய பேரத்தைப் பற்றிய சங்கதி அவள் காதுக்கு எப்போதும் எட்டாமலிருக்க வேண்டு மென்று பிச்சுவையர் முப்பத்து முக்கோடி தேவர்களையும் மனத்திற்குள் வேண்டிக்கொண்டார்.
ஃ ஃ ஃ
அன்று மாலை பா.பி. பிச்சுவையருக்கு மற்றோர் அதிசயம் காத்துக் கொண்டிருந்தது. அவர் வேறு காரியமாய் அடுத்த ஊருக்குப் போனபோது சாலையோரமிருந்த சாராõயக் கடையில் குறத்தி குறவர்கள் (உடையில்லாத) போலீஸ்காரர்கள் ஆக ஐந்து பேரும்
குடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களைப் பாராதது போல் அவர் திரும்பி வந்து சேர்ந்தார்.
– ஆனந்த விகடன், 16-12-1931

You may also like
வாழ்வும் தாழ்வும் – கல்கியின் சிறுகதைகள் – 10
மகேந்திர ஜாலபுரம் – கல்கியின் சிறுகதைகள் – 9
கல் சொன்ன கதை – கல்கியின் சிறுகதைகள் – 8
சர்மாவின் புனர் விவாகம் – கல்கியின் சிறுகதைகள் – 5

Leave a Reply