Home > கதை > இரண்டாவது முறை சென்னையில்

இரண்டாவது முறை சென்னையில்

இரண்டாவது முறை சென்னை கிளம்பும்போது சில அற்புதங்கள் நடந்தேறி இருந்தன.

சென்னையில் புகாரி ஹோட்டலில் நான் இருந்தபோதே கல்கி இதழில் அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் மூன்று பரிசுகளுள் ஒன்றை வாங்கிவிட வேண்டுமென்று, துடிப்புடன் கதையொன்றை எழுதி அனுப்பியிருந்தேன்.

கதையனுப்பிய இரண்டு வாரங்களிலேயே கதை பிரசுரமானதோடு, சூட்டோடு சூடாய் காசோலையும் வந்துவிட்டது.

எனக்கோ கோபம்… சிறுகதைப் போட்டிக்கு அனுப்பினால், வழக்கமான சிறுகதைகளில் ஒன்றாய் பிரசுரித்துவிட்டார்களே என்று. பிறகு ஆற அமர நிதானமாக யோசித்ததில் கதையுடன் இணைத்த காகிதத்திலோ, கவரிலோ அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டி என எங்கும் குறிப்பிடாமலே கதை அனுப்பியது நினைவு வந்தது. அடடா… முதல் பரிசைத் தொலைத்துவிட்டோமே ரொம்பவும் ஏங்கினேன்.

முதல் முறை சென்னையிலிருந்து ஊர் திரும்பியபின், ஆனந்த விகடனில் கதை பிரசுரமாகவேண்டுமென்ற உத்வேகத்தோடு சில கதைகளை எழுதியனுப்பினேன்.

இரண்டு மூன்று கதைகள் ஏமாற்றிய நிலையில், திடீரென நான் எழுதிய கதையொன்று ஆனந்தவிகடனில் பிரசுரமாகி இன்ப அதிர்ச்சி தந்தது, கதையின் தலைப்பை மட்டும் கன்னத்தில் அறைந்தாலும் என மாற்றியிருந்தார்கள்.

இந்த ஊரில் நமக்கான வேலை இல்லை. எப்படியும் மீண்டும் சென்னை கிளம்புவது என்ற மனநிலைக்கு வந்திருந்தேன். போனமுறை மாதிரி வெறுங்கையோடு கிளம்பவில்லை. இரண்டு கதைகள் பிரசுரமாயிருந்தது.

இரண்டல்ல… மூன்று. விவேக் பப்ளிகேஷனின் நாவல் லீடரில் வாசகர்களுக்கு ஒரு கதைப்போட்டி அறிவித்திருந்தார்கள். அதிலும் என் கதை தேர்வாகியிருந்தது.

இனி சென்னை போய் இறங்கவேண்டியதுதான்… கையிலிருக்கும் பிரசுரமான கதைகளைத் தூக்கிக் காட்டினால், எந்த பத்திரிகையும் உனக்கு வேலையில்லை எனச் சொல்லமுடியாது என்றொரு நம்பிக்கையுடனே பஸ் ஏறினேன்.

ஆனால் சென்னையை பஸ் நெருங்க…. நெருங்க பதற்றம் தொற்றிக்கொண்டது. நம்மைவிட இதழ்களில் நிறைய கதைகள் எழுதியவர்கள் பலரும் பத்திரிகைத் துறையில் வேலை பார்ப்பதாகத் தெரியவில்லையே… கதை எழுதுவது மட்டும் பத்திரிகைத் துறையில் பணியாற்றப் போதுமா… என்ற சந்தேகம் தொற்றிக்கொண்டது.

திருவல்லிக்கேணிக்குப் போகவேண்டும் அதற்கேற்றமாதிரி இறக்கிவிடுங்கள் என நடத்துனரிடம் சொல்லியிருந்தேன்.

இந்த முறை சென்னைக்குப் போகும் துணிச்சல் வந்ததற்கான பின்னணி ஒன்றுண்டு.

ஊரில் எனது நண்பன் பால்வண்ணனின் வகுப்புத் தோழன் சென்னையிலிருந்து வந்திருந்தான். இரவு பத்து மணிக்குமேல் தெருமுனையிலிருக்கும் பெட்டிக் கடையில் தெரு நண்பர்களெல்லாம் சந்திப்பது வழக்கம்.

யாரை யார் சைட் அடிக்கிறார் என்பதிலிருந்து… எந்தப் பெண் டியூஷன் விட்டு எத்தனை மணிக்கு வருவாள் என்பதிலிருந்து… எந்தப் படம் நல்லாயிருக்கிறது… யார் சிறந்த நடிகர் ரஜினியா, கமலா, விஜயகாந்தா என்பது வரை பல தலைப்பிலான வெட்டிப் பேச்சுகள் நடக்குமிடம்.

பேச்சு சுவாரசியமாக நீண்டால்… சபை இரவு ஒரு மணி வரைக்குக் கூட நீளும்.

அன்றைக்கு பால்வண்ணனின் நண்பன் பாலசுப்பிரமணியன் அந்தக் கூட்டத்தில் இருந்தான். படிப்பை இடைநிறுத்திவிட்டு சென்னை சென்றிருந்த அவன் சென்னையின் அருமை பெருமைகளை விவரித்துக்கொண்டிருந்தான். இடையிடையே மெட்ராஸ் பாஷை பேசிக்காட்டி எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்.

பக்கத்தில் நின்றிருந்த நான் கூடவே நின்று கேட்டுரசித்தபடியே, இடையிடையே கேள்விகளைப் போட்டு அவன் புரசைவாக்கத்தில் தங்கியிருப்பதையும், கெல்லீஸ் பகுதியில் அந்த வீடு இருப்பதையும் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

சென்னை வந்தால் கெல்லீஸ் வந்து பார்க்கிறேன் என நைஸாக சொல்லிவைத்தேன். நான் சம்பிரதாயமாகப் பேசுவதாக நினைத்து அவசியம் வா என வரவேற்பு பத்திரம் வாசித்துவைத்தான்.
இதுநடந்து ஐந்து மாதங்கள் போயிருக்கும். அப்புறம்தான் எனது சென்னை புறப்பாடு நடந்தது.

போனமுறை போலில்லாமல் திருவல்லிக்கேணியில் இருக்கும் இரண்டு பெரிய நாவல்களை வெளியிடும் பப்ளிகேஷன்களின் முகவரிகளைக் குறித்துக்கொண்டிருந்தேன்.

இதில் ஜீயே பப்ளிகேஷனில் வாசலிலேயே நிறுத்தி தற்சமயம் வேலைக்கு ஆள் தேவையில்லை என சொல்லிவிட்டார்கள்.

மிச்சமிருந்தது விவேக் பப்ளிகேஷன்ஸ். அது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஒரு சந்தில் இருந்தது. எப்படியோ தேடிப்பிடித்துப் போய்விட்டேன்.

உள்ளே நுழைந்து சார் என குரல்கொடுத்தேன். அதன் நிர்வாகி எஸ்.பி.ராமு தனது மேஜையில் ஏதோ டிபனை வைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்துவிட்டு என்ன என கேட்க, வேலை தேடி வந்ததாகக் கூற அவர் கண்ணில் ஆச்சரியம். காரணம், ஊரிலிருந்து கொண்டுவந்த சூட்கேஸோடு அவர் அலுவலகத்தில் வேலைகேட்டுப் போய் நின்றிருந்தேன்.

வேறொரு அறையிலிருந்த நாற்காலியைக் காட்டி, உட்காருங்க பத்து நிமிஷத்துல கூப்பிடறேன் என்றார். பத்து நிமிஷத்துக்கு அப்புறம் திரும்பவும் அழைத்தார்.

நான் நம்பிவந்திருந்த பிரசுரமான அந்தக் கதைகள் நிஜமாகவே எனக்கு துணைக்குவந்தன. கையிலிருந்த சூட்கேஸ் அவரைத் தொந்தரவு செய்திருக்கவேண்டும். தங்கறதுக்கு இடம் இருக்குல்ல எனக் கேட்டார்.

இல்லை என்று சொன்னால் வேலை தரமாட்டார்களோ என்ற பயம் எனக்கு. ஆமா ஃப்ரெண்ட்ஸ் இருக்கிறாங்க. காலையில வேலைக்கு வந்துடறேன் என்றபடி கிளம்பினேன்.

அங்கிருந்து கிளம்பி வெளியில் வருவதற்குள்ளாகவே அடுத்த பயம் வந்துவிட்டது.

பாலசுப்பிரமணியனைத் தேடிப்பிடிக்க முடியுமா… தங்குவதற்கு இடம்தருவானா…. ஐந்து மாதம் ஆகிவிட்டது. இன்னும் அதே முகவரியில்தான் இருப்பானா… வரிசையாக நிறைய கேள்விகள் கிளம்பின.

அதே சாலையில் நடந்தபடியே திரும்பி நடந்தேன். நடக்க நடக்க நம்பிக்கையின் பல்ஸ் இறங்கத் தொடங்கிவிட்டது.

மனம் வேறொரு சாய்ஸ் தந்தது. கடந்த வருகையின்போது முதல் முயற்சியிலேயே வேலைதந்த சென்ட்ரல் புகாரியில் போய் வேலைகேட்டால் என்ன… மனசின் தராசுமுள் புகாரி பக்கமே சாயத்தொடங்கியது.

பேருந்து ஏறுவதற்குள் மனம் முற்றிலும் புகாரிக்கே திரும்பிவிட்டதால், அடுத்து சென்ட்ரலுக்குத்தான் வந்து இறங்கினேன். நேரே சென்ட்ரல் புகாரிக்குள் நுழைந்து மீண்டும் வேலை கேட்டேன்.
ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் இருந்தது….

You may also like
‘சென்னை 6 மாவட்டங்களாக பிரிப்பு’
சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று மேலும் 5,546 பேருக்கு கொரொனா உறுதி
வெப்பச்சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Leave a Reply