Home > அரசியல் > அமைதியாக இருப்பதும் ஒரு வித வன்முறையே!

அமைதியாக இருப்பதும் ஒரு வித வன்முறையே!

வருமான வரித்துறைத் துறையை அமலாக்கத் துறையை தங்கமயமாகி வரும் புலனாய்வுத் துறையை வைத்து மிரட்டல் விடுவது, இவர்கள் உதவியோடு கட்சித் தாவலை
ஊக்குவிப்பது, எதிர்க்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கோடிக் கணக்கில் பணத்தை வீசுவது,

ஐந்து நட்சத்திர விடுதிகள் உல்லாச விடுதிகள் ஆகிய இடங்களுக்கு ‌அழைத்துச் சென்று மது, மாது அளித்துப் பேரத்தை முடிப்பது. புகழ் பெற்ற திரை நட்சத்திரங்களை
மிரட்டி, கட்சித் தொடங்கச் சொல்வது போன்ற அடாத ஜனநாயக , நாட்டு விரோத செயல்கள் மோடி ஆட்சியில் அன்றாடச் செயல்களாக மாறி வருகின்றன.

1952 இல் கம்யூனிஸ்ட் ஆட்சியைச் சென்னை மாகாணத்தில் எப்படியாவது தவிர்க்க வேண்டும், காங்கிரஸ் ஆட்சி ராஜாஜி தலைமையில் அமைய வேண்டும் என்பதற்காக இந்த அடாத செயலை மயிலை மாமாக்கள் தான் முதன்முதலில் செய்தார்கள்.

இந்த வலையில் ராஜாஜியைச் சிக்க வைப்பதற்கு, தினமணி இதழ் ஆசிரியராக இருந்த ஏ.என் சிவராமனைக் காலில் விழச் சொன்னார்கள் என இன்றைய‌த் தலைமை அரசியல் மாமா வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார்.

கட்சித் தாவல் செயலுக்கும் பிதாமகன் சக்கரவர்த்தி இராஜகோபாலாசாசாரியார் என்பதையும் சொல்லிவிட்டார் சனாதன மயிலை மாமா..

பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் இந்தக் கலையை‌ நாடாளுமன்றத்திலும் ஆடி, உயர்த்திப் பிடித்தார். ஆனால் இன்று கட்சித் தாவும் செயலை ஊர்புரங்களில் கூட்டம் சேர்ப்பதற்கு விழாக் காலங்களில் ஆடையின்றி ஆடும் ஆட்டம் போல அரசியல் அரங்கில் இந்த ஆட்டத்தைச்
சிறிதும் வெட்கமின்றி பாஜக ஆடிவருகிறது. நோயுறுவது இயற்கை.

ஒவ்வொரு மனிதனும் ஒரு காலக்கட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய ஒரு படி நிலை. எந்த நோய்? எவ்விதமான சிகிச்சை? என்பதெல்லாம் மருத்துவ உலகில் ரகசியமாகப் பின்பற்றி வரும்‌ அறநெறிகள். தனி மனிதர் சுதந்திர உரிமை.

இதைப் பொது வெளியில் அறிவிக்கும் வகையில் ஒருவரை இட்டுச் செல்வது அரசு பயங்கரவாதமாகும். இது போன்ற அடாத செயல்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வடிவில் அரங்கேற்றப்படுகின்றன.

இதைத் தடுக்க வேண்டிய அதிகாரம் பெற்றவர்கள் அமைதியைக் கடைப் பிடிக்கிறார்கள்.
மக்களை வழி நடத்த வேண்டிய ஊடகங்கள் இதய முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒருவர்-

உலகின் பல தலைவர்களோடு நெறிகளைப் பின்பற்றி கம்யூனிஸ்ட் நாடுகளுக்கும் பயணம் செய்து, கருத்து வேறுபாடுகளுக்கிடையிலேயும் எல்லாத் தலைவர்களின் நன்மதிப்பை அன்பைப் பெற்றவர்..

நல்லிணக்கத்தை ஏற்படுத்தியவர் 95 வயதைக் கடந்தவர் நமக்கு எச்சரிக்கை தருகிறார்.

யார் அவர்?

முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டரும், அவரது வாழ்விணையர் 92 வயதை எட்டிய ரோஸ்லினும் இந்தியாவில் நடக்கும் அடாத ஜனநாயக விரோதச் செயல்களைக் கண்டு பதை பதைக்கின்றனர்.

“அநீதி நடக்கும் போது அமைதிக் காப்பது வன்முறைக்கு ஒத்த மரணமேயாகும். 60 லட்சம் ஜெர்மானியர்கள் மட்டுமே அதிகாரப் பூர்வமான நாஜிகள்.

60 லட்சம் யூதர்களைத் திட்டமிட்டு எவ்வாறு அறைகளில் அடைத்து நச்சுப்புகையை விட்டுச் சாகடிக்க முடிந்தது? ஏனெனில் மற்ற 600 லட்சம் (ஆறு கோடி) ஜெர்மானியர்கள் அமைதியாக இருந்ததே ஆகும். இன்று இந்தியா அதே கட்டத்தில் இருக்கிறது. சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய

நீதித்துறையும், ஊடகங்களும் மோசமாகச் சமரசம் செய்து கொண்டுள்ளன. கட்சித் தாவலை ஊக்குவிக்கும் குதிரைப் பேரம் எவ்வித அச்சமும் வெட்கமுமின்றித் தொடர்கின்றன. பிரதமர் கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றுத் தன் நிதியில் சேர்த்துள்ளார்.

கலவரக்காரர்களை வெளிப்படையாகக் காவல்துறை பாதுகாக்கிறது. அரசும், ஊடகங்களும் இணைந்து திட்டமிட்டுப் பல சமூகங்களுக்கிடையில் வெறுப்புணர்ச்சியையும், நம்பிக்கையற்ற சூழலையும் உருவாக்கி வருகின்றன.

தயவுசெய்து கேளுங்கள்-இந்நேரத்தில் நீங்கள் அமைதி காப்பது மரணத்திற்கு ஒப்பான வன்முறையாகும்.”

இவ்வாறு அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் 95 வயதிலும் நமக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்தச் செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு திரைப்படப் பாடல் ஒலித்தது.

எனக்கு ஒரு திகைப்பு! இந்தப் பாடலைப் பல லட்சம் பேர்கள் இணையம் வழியாகப் பார்த்துக்
கேட்டு மகிழ்ந்துள்ளனர்.

சில வரிகளை மட்டுமே பகிர்ந்துள்ளேன். முழுப் பாடலையும் நீங்கள் பார்த்துக் கேட்டு மகிழ வேண்டும் அல்லவா!

காலம் கடந்தாலும் கருத்துகள் ஒன்றிப் போகின்றனவே. மலைக்கள்ளன் (1954) என்ற திரைப் படத்தில் தஞ்சை ராமையா தாஸ் எழுதிய

“எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் சொந்த நாட்டிலே நம் நாட்டிலே என்ற பாடல் வரிகளை எம்.ஜி‌ஆர் வாய் அசைத்துப் பாடுவார்.

எத்தனைக் காலம் ஏமாற்றுவார்கள் காலம் பதில் சொல்லும். விவசாயிகள் விழித்துக் கொண்டனரே!

பேராசிரியர்.மு.நாகநாதன்

Leave a Reply