Home > கட்டுரைகள் > இலையும் கல்லாகும் தண்ணீர்

இலையும் கல்லாகும் தண்ணீர்

இலையை கல்லாக்கும் தண்ணீர் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? 

சும்மா கதை விடாதீர்கள் என்று நீங்கள் சொல்வது கேட்டாலும், நாங்கள் கேள்விப்பட்ட விஷயத்தை உங்களுக்குச் சொல்லிதான் ஆவோம். 

நீரால் ஆன உலகில் முதல் உயிரி தோன்றியதும் நீரால்தான். மனிதனே தாயின் நீர்க்குடத்தில்தான் வளர்ந்து வெளிவருகிறான். ஓருயிரிலிருந்து, எவ்வளவோ உயிரினங்கள் ஆதியில் தண்ணீரில்தான் தோன்றியிருக்கின்றன.

பூமியில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் என்கிறார்கள். ஆனால், இன்று உலகின் பெரும்பாலான பகுதிகளில் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைக்காமல் தவியாய் தவிக்கிறார்கள். தண்ணீர் இன்று விலை பொருளாகிவிட்ட நிலையில் தண்ணீருக்காக போர்களும், போராட்டங்களும் வெடிக்கிற நிலையும் உருவாகும் என்கிறார்கள். பூமித்தாயை ரத்தத்தை உறிஞ்சுவதைப் போல துளையிட்டு தண்ணீரை உறிஞ்சுவது ஒருபக்கம் என்றாலும், மலை உச்சியிலிருந்து தண்ணீரை அருவியாய் கொட்டும் அற்புதங்களும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

பூமிக்கு மேலும் கீழும் ஆறாக ஓடும் தண்ணீர் உயிர்களின் உயிர். தண்ணீர் குறித்து விடை கிடைக்காத பல கேள்விகள் இன்றும் இருக்கின்றன. 

இதோ தேனி மாவட்டத்தில் அதிசயமாக பேசப்படும் அத்தகைய தண்ணீரைக் காண உங்களை அழைத்துச் செல்கிறோம்.

அடுக்கடுக்காய் மல்லாந்து படுத்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளும், மலை முகடுகள் மீது பஞ்சாடைகளாய் படர்ந்திருக்கும் மேகங்களுமாய் இதமான குளிரில் திளைத்திருக்கும் தேனி மாவட்டம். இந்த மாவட்டத்தின் கம்பம் பகுதியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் பொதிகை மலையும் சதுரகிரி மலையும் இணையும் இடத்தில் சங்கமிக்கிறது சுருளி மலை. 

இந்த மலையிலிருந்து விழும் அருவியைத்தான் சுருளி அருவி என்கிறார்கள். 150 அடி உயரத்திலிருந்து விழுகிறது இந்த அருவி. சுருளி மலையில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக கருதப்படும் இந்த அருவியுடன், 18 பாறைக் குடைவு குகைகளும் இருக்கின்றன.

நிஜத்தில் சுருளி அருவியின் ஊற்று மேகமலையில் இருக்கிறது. அங்கு ஊற்றெடுத்து ஒரு குட்டையில் தேங்கித்தான் அருவியாக விழுகிறது. தமிழின் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் சுருளி அருவியின் அழகையும் சிறப்பையும் தனது காப்பியத்தில் வர்ணித்திருக்கிறார்.

தேனிக்கு வருகிற சுற்றுலா பயணிகளின் முதல் சாய்ஸ் இந்த அருவிதான். அதிலும் மழைக்காலங்களில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள். அவர்களுடைய வசதிக்காக உடை மாற்றும் அறைகளும், குளியல் ஷவர்களும் கட்டிவிடப்பட்டுள்ளன. 

இந்த அருவிப் பகுதியில்தான் ஸ்ரீ கைலாசலிங்க பர்வதவர்த்தினி திருக்கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் உள்ள மிகப்பெரிய லிங்கமும், அதன் முன்பாக பர்வதவர்த்தின் சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு சிலைகளைச் சுற்றிலும் சுமார் ஆயிரத்து ஐநூறு லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. உருவத்தில் சிறியதும் பெரியதுமான அவை விருப்பப்படும் ஆட்களால் செய்யப்பட்டு வைக்கப்பட்டவை. சுருளி அருவிப் பகுதியில் இவற்றைப் போன்ற ஒருகோடி லிங்கங்களை வைக்கத் திட்டமிட்டிருப்பதாக கூறுகிறார்கள். அப்படி லிங்கங்களை வைக்க விரும்புகிறவர்கள் இந்தத் திட்டத்திற்கு உதவலாம் என்று விளம்பர போர்டையே வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுருளி அருவிப் பகுதியைத் தாண்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கிறது அந்த ஆச்சர்யம் நிறைந்த தண்ணீர் குட்டை. சுருளித் தீர்த்தம் என்றும் இதை அழைக்கிறார்கள். அங்கே போவது எளிதான காரியம் இல்லை. பெரிய வாகனங்கள் எதுவும் செல்லாது. சிறிய பாதைதான் இருக்கிறது. சுருளி மலையைச் சுற்றிலும் வனப்பகுதிக்குள் 225 குகைகள் இருக்கின்றன. கல்லும் முள்ளும் நிறைந்த கரடுமுரடான பாதையில் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்துசென்றால் சுருளி வேலப்பர் கோவிலை அடையலாம். நம்மை வரவேற்ற கோவில் பூசாரி இந்த கோவிலின் கதையை நமக்கு சொல்கிறார்.

சுருளி வேலப்பர் தீர்த்தத்தின் அதிசயத் தன்மை இன்னும் வியப்பை ஏற்படுத்துகிறது. விடை கிடைக்காத இந்த அதிசயம் குறித்த கே‘ள்விகளை யாரும் ஒதுக்கிவிட முடியாது. சுருளி வேலப்பர் கோவில் ஆயிரம் ஆண்டு பழமையானது. அருள்மிகு சுருளி வேலப்பர் அருள்பாலிக்கும் இந்த கோவிலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தெட்டாயிரம் ரிஷிகளும், பதினெட்டு சித்தர்களும் தவம்புரிந்து அருள்பாலிக்கும் அற்புதமான மலை இந்த சுருளி மலை.

திருக்கயிலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்ற சமயத்தில் தென்பகுதி தாழ்ந்து போனது. அதை சமப்படுத்த அகத்திய முனிவரை அனுப்பினார் சிவபெருமான். அகத்தியரும் அவருடன் வந்தவர்களும் இந்த மலையில் தவம் மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து சிவனும் பார்வதியும் அவர்களுக்கு காட்சியளித்தனர். அகத்தியரும் முனிவர்களும் தவமிருந்த குகை கயிலாயக் குகை என்று அழைக்கப்படுகிறது. அந்தக் குகையின் மேல் உள்ள குன்றின் மீது கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார் கந்தபிரான்.

கந்தபிரான்தான் ஸ்ரீசுருளி வேலப்பர் என்று அழைக்கப்படுகிறார். இந்தக் குகைக்கோவிலை சுற்றிலும் சூரிய ஒளி புகமுடியாத அளவுக்கு அடர்ந்த மரங்கள் நிறைந்திருக்கின்றன. கோவிலின் கிழக்குப் பகுதியில் இமயகிரி சித்தர் தவம்செய்த குகை இருக்கிறது. பழனி முருகனி நவபாசான சிலையை உருவாக்கிய போகர் சித்தர் அந்தச் சிலைக்கான இறுதி மூலிகையை இந்த மலையில்தான் பறித்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்தக் கோவிலின் தனிச்சிறப்பு என்ன தெரியுமா? நடந்து நா வறண்டு வருகிறவர்களுக்கு கொடுக்கப்படும் மூலிகைத் தண்ணீர்தான். இந்த மூலிகைத் தண்ணீரின் சிறப்பு என்ன? என்று கேட்டபோதுதான், இந்த தண்ணீர் இலையைக் கூட கல்லாக்கிவிடும் என்று கூறுகிறார் கோவில் பூசாரி.

இங்கே உள்ள உதக நீரான சுருளி தீர்த்தம், நோய் தீர்க்கும் மாமருந்து என்று கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் உள்ள எந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் என்றாலும், இங்கு வந்து சுருளி தீர்த்தத்தை எடுத்துச் சென்று கும்பாபிஷேகத்தில் பயன்படுத்துவது வழக்கம். காசி, ராமேஸ்வரம் போன்று இந்த சுருளி தீர்த்தக் கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் வழக்கமும் நீடிக்கிறது.

பூசாரி பைட் 

தண்ணீரில் போட்ட பொருள் எப்படி கல்லாகும் என்ற சந்தேகம் கலந்த ஆச்சர்யத்துடன் கேள்வியை முன் வைத்தால் நம்மை அந்த தீர்த்தப்பகுதிக்கு அழைத்து செல்கிறார், பூசாரி. மலையில் எங்கோ ஊற்றெடுத்து எந்தெந்த வழியிலோ பயணம் செய்து, எத்தனையோ மூலிகைகள் மீது பட்டு வரும் தண்ணீர் கோவிலின் இந்த பகுதியில் தேக்கி வைக்கப்படுகிறது. ஏற்கெனவே, ஒரு பிளாஸ்டிக் பொம்மை கல்லாக மாறி இருப்பதை காணும்போது, இந்த சுருளி தீர்த்தம் ஆச்சர்யம் கலந்த கேள்விகளை நமக்குள் விதைக்கவே செய்கிறது. 

இந்த தீர்த்தத்தில் இலை மட்டுமில்லை, வேறு எந்த பொருளாக இருந்தாலும் கல்லாக மாறும் அதிசயம் ஒரே நாளில் நிகழ்வதில்லை. இதற்காக 48 நாட்கள் காத்திருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அந்த தண்ணீரில் இலையை  போட்டு வைத்து விட வேண்டும். 48 நாட்களுக்கு பிறகு பார்த்தால் அது கல்லாக மாறி இருக்கும் என்று இந்த பகுதிக்கு வந்து செல்பவர்கள் கூறுகிறார்கள். அதேசமயம், இந்த தண்ணீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவ குணநலனுக்காக அருந்துவதாகவும் இந்தப் பகுதிவாசிகள் கூறுகிறார்கள்.

சுருளிமலை தீர்த்தத்தைப் பற்றி நீர் வள நிபுணர்களிடம் கேட்டபோது….

சுருளி அருவிக்கு வரும் அனைவருமே இந்த அதிசய தீர்த்தத் தலத்தை பார்க்க வருவதில்லை. பலருக்கும் இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பும் இல்லை. காரணம், அந்த தீர்த்த தலத்திற்கு செல்லும் பாதை அவ்வளவு எளிதானது இல்லை என்பதாகக் கூட இருக்கலாம். இங்கு இப்பொழுதும் சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்று இவ்வூர் மக்கள் நம்புகிறார்கள். சுருளி மலையில் கிடைக்கும் மருத்துவ மூலிகைகளை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பதை அறிந்தவர்கள் சித்தர்கள். அத்தகைய அற்புத மூலிகைச் செடிகளுடன் இழைந்து வரும் தண்ணீர்தான் இரும்பை கூட கல்லாக மாற்றும் அதிசயம் என்கிறார்கள்.

Leave a Reply