Home > அரசியல் > ஏன் யாரும் கலைஞர் ஆட்சியைத் தருவேன் எனச் சொல்வதில்லை?

ஏன் யாரும் கலைஞர் ஆட்சியைத் தருவேன் எனச் சொல்வதில்லை?

ஏன் யாரும் கலைஞர் ஆட்சியைத் தருவேன் எனச் சொல்வதில்லை? காரணம் இதோ…

1995ல் நான் ஸ்டான்லி மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டேன். அங்கு, ஈரல் மாற்றுப் பிரிவைத் தொடங்க விரும்புவதைச் சொன்னபோது, எனது சகாக்கள் ஜோக் என்றே நினைத்தார்கள்.

இதற்கு நிறைய செலவாகும் என்றார்கள். அப்போது வட சென்னை எம்.பி. குப்புசாமியின் மனைவிக்கு உணவுக்குழாயில் ஏற்பட்ட புற்று நோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்தேன்.

அவர், தனது தொகுதி வளர்ச்சி நிதியை ஈரல் மாற்றுத் துறைக்குக் கொடுத்தார். ஆனால், அந்த நிதியும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது. நானும் எனது நண்பர்களும் ஒவ்வொரு இடமாக ஓடியும் பலனில்லை.

இதையடுத்து அதிகமாக உயிரிழப்பு ஏற்படும் இரைப்பை, குடல் இயல் பிரிவைத் தொடங்கி, அதில் ஈரல் மற்றும் கணையம் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வது என்று முடிவெடுத்தோம்.

அதிகமாக உபயோகப் படுத்தப்படாமல் இருக்கும் ஒரு வார்டை சிரமப்பட்டுப் பெற்றோம். அந்தத் துறைக்கென்று நர்சுகள் இல்லை.

அதற்குப் பதிலாக ஒப்பந்த அடிப்படையில் நர்சுகளை எடுக்கும்படி கூறினார். உடனே, நர்சுகள் சங்கம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தைத் தொடங்கியது. இதில் தனியார் மருத்துவமனை ஆதரவாளர்களும் இருந்தார்கள்.

தமிழகம் முழுவதும் பரவிய இந்த ஸ்டிரைக் ஒரு வாரம் நீடித்தது. இந்த நிலையில் நர்சுகள் சங்கத்தின் தலைவருடைய மருமகன் விமான நிலையத்தில் ரத்த வாந்தி எடுத்து, அபாயக் கட்டத்தில் மருத்துவ மனைக்குக் கொண்டு வரப்பட்டார்.

பழைய சிகிச்சை முறைகள் அனைத்தும் முயற்சிக்கப்பட்டுத் தோற்றவுடன், நான் மதியம் 2 மணிக்கு வந்தேன். அறுவைச் சிகிச்சை செய்தேன். அவர் குணமடைந்தார். நர்சுகள் சங்கத் தலைவர் என்னிடம் வந்தார். நன்றி சொல்லி அழுதார்.

நான், அவரிடம் சொன்னேன்… “சிஸ்டர், நீங்கள் உங்கள் மருமகனைப் பற்றி சிந்திக்கிறீர்கள். நான் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மருமகன்களைப் பற்றி நினைக்கிறேன்.”

நர்சுகள் போராட்டம் முடிவுக்கு வந்தது. அரசு விருப்பப்படி ஒப்பந்த நர்சுகளை வைத்து இரைப்பை, குடல் அறுவைச்சிகிச்சை பிரிவைத் தொடங்கினோம்.

அறுவைச் சிகிச்சை செய்யும் நபர்களிடம் குறைந்தபட்சப் பராமரிப்புச் செலவுக்குப் பணம் பெற்று அவர்களுக்குச் சம்பளமாகக் கொடுத்தோம்.

அது நல்லபடியாகச் செயல்பட்டது. பின்னர் சில ஆண்டு களில் தமிழகத்தின் பிற மருத்துவ மனைகளிலும் சில மாறுதல்களுடன் இந்தப் பிரிவு தொடங்கப்பட்டது.

2000மாவது ஆண்டு இந்தப் பிரிவுக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் கிடைத்தது. இந்தியாவிலேயே முதலாவது இது. அதன் பிறகு இந்தக் குறைபாடு களால் இறப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது. பலரும் இதற்காக நன்றி சொன்னார்கள்.

வருமானமும் உபரியாகியது. 80 லட்சம் ரூபாய் கிடைத்தது. அதைக்கொண்டு நவீன உபகரணங்களை வாங்கினோம். இந்தத் துறையில் பயிற்சி பெற மருத்துவர்கள் விரும்பினார்கள்.

கூடுதல் நேரம் தங்கிக் கூடுதல் பங்களிப்புச் செய்யத் தயார் ஆனவர்கள் மட்டுமே சேர்க்கப் படுவார்கள் என்று நிபந்தனை விதித்தேன். இதையடுத்துப் பல திறமையான இளம் டாக்டர்கள் கிடைத்தார்கள்.

ஒரு நாள் அப்பல்லோவுக்கு வரும்படி நிதித்துறைச் செயலாளர் என்னிடம் கூறினார். நான் அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வரும்படி கூறினேன். ஒரு அரசு விடுமுறை நாளில் அவர் ஸ்டான்லிக்கு வந்தார்.

எங்கள் டிபார்ட்மெண்ட்டையும் நாங்கள் அங்கு வேலை பார்க்கும் விதத்தையும் பார்த்து அசந்து போனார்.

அதன் பிறகு எங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்கினார். நாங்கள் கேட்டதைக் காட்டிலும் இரு மடங்கு நிதி கிடைத்தது.

அது மட்டுமின்றிப் புதிய கட்டடமும் கிடைத்தது. அந்தக் கட்டடத்தை நவீனப்படுத்தவும் நிதி கிடைத்தது.

மருத்துவத்துறைக் கட்டடத்தைத் திறப்பு விழாவுக்குத் தயார் செய்யும் மும்முரத்தில் இருந்தோம். புதிய டீன் ஒருவர் எங்களுடன் இணைந்தார். ஆனால், நிதி விஷயத்திலேயே ஆர்வமாக இருந்தார்.

எனினும், நிதி நிர்வாகம் முழுவதும் தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகத்தின் பொறுப்பில் மாற்றப்பட்டதை அறிந்ததும் அவர் விரக்தி அடைந்தார். அதைத் தொடர்ந்து கட்டடத்தை எங்களிடமிருந்து பறிக்க முயற்சித்தார்.

எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில் முதல்வர் கலைஞரின் இல்லத்துக்கு இரவு 8 மணிக்கு போன் செய்தேன்.

அடுத்த நாள் காலை நான் ஜப்பானுக்குப் போக வேண்டும் என்பதால் அவசரமாக போன் செய்தேன். முதல்வரின் மனைவி போனை எடுத்தார்.

அடுத்த நாள் காலை முதல்வரைச் சந்திக்க வரும்படி கூறினார். செல்வாக்கு மிகுந்த அந்தப் புதிய டீன் மாற்றப் பட்டார். பல அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

திரு. சன்வத்ரம் ஐ.ஏ.எஸ் தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப் பட்டார். அவர் வந்த பிறகு கட்டடத்தை வேகமாகச் சீரமைத்தோம்.

இந்தக் கட்டடத்தை முதல்வர் கலைஞர் வந்து திறந்து வைத்தால் பெரிய அளவுக்கு ஒத்துழைப்புக் கிடைக்கும் என்று நினைத்தோம்.

ஆனால், முதல்வரைச் சந்திக்க எங்களால் அனுமதி பெற முடியவில்லை. கட்டடத்தை விரைவாகத் திறக்க சுகாதாரத் துறை அமைச்சர் விரும்பினார். அடுத்து என்ன செய்வது என்றும் தெரியவில்லை.

அடுத்த நாள் அப்பல்லோவுக்கு சென்று லிஃப்ட் அருகே காத்திருந்தேன். லிஃப்ட் வந்தது. உள்ளே இருந்து முதல்வர் கலைஞரும் அமைச்சர்களும் வந்தார்கள். முதல்வருக்கு வாழ்த்துச் சொன்னேன்.

இரண்டு மாதங்களாக அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றேன். உடனே அடுத்த நாள் காலை 9 மணிக்கு வந்து சந்திக்கும்படி கூறினார். போனேன். மருத்துவமனைக் கட்டடத் திறப்பு விழாவுக்கு வர வேண்டும் என்று கேட்டேன்.

“பொதுவாக, பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளுக்காகத்தான் டாக்டர்கள் வருவார்கள். அதெல்லாம் உங்களுக்கு வேண்டாமா?” என்று நகைச்சுவையாகக் கேட்டார்.

உடனே நான், “ஸார், நீங்கள் இந்தக் கட்டடத்தைத் திறந்து வைத்தால், அதுவே பாரத ரத்னா விருது பெற்ற மகிழ்ச்சியை எனக்குக் கொடுக்கும்” என்றேன்.

பிறகு அவர் ஆலோசனை நடத்தித் திறப்பு விழாவுக்கு வந்தார். திறந்து வைத்த பிறகு ‘ஹிண்டு’ போட்டோ கிராபரை அழைத்து அவருக்கு அருகில் நிற்க வைத்து போட்டோ எடுக்கச் சொன்னார். நான் உயரத்தில் பறப்பது போல உணர்ந்தேன்.

எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ஆனால், எப்போது ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சையை தொடங்கப் போகிறேன் என்று தெரியவில்லை.

இதற்கிடையில் மாதத்துக்கு ஒரு முறை 50 சீனியர் டாக்டர்களுக்கு எங்களது டிபார்ட்மெண்ட் குறித்து விரிவுரை நிகழ்த்தும்படி பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சும், ஷீலா பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சும் கூறி இருந்தார்கள்.

ஒரு முறை விரிவுரை முடிந்ததும் 2009 ஜனவரி 28 ஆம் தேதி டாக்டர்களுடன் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு டாக்டர் கேட்டார்…

“டிபார்ட்மெண்ட் நன்றாக வந்திருக்கிறது. ஆனால், எப்போது முதல் அறுவைச் சிகிச்சையைத் தொடங்குவீர்கள்?” என்று கேட்டார். அவர் வாயை மூடவில்லை. அதற்குள் எனது போன் ஒலித்தது. அரசு மருத்துவமனையிலிருந்து டாக்டர் பேசினார்.

தங்களிடம் மூளைச்சாவு அடைந்த ஒரு நோயாளி இருப்பதாகவும், அவரிடமிருந்து ஈரலை எடுத்துக் கொள்ள முடியுமா? என்றும் கேட்டார்.

நானும் எனது சகாக்களும் ஆச்சரியம் அடைந்தோம். அன்று காலை 11 மணிக்கே அறுவைச் சிகிச்சையைத் தொடங்கினோம். அடுத்த நாள் மதியம் வரை இது நீடித்தது.

எல்லோரும் சோர்வடைந்தோம். நோயாளி கண் விழிக்கும் வரை ஓய்வு எடுத்தோம். அரசு மருத்துவ மனை ஒன்றில், இந்தியாவிலேயே முதன் முதல் ஈரல் மாற்று சிகிச்சை நடத்தியிருக்கிறோம்.

எங்கள் முதல் அறுவைச் சிகிச்சை வெற்றி பெற்றது. 10 ஆண்டுகள் முடிந்த நிலையிலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29 ஆம் தேதி அந்தப் பெண் எனக்கு போன் செய்து, “நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் நன்றி” என்று கூறுகிறார்.

இனி, ஸ்டெம் செல் அல்லது குருத்தணு திட்டம் குறித்துக் கொஞ்சம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். 2007 ஆம் ஆண்டு, நான் ஒரு கூட்டத்துக்குப் போய் இருந்தேன்.

அங்குதான் ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பதிலாக ஸ்டெம் செல் சிகிச்சைக்கு மாறலாம் என்ற விவாதம் இடம் பெற்றது. எங்களுடைய முயற்சிகள் வீணாக நாங்கள் விரும்பவில்லை.

ஸ்டெம் செல் ஆய்வுக் கூடங்கள் பலவற்றை ஆய்வு செய்தோம். பேராசிரியர் ரோஸி வெண்ணிலா ஆஸ்திரேலியா வுக்குச் சென்று சில ஆய்வுக் கூடங்களைப் பார்த்து வந்தார். அந்த அடிப்படையில் 20 கோடி ரூபாயில் ஒரு திட்டத்தை உருவாக்கி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுக்கு அனுப்பினோம். ஒரு பதிலும் வரவில்லை.

இந்தச் சமயத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்பழகனும், கனிமொழி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.யும் 5 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்தார்கள்.

ஆனால், அந்த நிதியை ஒதுக்க லகானி ஐ.ஏ.எஸ். மறுத்து விட்டார். ஆனாலும், கருப்பையா பாண்டியனால் அந்த நிதியை நாங்கள் பெற முடிந்தது. ஆனாலும், லேப் கட்டும் பணி நகரவே இல்லை.

இந்த நிலையில்தான் நான் முதல்வர் கலைஞரை மீண்டும் சந்தித்தேன். அவரிடம் விவரத்தைத் தெரிவித்தேன். அவர் உடனே அப்போதைய தலைமைச் செயலாளர் ஸ்ரீபதியை அழைத்து கவனிக்கச் சொன்னார். அவர், நான்கு மணி நேரம் ஆய்வு செய்தார்.

அந்தச் சமயத்தில் மருத்துவப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. அதை ஏற்கும்படி என்னை முதல்வர் கலைஞர் கேட்டார். நான் அதில் விருப்பமில்லை என்றேன்.

ஸ்டான்லியிலேயே நிறைய வேலை பாக்கியிருக்கிறது என்றேன். உடனே அவர்… “வி.சி. போஸ்ட் வேண்டாம் என்கிறீர்கள். பத்மஸ்ரீ விருது வேண்டாம் என்கிறீர்கள். உங்களுக்கு என்னதான் வேண்டும்?” என்று கேட்டார்.

நான் அவரிடம், டெல்லி அரசு திட்டமிட்டுள்ள ஐ.எல்.பி.எஸ் திட்டம் குறித்துக் கூறினேன். 3 ஏக்கர் நிலத்தையும் 350 கோடி ரூபாயையும் அது ஒதுக்கியிருப்பதையும் குறிப்பிட்டேன்.

அதைக் கேட்ட முதல்வர் கலைஞர் ” இடத்தைத் தேர்வு செய்துவிட்டு வாங்க, 450 கோடி ரூபாய் தருகிறேன்” என்று தெரிவித்தார்.

அது மட்டுமின்றி, அவருடைய உதவியாளர் சண்முக நாதனை அழைத்து, இரண்டு மணி நேரத்தில் நிதி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களின் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார்.

நான் ஸ்டான்லி மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் பொதுப்பணித் துறை இடத்தை அடையாளம் காட்டினேன்.

அப்படித்தான் பழைய மத்திய சிறையின் 8 ஏக்கர் நிலம் ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கிடைத்தது. 36 ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சைகளையும், ஸ்டெம் செல் லேப் கட்டுமானப் பணியையும் மன நிறைவோடு செய்திருக்கிறேன்.

எழுதியவர்:
டாக்டர் ஆர். சுரேந்திரன்.

Leave a Reply