Home > கட்டுரைகள் > கொரியா தமிழர் திருநாளில் தமிழர்களின் பங்களிப்பை பறைசாற்றிய உரை

கொரியா தமிழர் திருநாளில் தமிழர்களின் பங்களிப்பை பறைசாற்றிய உரை

ஒசோங்-சோங்ஜு, (தென்) கொரியா –  திருவள்ளுவர் ஆண்டு 2051, தை மாதம் 12-நாள் (சனவரி 26) அன்று கொரிய தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கொரிய பொங்கல்-2020 நிகழ்வு Korea Chungcheong-buk-do provincial government and Mulberry-Bio co-ordinate system (Chungcheong-buk-do) உதவியுடன் கே-பயோ நிலையத்தின் (K-bio center) அரங்கில் தமிழர் திருநாளுக்குரிய தித்திக்கும் பொங்கல்-கரும்பு, மகிழ்ச்சி பரிமாற்றத்துடனும் பண்பாட்டு விழிமியங்களுடனும் இனிதே நடந்தேறியது. நிகழ்வின் முக்கிய அங்கமாக தமிழர் திருநாள் உரையாற்றிய கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் சுப்பிரமணியன் இராமசுந்தரம் அவர்கள்,

“அன்பிலார் எல்லாம் தமக்குறியர் அன்புடையார் 

என்றும் உரியர் பிறர்க்கு” 

என்ற திருக்குறளை சொல்லி உலகிற்கும் தாய்நாட்டிற்கும் தமிழர்களின் அன்பான வணக்கத்தை உரித்தாக்கி தமிழர் திருநாள் – 2020 உரையை தொடங்கிய தலைவர் அவர்கள், முதலில் கொரியா-இந்திய உறவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். கொரியப் போரில் களத்தில் இந்திய பாராச்சூட் படையணி ஆற்றிய மருத்துவ உதவிப்பணி, இங்கு பல நாடுகளின் தூதரகங்கள் வருவதற்கு முன்பே தொடங்கிய கன்சுலார் அளவிலான இந்திய-கொரிய உறவுகள், இரு நாடுகளுக்கிடையே நிலவும் பாதுகாப்பு மற்றும் தொழில் ஒத்துழைப்பு ஆகியவை பற்றி குறிப்பிட்ட தலைவர் அவர்கள் கொரியாவிற்கு வரும் ஒவ்வொரு இந்தியரும் முக்கியமானவரே ஆகவே அனைவரும் இந்திய-கொரிய உறவுக்கு மேலும் வலுசேர்க்க இங்கிருக்கும் ஒவ்வொரு இந்தியரும் பங்காற்ற வேண்டும் என்றார்.

அடுத்ததாக 1987-களில் கொரியா வந்த தமிழர் தொன்மை ஆய்வாளரான ஒரிசா பாலு அவர்களின் காலத்தை ஒரு முக்கிய புள்ளியாக எடுத்துக்கொண்ட தலைவர் அவர்கள், 1987 முதல் விரிந்திருக்கும் சமகால கொரிய தமிழர் வரலாற்றை விளக்கினார். 1987 முதல் கொரியாவில் வந்து பணியாற்றிய தமிழ்நாட்டு பொறியாளர்கள் மற்றும் முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் மேலான உழைப்பின் பலனாகவே இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும்  முனைவர் பட்ட ஆராய்ச்சி, பொறியியல் மற்றும் தொடர்புடைய துறைகளில் கொரியாவில் வாய்ப்புகளை பெறுகிறார்கள் என்று தம் முன்னோடிகளுக்கு புகழாரம் சூட்டினார். தாம் அறிந்தவரை 2000-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டைச் சேர்ந்த குறுகிய எண்ணிக்கையிலான மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு வர தொடங்கியதாக குறிப்பிட்ட தலைவர் அவர்கள் இன்று அந்த எண்ணிக்கை பல நூறுகளாக அதிகரித்திருப்பதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார். 

அதேநேரம், சமகால கொரிய தமிழர் வாழ்வு சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினாலும், இங்கு தமிழர்கள் பெரும்பாலும் சில ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் உயர் தொழில்நுட்ப பணிபுரிபவர்களாக இருக்கும் நிலையே தொடர்கிறது என்ற தலைவர் அவர்கள் கொரியாவாழ் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர் அனைவரும் தொழில்முனைவோராக, கொரியாவின் வளர்ச்சிக்கு பங்காற்றும் கண்டுபிடிப்பாளர்களாக அடுத்த கட்டத்திற்கு சென்று மேன்மேலும் மிளிர வேண்டியதன் தேவைப்பாடு பற்றியும் பேசினார். அதே நேரம், அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சாதித்த பேராசிரியர்கள் ஆறுமுகம் மந்திரம், தாயுமானவன், இராமமூர்த்தி இரமேஷ் மற்றும் பொறியாளர் சுந்தர் பிச்சை போன்றோரையும் இந்தியாவில் அதிகம் சாதித்த சிறுபான்மை இனமான பர்சிக்களில் இருந்து வந்த சம்செட்சி டாடா மற்றும் ஹோமி சகாங்கீர் பாபா போன்றோரை எடுத்துக்காட்டாக எடுத்து பயணிக்க வேண்டும் என்றார். இவ்வாறன பணிகளுக்கு இந்திய தூதரகம் தன்னாலான வேலைத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

உரையின் முக்கிய பகுதியாக மகாத்மா காந்தியடிகளின் அறவழி போராட்டம் நேதாஜி அவர்களின் ஆயுதப்போராட்டம் என அனைத்து வடிவத்திலும் தமிழர்கள் இந்திய நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பேசிய தலைவர், அவ்வாறே இளைஞர்களை கவர்ந்து இந்தியவின் ஆன்மீக கருத்துக்களை உலகெல்லாம் பரவச்செய்த தலைசிறந்த ஆன்மிக தலைவரான சுவாமி விவேகானந்தர் வாழ்விலும் ஆன்மிகம் பரப்பும் பணியிலும் தமிழர்களுக்கு இருக்கும் பங்களிப்பு குறித்தும் பேசினார். தொடர்ந்து, விவேகானந்தர் அவர்கள் சிகாகோ உலக சமய மாநாட்டில் பேசியதன் 125-வது ஆண்டு செப்டம்பர் 2018-ல் நிறைவுபெற்றதை குறிக்கும் வகையிலும் அவர் உலகிற்கு எடுத்துச்சென்ற இந்திய அடையாளங்களை வலுப்படுத்துவதற்காகவும் 2018 ஆகஸ்ட் முதல் இந்திய தூதரகம் வழியே நடத்தப்படும் கலாசார மையங்கள் அனைத்தும் சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையங்கள் என்று பெயர் மாற்றப்பட்டதை குறிப்பிட்டார் நிகழ்நிலையும் 2018 ஆகஸ்ட் ஊடக செய்திகளையும் மேற்கோள் காட்டி தலைவர் பேசினார். மேலும் அதனை வரவேற்ற தலைவர் அவர்கள், விவேகானந்தர் அவர்கள் சிகாகோ உரையை ஆற்றுவதற்கு புரவரலாக இருந்த மன்னர் பாஸ்கர சேதுபதி குறித்து பேசினார்.

மன்னர் சேதுபதி அவர்கள் நன்கு கல்வி கற்ற இந்தியாவை பயணித்து அறிந்துகொண்டவர் என்றும், தான் அழைக்கப்பட்டிருந்த சிகாகோ மாநாட்டிற்கு விவேகானந்தர் அவர்களின் ஆன்மிக ஞானத்தைக்கண்டு தமக்கு பதிலாக விவேகானந்தர் அவர்களை அனுப்பி அதற்கு புரவலராகவும் ஆனார் என்ற உலகறிந்த உண்மையை மன்னர் பற்றிய வரலாற்று குறிப்புகளில் இருக்கும் பதிவுகளை மேற்கோள்காட்டி எடுத்துரைத்தார். மேலும் பாஸ்கர சேதுபதி (1868–1903) அவர்கள் விவேகானந்தரைப் போன்று ((1863–1902) இளமைப்பருவத்திலே இயற்கை எய்தியவர் என்று குறிப்பிட்ட அவர், ஒரு மன்னராகவும் இளம்வயதினராகவும் இருந்தாபோதிலும் பெருந்தன்மையாக இந்தியாவின் ஆன்மிக நோக்கை உலகிற்கு சிறப்பாக கொண்டு செல்லும் நோக்கம் நிறைவேற வேண்டும் என்ற அடிப்படையில் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் செயல்பட்டிருப்பதை அறிய முடிகிறது என்றார்.

மேலும் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள், விவேகானந்தர் பாம்பன் திரும்பியபோது எழுப்பிய தூணில் மேற்கோள்காட்டிய “சாத்தியமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்)” என்ற வாசகமே பின்னாளில் 50 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியாவின் அடையாள வாசகமாக முன்வந்தது குறித்த வரலாற்று தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். சுவாமி விவேகானந்தர் அவர்கள்மன்னரின் ஆன்மிக ஞானம் கண்டு மன்னரை இராஜரிஷி என்று அழைத்தார் என்பதையும் தலைவர் அவரகள் பதிவு செய்தார்

இவ்வளவு சிறந்த மன்னரின் படங்கள் இந்திய தூதரகம் வழியே நடத்தப்படும் சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையங்கள் அனைத்திலும் திறக்கப்படுவதே வரலாற்றிற்கு வாய்மை செய்வதாய் அமையும் என்று குறிப்பிட்ட அவர் இம்மையங்கள் அனைத்திலும் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களின் படத்தை திறந்து வைக்குமாறு மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் மற்றும் வெளியுறத்துறை அமைச்சர் அவர்களுக்கும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வேண்டுகோள் வைத்தார். மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் ஆகியோரும் இந்திய அரசிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நிறைவேற்றுமாறு வேண்டினார்.

இறுதியாக சங்கத்திற்கு தேவையான பொருளாதார வளத்தை சேர்க்க இருக்கும் வாய்ப்புகள் குறித்து விளக்கினார். இதன்பொருட்டு இளமையான கொரிய தமிழ்ச் சங்கத்தின் வலுவான கட்டமைப்பிற்கு உலகில் உள்ள மூத்த தமிழ்ச் சங்கங்கள் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உரையை ஆர்வமுடன் கேட்ட தூதருக்கும் சங்க நிகழ்வுகளில் முன்பு கலந்துகொண்ட தூதரக அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து அமர்ந்தார்.

Leave a Reply