Home > கட்டுரைகள் > கொரிய தமிழ்ச் சங்கத்தின் சிறப்பான பணியை பாராட்டிய எழுத்தாளர் ஆதனூர் சோழன்

கொரிய தமிழ்ச் சங்கத்தின் சிறப்பான பணியை பாராட்டிய எழுத்தாளர் ஆதனூர் சோழன்

ஒசோங்-சோங்ஜு, (தென்) கொரியா –  திருவள்ளுவர் ஆண்டு 2051, தை மாதம் 12-நாள் (சனவரி 26) அன்று கொரிய தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கொரிய பொங்கல்-2020 நிகழ்வு Korea Chungcheong-buk-do provincial government and Mulberry-Bio co-ordinate system (Chungcheong-buk-do) உதவியுடன் கே-பயோ நிலையத்தின் (K-bio center) அரங்கில் தமிழர் திருநாளுக்குரிய தித்திக்கும் பொங்கல்-கரும்பு, மகிழ்ச்சி பரிமாற்றத்துடனும் பண்பாட்டு விழிமியங்களுடனும் இனிதே நடந்தேறியது. நிகழ்விற்கு மூத்த எழுத்தாளர்-ஊடகவியலாளர் ஆதனூர் சோழன் அவர்கள் காணொளி மூலம் வழங்கியிருந்த வாழ்த்துரை பின்வருமாறு

கொரிய தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

கொரிய தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். கொரிய தமிழ்ச் சங்க நிகழ்வுகள் தொடர்பாக நக்கீரன் இதழில் பல முறை செய்திகள் வெளியிட்டுள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளாக கொரிய தமிழ்ச் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக நண்பர்களின் வாயிலாக அறியப் பெற்றேன். இந்த மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் கொரிய தமிழ்ச் சங்கமானது உலகத் தமிழ்ச் சங்கத்தின் அங்கீகாரத்தை பெற்றதற்காக எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். கொரிய தமிழ்ச் சங்கத்தின் மிகப்பெரிய பங்களிப்பானது உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் தென்கொரிய அரசாங்கத்தின் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. கொரிய தமிழ்ச் சங்கமானது நம்முடைய தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பேணி பாதுகாப்பதில் மற்ற தமிழ்ச் சங்கத்திற்க்கு இணையாக பங்களிப்பு செய்து வருகிறது. கொரிய தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் தலைவர் முனைவர். இராமசுந்தரம், துணைத் தலைவர் கேத்தரின் கிருஸ்டி, செயலாளர் முனைவர். இராமன், துணைச் செயலாளர் முனைவர். ஆரோக்கியராஜ் போன்றவர்கள் மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள்.

நான் கடந்த ஆண்டு கொரியாவின் கதை என்று ஒரு தொடர் நக்கீரன் இணையதளத்தில் எழுதி இருந்தேன். இந்தத் தொடர்தான் கொரிய தமிழ்ச் சங்கத்திற்கும் எனக்கும் ஒரு நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆகவே தமிழ் தான் என்னை உங்களோடு இணைத்து இருக்கிறது என்பதில் பெருமை அடைகிறேன். உலக நாடுகள் அனைத்திலும் தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும் அந்தந்த நாடுகளில் மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்று வருகிறார்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர் மற்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதற்கேற்ப உலக மக்களோடு இணைந்து வாழ்ந்து வருவது மிகவும் போற்றுதலுக்கு உரியது. இந்த வகையில் கொரிய தமிழ்ச் சங்கமானது தமிழ் மற்றும் தமிழர் நலன் ஆகியவற்றில் மிகச் சிறப்பான செயல்பாடுகளை பின்பற்றி வருகிறது.

உதாரணமாக சமீபத்தில் தமிழக அரசானது கொரிய அரசோடு இணைந்து கொரிய மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த புத்தகத்தில் உள்ள விளக்க உரையை கொரிய மொழியிலும் மொழிபெயர்த்து வெளியிடப்படுவது மட்டுமல்லாமல் தமிழ்-ஆங்கிலம்-கொரியன் மொழியில் திருக்குறள் ஆண்ட்ராய்டு செயலியையும் வெளியிட இருப்பது வரலாற்று சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்ட்ராய்டு செயலியை பொறியாளர். ஜனகராஜ் போன்றவர்கள் மிகச் சிறப்பாக உருவாக்கி இருப்பதாக நண்பர் இராமசுந்தரம் தெரிவித்தார். விரைவில் இந்த ஆண்ட்ராய்டு செயலியை வெளியிட படுவதாகவும் இந்த முயற்சியை அலுவலகரீதியாக முன்னெடுக்க தென்கொரிய உள்ள இந்திய தூதரகம் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுபோன்றதொரு நடவடிக்கைகளில் கொரியா தமிழ்ச்சங்கம் ஈடுபடும்போது அந்த சங்கத்தின் மீதான மதிப்பு மென்மேலும் உயர்வது மட்டுமல்லாமல் சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகளுக்கு இரண்டு நாடுகளின் அரசுகளும் ஊக்கமளிக்கும் என்பது உறுதி. இந்த வகையில் கொரிய தமிழ்ச் சங்கம் நடத்தும் பொங்கல் விழா நிகழ்ச்சியில் பெரும் திரளாக தமிழ் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி! வணக்கம்!

குறிப்பு: செய்தியை தொகுத்து எழுதியவர்: முனைவர். சோணைமுத்து மோகன்தாஸ் மற்றும் முனைவர் சத்யா மோகன்தாஸ், யோங்னம் பல்கலைக்கழகம், தேகு, தென்கொரியா

Leave a Reply