Home > கட்டுரைகள் > கொரிய பொங்கல்-2020

கொரிய பொங்கல்-2020

அழைப்பிதழ்

ஒசோங்-சோங்ஜு, (தென்) கொரியா –  திருவள்ளுவர் ஆண்டு 2051, தை மாதம் 12-நாள் (சனவரி 26) அன்று கொரிய தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கொரிய பொங்கல்-2020 நிகழ்வு Korea Chungcheong-buk-do provincial government and Mulberry-Bio co-ordinate system (Chungcheong-buk-do) உதவியுடன் கே-பயோ நிலையத்தின் (K-bio center) அரங்கில் தமிழர் திருநாளுக்குரிய தித்திக்கும் பொங்கல்-கரும்பு, மகிழ்ச்சி பரிமாற்றத்துடனும் பண்பாட்டு விழிமியங்களுடனும் இனிதே நடந்தேறியது. பொங்கல் நிகழ்விற்கு அப்பகுதியின் ஆளுமைக்குரிய சுங் சோங் புக் தோ அரசு,  மெல்பேரி உணவகம் மற்றும் பயோ கோ-ஒர்டினட் சிஸ்டெம் ஆகிய நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். கொரியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர், பெண்கள், குழந்தைகள் என 200 பேர் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கொரியாவிற்கான இந்திய துணைத்தூதர் மாண்புமிகு சதிஷ் குமார் சிவன், சுங் சோங் புக் தோ மாநில அரசின் பிரதிநிதி மற்றும் மெல்பேரி-பயோ உரிமையாளர்கள் திரு ரியூ ஜெ கியங், திருமதி இன்சொக் கிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக 26 சனவரி இந்திய குடியரசுதினம் என்பதால் கொரியா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் இராமசுந்தரம் அவர்கள் இந்திய கொடியேற்றி பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தார்.

பொங்கல் வாழ்த்து கூறிய தூதர் அவர்கள்

நிகழ்வில் கலந்துகொண்ட தூதர் அவர்கள் கலந்துகொண்ட பொங்கல் விழாவில் கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைவதாக தெரிவித்த தூதர் அவர்கள், தூதரகம் மற்றும் இந்திய அரசின் சார்பில் கொரியாவில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். கொரிய தமிழ்ச் சங்கம் வெளியிட்ட மாத நாட்காட்டியை தூதர் அவர்கள் வெளியிட மகளீர் பெற்றுக்கொண்டனர். அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றம் செய்த விஞ்ஞானிகள் இருவரை தூதர் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினார். குறிப்பாக தூதரகம் இங்குள்ள இந்திய மக்களுக்கு செய்யும் உதவிகள் பற்றி தெரிவித்த தூதர் மே-2020-ல் அனுசரணை வழங்கவிருக்கும் கிரிக்கெட் போட்டிகள் குறித்தும் மக்களுக்கு அறியத்தந்தார். பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட தூதர் அவர்களுக்கு தமிழ்கூறும் நல்லுலகின் சார்பிலும் கொரியாவாழ் தமிழ் மக்களின் சார்பிலும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

பொங்கல் நிகழ்வை சுங் சோங் புக் தோ மாநிலத்தில் நிகழ்த்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அரசின் பிரதிநிதி தமிழ் மக்களுக்கு கொரிய திருநாளான சொல்-நாள் (சந்திர வருட பிறப்பு) மற்றும் பொங்கலுக்கான வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நிகழ்வில் குழந்தைகள் குழுவாகவும் பெற்றோருடனும் கலந்துகொண்ட கலைநிகழ்ச்சிகள், கோலப்போட்டி, உறியடி ஆகியவை இடம்பெற்றது.

மேலும் கொரிய-இந்திய உறவுகளுக்கு கலாச்சார பண்பாட்டு மணம் பரப்பும் வகையில் கருத்தியல் மற்றும் செயல்முறையில் பொங்கலையொத்த கொரிய அறுவடைத்திருநாளான சுசோக் திருவிழாவிற்கும் இடையேயான  ஒற்றுமை குறித்த காணொளி வெளியிடப்பட்டது.

அடுத்ததாக கொரிய தமிழ்ச் சங்கம்-பயோ கோ-ஒர்டினட் சிஸ்டெம் (Bio Co-ordinate System, Cheongcheong-buk-do Province, Korea சுங் சோங் புக் தோ மாநிலம்)  நிறுவனம் இடையே கல்வி, சுற்றுலா, பண்பாட்டு பரிமாற்றம் மற்றும் தொழிலக உறவுக்கு பணியாற்றுதல் ஆகிய துறைகளில் இணைந்து செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

கொரிய பொங்கல் நிகழ்விற்கு தமிழ்நாட்டிலிருந்து மூத்த பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வைகோ, பத்மஸ்ரீ தமிழிசைக்கலைஞர் முனைவர் நர்த்தகி நடராஜ், பிளாஸ்டிக் மேன் ஆப் என்று அழைக்கப்படும் பேராசிரியர் பத்மஸ்ரீ இராஜகோபாலன் வாசுதேவன், தமிழர் தொன்மை-கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு, மற்றும் திரைப்பட இசையமைப்பாளர் திரு. ஜேம்ஸ்  சிவஞானம் வசந்தன் ஆகியோர் வாழ்த்து அனுப்பியிருந்தனர்.

நிகழ்வின் முக்கிய அங்கமாக தமிழர் திருநாள் உரையாற்றிய கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் சுப்பிரமணியன் இராமசுந்தரம் அவர்கள், கொரியா-இந்திய உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும், 1987 முதல் விரிந்திருக்கும் சமகால கொரிய தமிழர் வரலாற்றை விளக்கி, தமிழர்கள் தொழில்முனைவோராக, கொரியாவின் வளர்ச்சிக்கு பங்காற்றும் கண்டுபிடிப்பாளர்களாக மேன்மேலும் மிளிர வேண்டியதன் தேவைப்பாடு பற்றியும் பேசினார். குறிப்பாக தமிழர்கள் இந்திய நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பேசிய தலைவர், வெளிநாடுகளில் இந்திய தூதரகம் வழியே நடத்தப்படும் சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையங்கள் அனைத்திலும் விவேகானந்தர் அவர்களின் புரவலர் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களின் படத்தை திறந்து வைக்குமாறு மாண்புமிகு பாரதபிரதமர் அவர்களுக்கும் மற்றும் வெளியுறத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வேண்டுகோள் வைத்த சங்கத்தின் தலைவர், இதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் இந்திய அரசிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நிறைவேற்றுமாறு வேண்டினார் 

குழு புகைப்படம்

பொங்கல் நிகழ்வை சங்கத்தின் அறிவுரைக்குழுவினர் முனைவர்கள் போ. கருணாகரன், செ இரத்ன சிங், இரா. அச்சுதன், அ. அந்தோனிசாமி மற்றும் தா, செபக்குமார், துணைத்தலைவர் முனைவர் திருமதி கிறிஸ்ட்டி கேத்தரின், செயலர்கள்-முனைவர்கள் கு. இராமன், செ. ஆரோக்கியராஜ் மற்றும் மோ. பத்மநாபன், முதன்மை பொறுப்பாளர் திரு. லோ. ஆனந்தகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் திரு. கோபாலகிருஷ்ணன், திரு. பிரபாகரன்,  திரு மு. ஆனந்த், திரு. வே. ஜனகராஜ், திருமதி. மதி சரண்யா, திருமதி. பிரியா குணசேகரன், திருமதி சரண்யா பாரதிராஜா, திருமதி. மதுமிதா வாசு, திருமதி தெ. விஜயலட்சுமி மற்றும் திரு. இந்திரஜித் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave a Reply