Home > கட்டுரைகள் > நேதாஜி இந்தியாவிலிருந்து தப்பியது எப்படி?

நேதாஜி இந்தியாவிலிருந்து தப்பியது எப்படி?

1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் மாநாடு ராம்காரில் கூடியது. அதற்கு போட்டியாக சமரச எதிர்ப்பு மாநாட்டை கூட்டினார் போஸ்.

அவரைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ் மாநாடு, பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் சமரசம் செய்துகொள்ளத்தான் என்று முடிவு செய்திருந்தார்.

எனவே, சமரச எதிர்ப்பு மாநாட்டில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

உடனடியாக பிரிட்டிஷ் அரசை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்க வேண்டும். ஓய்வே இருக்கக் கூடாது. இடைவெளியும் இருக்கக் கூடாது. 1932ல் நடந்ததுபோல திரைமறைவு முடிவுகளும் இருக்கக்கூடாது

போஸ் வெளியிட்ட அறிவிப்பு, 1932ல் ஒத்துழையாமை இயக்கத்தை திடீரென்று காந்தி வாபஸ் பெற்றதை கிண்டல் செய்யும் வகையில் இருந்தது.

காங்கிரஸ் என்ன சொன்னாலும் பிரிட்டிஷ் அரசு அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி சொல்லத்தான் செய்யும் நிறைவேற்றப் போவதில்லை என்பது பிரிட்டிஷாருக்கு தெரியும் என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார் போஸ்.

அவருடைய பேச்சு ஆவேசமிக்கதாக இருந்தது. ஹிட்லரிஸத்தை தான் ஆதரிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்திய போஸ், ஜெர்மன் ராணுவத்தின் பலம் தன்னை கவர்ந்துள்ளது என்றார்.

1940 ஜூலை மாதம் பிரிட்டன் ஜெர்மனியிடம் சரணாகதி அடையும். அதன்பிறகு இந்தியாவுக்குள் ஜெர்மன் நுழவதற்குள் நாம் விடுதலை பெற்றாக வேண்டும் என்று தனது நண்பர் நிரத் சவுதரியிடம் தெரிவித்தார் போஸ்.

ஆனால், பிரிட்டனுக்கு எதிரான நிலை எடுத்துள்ள தன்னை எப்போது வேண்டுமானாலும் கொடூரமான சட்டப்பிரிவின்கீழ் கைது செய்யலாம் என்று எதிர்பார்த்தார் போஸ்.

கல்கத்தாவில் இருந்த கல்கத்தா போராளிகளுக்கான நினைவுச் சின்னத்தை அகற்ற பிரிட்டிஷ் நிர்வாகம் முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்த்து பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டார் போஸ்.

திட்டமிட்டபடி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது போஸும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், போஸ் மட்டும் விடுவிக்கப் படவில்லை. அவர் மீது தேசத்துரோக குற்றங்கள் சுமத்தப்பட்டன. காங்கிரஸ் கட்சி இதைக் கண்டுகொள்ளவில்லை.

மாறாக, காங்கிரஸ் கட்சி பிரிட்டனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட இந்திய வீரர்களை அனுப்புவதற்கு ஒப்புக் கொண்டது.

ரஷ்யாவின் ஒத்துழைப்பைத்தான் போஸ் எதிர்பார்த்தார். ஆனால், புரட்சிக்குப் பிறகு அந்த நாடு சொந்த துயரங்களில் இருந்தே மீளவில்லை. இருந்தாலும், இந்தியாவின் நிலையை அது நன்றாக புரிந்திருந்தது. உதவவும் தயாராகத்தான் இருந்தது. உதவியைக் கேட்டுப்பெற உருப்படியான தூதர்களை காங்கிரஸ் ஏற்பாடு செய்யவில்லை.

போஸுக்கும் வாய்ப்பிருக்கவில்லை. இப்போதைக்கு சிறையிலிருந்து வெளியேற வேண்டும். பிறகு, மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு, நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று முடிவெடுத்தார் போஸ்.

போஸை சிறையிலிருந்து விடுவிக்க கட்சித் தலைவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விடுதலைக்காக போராடும் உன்னதமான தலைவரை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிடியில் விட்டுவிட்டார்கள்.

போர் தொடங்கிவிட்ட நிலையில் போஸ் வெளியில் இருந்தால் போராட்டத்தின் திசை மாறிவிடும். ஜெர்மனியை சமாளிக்க வேண்டிய நிலையில் இந்தியாவை கைவிட வேண்டியிருக்கும் என்று பிரிட்டிஷ் அரசு நினைத்தது.

போஸை விடுவிக்க பிரிட்டன் தயாராக இல்லை. போஸுக்கு வேறு வழியில்லை. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரது உடல் நிலை ஏற்கெனவே நலிவுற்றிருந்தது. உண்ணாவிரதம் அவரது உடலை மேலும் மோசமாக்கும் என்று அதிகாரிகளுக்கு தெரியும்.

வலுக்கட்டாயமாக உணவளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதை கடுமையாக எதிர்த்தார். வேறு வழியில்லை. ஆறு நாட்கள் கழிந்த நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தாய் மற்றும் நண்பர்களுடன் கொல்கத்தா வீட்டில் நேதாஜி

சிறையிலிருந்து வெளியே வந்தாலும் அவரது நடவடிக்கைகளை கண்காணிக்க போஸின் வீட்டைச் சுற்றி காவல் போடப்பட்டது. அவருடைய அரசியல் நடவடிக்கைகள் முடங்கின.

இங்கிருந்தால் காலம் வீணாய் போகும் என்று போஸுக்கு பட்டது. வெளியேறுவதும் எளிதில்லை. போஸ் தீவிரமாக சிந்தித்தார்.

1941 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி போஸ் மீதான தேசத்துரோக குற்றச்சாட்டு மீது விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

விசாரணை நடைபெற்றால் என்ன தீர்ப்பு வரும் என்பது போஸுக்குத் தெரியும்.

தாடி மீசையுடன் நேதாஜி போஸ்

ஜனவரி 16 ஆம் தேதி போஸ் வீட்டுக்குச் சென்று அவரைப் பார்த்த நண்பர்கள் ஆச்சரியமடைந்தார்கள். போஸ் தாடியுடன் காட்சியளித்தார்.

மழுங்க ஷேவ் செய்து பளிச்சென்று இருப்பதுதான் போஸுக்கு பிடிக்கும். ஆனால், அவர் தாடியுடன் இருந்ததற்கு காரணம் இருந்தது.

ஜனவரி 17 ஆம் தேதி அதிகாலை.

கல்கத்தாவில் உள்ள போஸின் வீட்டின் முன், ஒரு கார் வந்து நிற்கிறது.

நேதாஜி தப்பிச் செல்ல பயன்படுத்திய கார்

எவ்வித பரபரப்பும் இல்லை. வீட்டுக்குள்ளிருந்து முஸ்லிம் மதகுரு மவுல்வி ஜியாவுத்தீன் என்பவர் வெளியே வந்து காரில் ஏறுகிறார். அவருடைய குறைந்த அளவிலான லக்கேஜ் காரில் ஏற்றப்படுகிறது. பிறகு, அந்தக் கார் நழுவிச் செல்கிறது.

இரவு முழுவதும் பயணம் தொடரும். பகலில் எங்காவது ஒரு இடத்தில் ஒளிந்து கொள்வார். இப்படியாக  கல்கத்தாவிலிருந்து 210 மைல்கள் தூரத்தில் இருந்த கோமோஹ் என்ற இடத்திற்கு சென்று சேர்ந்தார்.

அங்கிருந்து, ரயில் மூலம் பெஷாவருக்குச் சென்றார். இரண்டு நாட்கள் கழித்து அடுத்த கட்ட பயணத்துக்காக தயாரானார்கள். காபூல் செல்வது அவர்களுடைய திட்டம்.

காதுகேளாத வாய்பேச முடியாத நபராக தன்னை மாற்றிக் கொண்டார். பகத் ராம் ரஹ்மத் கானாக மாறினார். இருவரும் காரில் பெஷாவரை விட்டு காபூலை நோக்கி பயணித்தனர்.

காபூல் வரை நேதாஜியின் பயணத்துக்கு உதவிய மியான் அக்பர் ஷா…

அது நாட்டுப்புறச் சாலை. மேடும் பள்ளமுமாக இருந்தது. அதில் கார் பெட்ரோல் இல்லாமல் நிற்கும்வரை பயணம் செய்தனர். கார் நின்றவுடன் அருகிலிருந்த பழங்குடியினர் கிராமத்திற்கு சென்று தங்கினர். அங்கிருந்து இரண்டு ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களுடன் ஆப்கன் எல்லையை நோக்கி கால்நடையாகவே பயணத்தை தொடர்ந்தனர்.

நான்காம் நாள் மீண்டும் ஒரு இடத்தில் காபூல் நதியைக் கடக்க வேண்டியிருந்தது. நதிக்கரையில் இரண்டு பாதுகாவலர்களும் விடை பெற்றனர்.

காபூல் செல்லும் தற்போதைய பாதை

அலுப்புத் தீர சாலையோரத்திலேயே தூங்கினார். அவரது நண்பர் பகத்ராம் காபூலுக்கு தங்களை ஏற்றிச் செல்வதற்கு கார் கிடைக்குமா என்று காத்திருந்தார்.

கடைசியில் ஒரு லாரி கிடைத்தது. லாரியின் மேல் பகுதியில் பனிகொட்டும் இரவில் போஸ் பயணம் செய்தார். ஒருவழியாக காபூலை நெருங்கிவிட்டனர்.

லாகூர் கேட்டில் டிரைவர்களுக்கான சத்திரத்தில் இருவரும் தங்கினர். அங்கிருந்தபடி, ரஷ்யாவிலிருந்து அழைப்பை எதிர்பார்த்தனர். ரஷ்ய தூதரகத்தில் அவருக்கு வரவேற்பு இல்லை. சாதகமான பதிலும் இல்லை.

ஜெர்மனி, இத்தாலி தூதரகங்களுக்குச் சென்றார்கள். இத்தாலி தூதரகத்தில் அவரை புன்னகையுடன் வரவேற்றார்கள். அங்கிருந்து பாஸ்போர்ட் வரும்வரை ரஷ்யாவை எதிர்பார்த்திருந்தார். ஆனால், இத்தாலி பாஸ்போர்ட் முந்திக் கொண்டது. ஆர்லண்டோ மஸோட்டா என்ற பெயரில் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. பாஸ்போர்ட்டைப் பெற்றுக்கொண்ட போஸ் இந்துகுஷ் மலையின் உயர்ந்த கணவாய்களைத் தாண்டி மாஸ்கோ செல்லும் ரயிலை பிடித்தார்.

அங்கிருந்து மார்ச் 28 ஆம் தேதி விமானம் மூலம் பெர்லினுக்கு பறந்தார். மாஸ்கோவில் இருக்கும்போது மீண்டும் ரஷ்யாவிடம் கேட்டுப் பார்க்கலாமா என்ற எண்ணம் வந்தது. ஆனால், இனி மறுயோசனைக்கே இடமில்லை என்று முடிவு செய்துவிட்டார்.

காபூலில் தங்கியிருந்தபோது போஸிடம் ஒருவர் கேட்டார்…

இந்துக்களும் முஸ்லிம்களும் அடித்துக் கொள்கிறார்களே, விடுதலை பெற்றபிறகு இவர்களை எப்படி ஒற்றுமைப்படுத்துவீர்கள்?

அதற்கு போஸ் பதிலளித்தார்…

“பிரிட்டிஷாரைப் போல மூன்றாவது நபர் இருக்கும் வரைதான் இந்த மோதல்கள் வளர்த்துவிடப்படும்.  இந்தியாவை இரும்புக் கரம்கொண்ட சர்வாதிகாரி ஒருவர் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தால் இந்த வேறுபாடுகள் அனைத்தும் மறைந்துவிடும். இந்தியாவுக்கு ஒரு கமால் பாஷா தேவைப்படுகிறார்” என்றார் போஸ்.

Leave a Reply