Home > கட்டுரைகள் > பாஜக மந்தையின் மேய்ச்சல் நிலமாக தமிழகம் மாற ரஜினி பயன்படுவாரா?

பாஜக மந்தையின் மேய்ச்சல் நிலமாக தமிழகம் மாற ரஜினி பயன்படுவாரா?

ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவர் அ.தி.மு.க, வலதுசாரி வாக்குகளைத்தான் பிரிப்பார். தி.மு.க.வுக்குப் பாதிப்பில்லை என்பது சிலரின் கருத்து. தர்க்கரீதியாக அது சரிதான்.

ஆனால் விஷயம் அத்துடன் முடிவதில்லை. தி.மு.க.வை வீழ்த்துவது மட்டுமல்ல பா.ஜ.க.வின் நோக்கம்.

தி.மு.க.வின் எதிரியான அ,தி.மு.க.வை வீழ்த்தி அந்த இடத்தில் தன்னை நிறுவிக்கொள்வது தான் பா.ஜ.க.வின் முதன்மையான நோக்கம். பா.ஜ.க.வால் இப்போதைக்குத் தி.மு.க.வை வீழ்த்த முடியாது.

ஒருவேளை வரும் தேர்தலில் தி.மு.க தோற்றாலும் அது நிலைக்கும். தி.மு,க.வின் அமைப்புபலம் அதைக் காப்பாற்றும்.

மேலும் ‘அடுத்த தலைவர் ஸ்டாலின்தான்’ என்று கலைஞர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க தொண்டர்களைத் தயார் படுத்திவைத்திருந்தார்.

எனவே தலைமைக்கு எதிரான அதிருப்தி எழும் வாய்ப்பில்லை.

ஆனால் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சசிகலாவின் சிறைவாசம், பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், தினகரன் பலவீனமானது, எடப்பாடியின் டெல்லி விசுவாசம் என எல்லாமே பா.ஜ.க. வழிகாட்டுதலின்பேரில்தான் நடக்கிறது.

இப்போதைக்குத் தலைமைச்சண்டைகள் ஓய்ந்ததைப்போல் வெளித்தோற்றம் இருந்தாலும் அதை மீண்டும் உசுப்ப எப்போதும் பா.ஜ.க. தயாராக இருக்கும்.

அ.தி.மு.க.வை முடக்குவது அல்லது பிளவுபடுத்துவது, அதன் ஒருபகுதியைக் கட்சியின் ஓர் அங்கமாகவோ கூட்டணியாகவோ ரஜினி கட்சியுடன் இணைப்பது, ரஜினியை முகமாகக் காட்டி பா.ஜ.க. தன் அரசியல் நலன்களை அறுவடை செய்வதுதான் பா.ஜ.க.வின் திட்டமாக இருக்கும்.

பா.ஜ.க.வின் அழுத்தத்தால் அரசியலுக்கு வருவதால்தான் ‘வென்றால் மக்களின் வெற்றி, தோற்றால் மக்களின் தோல்வி’ என்று பிடி கொடுக்காமல் பேசுகிறார் ரஜினி.

ரஜினியை அதிகாரத்தில் அமர வைப்பதைப் பா.ஜ.க.வும் அழுத்தங்களைத் தாங்கிக்கொண்டு அரசியலில் நீடிப்பதை ரஜினியும் விரும்பப்போவதில்லை.

அ.தி.மு.க.வை அழித்துவிட்டு, தி.மு.க.வுக்கு எதிர்ச்சக்தியாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான களத்தை பா.ஜ.கவுக்கு உருவாக்கிக் கொடுப்பது தான் ரஜினிக்கான பணி.

மேற்குவங்கம், திரிபுரா, பீகார் என எல்லா இடங்களிலும் பா.ஜ.க. இதைத்தான் செய்துவருகிறது.

தேசியளவில் காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பலவீனமடைந்துள்ள நிலையில் மாநிலக்கட்சிகளுக்கான மாற்றாகத் தன்னை இரண்டாமிடத்தில் தக்கவைத்துக்கொள்கிறது பா.ஜ.க. அதன் கனவு நிறைவேறாத இருநிலங்கள் தமிழகமும் கேரளமும்.

தமிழகத்தில் பா.ஜ.க. கனவுக்கான பெரும் இடையூறு தி.மு.கவின் இருப்பு அ.தி.மு.க.வாலும் அ.தி.மு.க.வின் இருப்பு தி.மு.க.வாலும் நிலைபெறுவது.

இதில் ஒரு கட்சியின் இருப்பை அழிப்பதன் மூலம் தன் கனவை நனவாக்க பா.ஜ.க. துடிக்கிறது.கிடைபோட்டு மேய்ச்சலுக்கான களத்தை உருவாக்கிக்கொடுக்கும் கிதாரியாகத்தான் ரஜினி பயன்படப்போகிறார்.

ஆனால் பா.ஜ.க.வின் இந்தக் கணக்கு எவ்வளவுதூரம் பலிக்கும் என்பது தெரியவில்லை. அ.தி.மு.க.வை பா.ஜ.க முடக்கினாலும் பிளவுபடுத்தினாலும் அதன் ஒருபகுதியினர் தி.மு.க.வுக்குத்தான் செல்வார்கள்.

சேகர்பாபு, செந்தில்பாலாஜி போன்ற உள்ளூர் செல்வாக்குள்ள அ.தி.மு.கவினரின் வருகை தி.மு.க.வை இன்னும் பலப்படுத்தவே செய்யும்.

தி.மு.க.வுக்கான மாற்றாக கம்யூனிஸ்ட்களோ விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தலித் அமைப்புகளோ இன்னும் சொல்லப்போனால் கமல்ஹாசனோ, சீமானோ இருப்பதுகூட பிரச்னையில்லை.

ஆனால் தி.மு.க.வை எதிர்கொள்ளும் சக்தியாக பா.ஜ.க. தன்னை நிலைநிறுத்திக்கொண்டால் அது ஒட்டுமொத்த தமிழக அரசியல் சூழலையும் மாற்றும்.

‘தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றக்கூடாது’ என்று நினைப்பவர்களுக்கு தி.மு.கவை ஆதரிப்பது மட்டுமல்ல, அ.தி.மு.க.வையும் காப்பாற்றக்கூடிய வினோதமான கடமை இருக்கிறது என்பது வரலாற்று முரண்தான்.

Suguna Diwakar

You may also like
நல்லா கெளப்புறாய்ங்கடா பீதிய! – ஒரு சாமியாரின் புது சரடு!
உதயநிதி ஸ்டாலின் ஊர் சுற்ற வேண்டும்!
சீமான் அயோக்கியர் என்று சொல்ல பல காரணங்கள் உள்ளன..!
தம்பிகளின் தல வரலாறு . பாகம் 2.

Leave a Reply