Home > கட்டுரைகள் > பேருந்தில் தூங்குவதொன்றும் பெரிய விஷயம் இல்லை

பேருந்தில் தூங்குவதொன்றும் பெரிய விஷயம் இல்லை

காவிய நாயகன்!

பேருந்தில் தூங்குவதொன்றும் பெரிய விஷயம் இல்லை. நெடுந்தூரப் பயணங்களில் தூங்கித்தான் பொழுதைக் கழித்தாகவேண்டும். அலுவலகத்துக்குக் கிளம்பும் குட்டிப் பயணங்களில் சற்று அசந்தால், இறங்கவேண்டிய நிறுத்தம் தவறிவிடுமென்பதால் பெரும்பாலும் தூங்குவதில்லை. அதையும் மீறி தூக்கம் நம்மை அசைத்துப்பார்த்த தருணங்களும் உண்டு.

பேருந்தில் தூங்கும் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு கும்பகர்ணனை சமீபத்தில்தான் பார்த்தேன். கோயம்பேட்டிலிருந்து ஆவடி செல்லும் பேருந்து. நெடுநெடுவென உயரம். ஆகப் பருமனான சோடாபுட்டிக் கண்ணாடி, காதில் ஹெட்போன். முன்னிருக்கையில் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். இளைஞர்தான். வேலைக்குச் செல்பவர்போல் தோற்றம்.

நடத்துருக்கு எதிரே ஆண்கள் வரிசையில், படிக்கட்டுக்கு நேரேயுள்ள இருக்கை. தூக்கமயக்கத்தில் வண்டி குடைசாய்ந்துகொண்டிருந்தது. வழக்கமாக தூங்குபவர்கள் அருகேயுள்ளவர்மீது சாய்ந்து நரக அனுபவத்தை வழங்குவார்கள். இவரோ எதிர்த்திசையில் சாய்ந்துகொண்டிருந்தார். நடத்துநருக்கே லேசான பயம்தான். ஆசாமி குடைசாயும் லட்சணத்தைப் பார்த்தால் வண்டியிலிருந்து சரிந்து படிக்கட்டு வழியாக உருண்டு வெளியே விழுந்துவிடுவார் போலிருந்தது. கண்டக்டர் குரல் கொடுத்துப் பார்த்தார். தட்டிப் பார்த்தார். எதுவும் அவரை அசைக்கவில்லை.

சில நிமிடங்களில் சட்டை மேற்பையிலிருந்த அவரது செல்போன் கீழே விழுந்தது. ம்ஹூம்… அவருக்கு முன்னிருக்கை நபர் அதை எடுத்து, அவரை உசுப்பி நீட்டினார். திடீரென வேறொரு உலகத்துக்குள் நுழைந்ததுபோல தூக்கமும் அரைவிழிப்புமாய் அவரைப் பார்த்தாரே தவிர செல்போனை வாங்கிக்கொண்டாரில்லை. உங்க செல்போன்தான் சட்டையிலிருந்து கீழே விழுந்துடுச்சு. அரைத் தூக்கத்திலே வாங்கி சட்டைப் பையில் வைத்துவிட்டு மீண்டும் உறக்கம்.

பின்னாலேயே அவரது கண்ணாடி கழன்று கீழே விழுந்தது. இதுவும் அவரது பிரக்ஞையைத் தொடவில்லை. மது அருந்திவிட்டு வந்திருப்பாரோ என எனக்கு லேசான சந்தேகம். முதலில் செல்போனை எடுத்துத் தந்த நபரே கண்ணாடியையும் எடுத்து அவரிடம் தந்தார். அரைத் தூக்கத்திலேயே வாங்கி மாட்டிக்கொண்டார். நானும் மெல்ல முன்சீட்டில் அவரை எட்டிப் பார்த்தேன். மது வாசனை எதுவும் இல்லை. பக்கத்து சீட்டுகளில் அந்நபரின் தூக்கம் குறித்து முணுமுணுப்புகள் எழுந்தன.

திரும்பவும் ஒருபக்கமாய் ஆசாமி குடைசாய்ந்தார். செல்போன் மீண்டும் தவறி கீழே விழுந்தது. முன்னிருக்கை ஆசாமி எடுத்துத் தரும்போது, அவரில் ஒருவித எரிச்சல் மண்டியிருப்பதை உணரமுடிந்தது. நடத்துநர் அவரைத் தட்டியெழுப்பி, செல்போனை மடியில் வைத்திருந்த பேக்கில் வைக்கச்சொன்னார். அதேநேரம் அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதைக்கூட ஏற்காமல் அப்படியே உள்ளே போட்டுவிட்டு கடமைதவறாமல் கணணயரத் தொடங்கினார்.

இதற்குள் நான் இறங்கவேண்டிய பேருந்து நிறுத்தம் நெருங்கியிருந்தது. ஆசாமியின் கண்ணாடி மீண்டும் தவறி, மடிமீது வைத்திருந்த அவரது கையிலேயே தேங்கியிருந்தது. பார்த்தால் வேலைக்குப் போகிறவர் போல தெரிந்தது. இந்த லட்சணத்தில் அலுவலகத்தில் போய் என்ன வேலையைப் பார்த்துவிடுவார் என்ற சந்தேகமும் எழுந்தது. அதுசரி காவிய கதாபாத்திரங்களை இப்படியல்லாமல் வேறெந்த வகையில் சந்திப்பது!

You may also like
எத்தனை முறை சொல்லுவது
துயில் கொள்ள
தாலாட்டு
நான் நேசிப்பது உன்னை

Leave a Reply