Home > கட்டுரைகள் > அதிமுகவின் பரிதாப நிலைக்கு அதிமுகவே காரணம்!

அதிமுகவின் பரிதாப நிலைக்கு அதிமுகவே காரணம்!

“பாஜகவின் முதன்மைக் குறி யார்?” என்று சமஸ் இந்து தமிழில் கட்டுரைஎழுதியிருக்கிறார். அதன் நோக்கம் அதிமுக வகிக்கும் இரண்டாம் இடத்தைப் பெறுவதுதான் என்று கணித்துள்ளார்.

“தேர்தலுக்குப்பின் அதிமுக நிச்சயம்இன்றைய பலத்தாடு நிற்க முடியாது. அப்போது அதிமுகவின் இடம் தனதாகும்என்று பாஜக இயங்குகிறது” என்கிறார்.

அது நடப்பது திராவிட இயக்க அரசியலுக்கு உகந்ததல்ல என்கிற தொனியும் அந்தக் கட்டுரையில் உள்ளது.

அதிமுகவின் இடத்தை பாஜக கைப்பற்றுவது பற்றி சமஸ் கவலைப்படுவதாகத் தெரிகிறது. ஆனால் இப்படியொரு நிலை உருவாகியிருப்பதற்கு அதிமுக தான் காரணம் என்பதை அவர் சொல்லவில்லை.

அதிமுகவை தனது முதன்மைக்குறியாக பாஜக கொண்டிருப்பதன் காரணம் ஜெ. யின் மரணம் மட்டுமல்ல.கலைஞரும்தான் காலமாகிப் போனார்.

ஏன் அது திமுகவைக் குறி வைக்கவில்லை? இங்குதான் அந்த வித்தியாசம் துல்லியமாக உள்ளது.

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கூறுகள் சமூக நீதி, தமிழ் உணர்வு, மாநிலசுயாட்சி, மக்கள்நலத் திட்டங்கள். இன்றைக்கிருக்கிற அதிமுக தலைமை இந்தநான்கிலும் கோட்டை விட்டிருக்கிறது.

சில கூறுகளில் ஒரு சில நடவடிக்கைகள்எடுத்தது என்றால் அதுவும் திமுக மற்றும் கம்யூனிஸ்டுகள் கொடுத்த அழுத்தத்தன் காரணமாகவே.

அவர் குறிப்பிட்டுள்ள 7 1/2% உள்ஒதுக்கீடுகூட அப்படியாகத்தான் நடப்புக்கு வந்தது. இல்லாவிடில் இன்னும் அது ஆளுநர் மாளிகையின்பரணியில் தூசி படிந்து கிடக்கும்.

கட்சியின் பெயரில் அண்ணா இருக்கிறார், திராவிடம் இருக்கிறது. ஆனால் அவர்களின் பேச்சில், செயலில் அண்ணாவின் ஆரிய எதிர்ப்பு, திராவிடச் சிந்தனை வெளிப்பட்டது உண்டா? அண்ணாவையே மறந்தவர்கள் பெரியார் பெயரைச் சொல்வார்களோ? அதனால் தான் தைரியம் வரப்பெற்றவர்களாக, இருவரையும் தரக்குறைவாகப் பேசினார்கள், பெரியாரின் சிலையை அவமதித்தார்கள் சங்கிகள்.

ஒரு டி வி நிகழ்ச்சியில் ஒரு மந்திரி பேசினார்: “எனக்கு பெரியாரையும் தெரியாது, அண்ணாவையும் தெரியாது. நான் அறிந்தது எல்லாம் எம்ஜிஆரையும் அம்மாவையும்தான்”.

இப்படியாக திராவிடக் கட்சி எனச் சொல்லிக் கொண்டே திராவிட மரபையும் வரலாறையும் புறக்கணித்தது அதிமுகவின் தலைமை.

இது எந்த அளவுக்குச் சென்றது என்றால் மநுஅதர்மத்திற்கு சங்கிகள் போலவே வக்காலத்து வாங்கும் அளவிற்கு! இதுதான் பாஜகவிற்கு வசதியாகத் தெரிகிறது இவர்களை எளிதில் வளைத்துப் போடலாம் என்று.

பெரியார், அண்ணாவை மறந்தது மட்டுமல்ல எம்ஜிஆரையும் இழந்து விட்டார்கள். இன்றைக்கு ஆளாளுக்கு அவரைச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

“எம்ஜிஆர் ஆட்சியை அமைப்போம்” என்று பாஜக, ரஜினி, கமல் என்று வரிசையாகக் கிளம்பியிருக்கிறார்கள்.

அப்படியெனில் பழனிசாமியின் ஆட்சி யாருடையஆட்சி? “அம்மா ஆட்சி” என்று ஜெ. புகழை மட்டும் பாடியதால் எம்ஜிஆரும் பறிபோனார்! ஆனால் இந்த ஆட்சி “அம்மா ஆட்சிதானா?” என்று மக்கள் கேள்வி எழுப்பும் நிலையும் வந்துள்ளது-சில அமைச்சர்கள் பாடும் மோடி புகழ் கேட்டு.

“மோடியே எங்களுக்கு டாடி” என்றார் ஓர் அமைச்சர். “மோடியா? இந்த லேடியா? பார்ப்போம் ஒரு கை” என்று ஜெ. சவால் விட்டுப் பேசியதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

அந்த அமைச்சர் மட்டுமா, முதலமைச்சரே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க விமானநிலையம் போய்க் காத்துக் கிடந்தது இது அம்மா ஆட்சி அல்ல, ஆமாம் சாமிகளின் ஆட்சி என்பதை நிரூபித்தது.

அதுமட்டுமல்ல அரசுவிழாவில் வலியக்கப் போய் பாஜகவோடு கூட்டணி என பன்னீர்செல்வம் அறிவிக்க, அதை பழனிசாமி வழிமொழிய, அப்போதும் அது பற்றி பேசாமல் இவர்களை அசிங்கப்படுத்தினார் அமித்.

அதுமட்டுமா, சங்கிகள் அதைப் பெருமையோடு பேசி வருகிறார்கள். கேவலப்பட்டுப் போனார்கள் முதல்வரும் துணைமுதல்வரும்.

இந்த லட்சணத்தில் கட்சியையும் ஆட்சியையும் நடத்திக் கொண்டிருந்தால் அதன்இடத்தைக் கைப்பற்ற ஏன் கணக்குப் போடாது பாஜக? இடத்தைக் கொடுத்தாலேமடத்தைப் பிடிக்கும் கட்சி அது.

இவர்களோ சித்தாந்த ரீதியாகவும் செயல்பாட்டுரீதியாகவும் பாஜகவிற்கு ஏற்கெனவே அடங்கிப் போனவர்கள்.

இம்சை மன்னன் 23ஆம் புலிகேசி போல பரிதாபமாகச் சரணடைந்தால் ஆச்சரியப்பட வேண்டியதுஇல்லை.

பாஜகவிற்கு “வரவிருக்கும் தேர்தலில் ஆகப்பெரும் இலக்கு பழனிசாமியின் அதிமுகதான்” என்கிறார் சமஸ்.

இரட்டை தலைமையில் இன்னொரு பெயரை விட்டுவிட்டது யதேச்சையா அல்லது பொடி வைத்து எழுதியதா என்று தெரியவில்லை.

எப்படியோ இந்தத் தேர்தல் அதிமுகவின் இருப்பையே கேள்விக்குறியாக்கப் போகிறது என்பது உண்மை. அதற்கு முதலும் கடைசியுமான காரணம் அதிமுக தலைமையே.

You may also like
என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கத்தின் மனக்குமுறல்
அமித்ஷா சென்னை வருகை ரத்து – அதிமுகவினர் மிரட்சி!
முதல்வர் வேட்பாளர் பாஜக தலைவர் கருத்துக்கு அதிமுக பதில்
வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?

Leave a Reply