Home > கட்டுரைகள் > சிரிக்கத் தெரியாத கட்சியை சிரிக்க வைத்தவர் தோழர் நன்மாறன்!

சிரிக்கத் தெரியாத கட்சியை சிரிக்க வைத்தவர் தோழர் நன்மாறன்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே இறுக்கமான கட்சி. சிரிக்கவே மாட்டார்கள். சீரியசானவர்கள்தான் தலைவர்களாக இருப்பார்கள். நகைச்சுவைக்கும் அவர்களுக்கு ரொம்பதூரம் என்றெல்லாம் பேசுவார்கள்.

அதை உடைத்து தகர்த்தவர் தோழர் நன்மாறன். சின்னவயதிலேயே கட்சிக்கு வந்தவர். மதுரை அழகரடியில் பிறந்து, ஞாயிற்றுக்கிழமை சந்தைத்திடல் என்று அழைக்கப்பட்ட திலகர் திடலில் நடந்த தலைவர்களின் கூட்டத்தை கேட்டு வளர்ந்தவர். தந்தை பெரியாரின் பேச்சுக்களை கேட்டு ஈர்க்கப்பட்டவர்.

தமிழகத்தில் அவர் போகாத தாலுகாக்கள் இல்லை என்று சொல்வார்கள். நடந்தும், சைக்கிளிலும், பேருந்துகளிலும், ரயிலிலுமாக பயணம் செய்து, கிடைத்த உணவை சாப்பிட்டு, கிடைத்த இடத்தில் தூங்கி கட்சியை வளர்த்த தலைவர்களில் நன்மாறனுக்கு சிறப்பான இடம் உண்டு.

ஒரு கோரிக்கைக்காக போராட்டம் என்றால், அது நிறைவேறும்வரை தொடர்ந்து போராட வேண்டும் என்று உறுதியாக இருந்து, வேலையில்லா காலத்து உதவித்தொகையை பெற்றுக் கொடுத்ததில் நன்மாறனின் பங்கு மறக்கமுடியாதது.

மதுரை டி.வி.எஸ். பேருந்துகளில் நடத்துனராக பணிபுரிந்தார். அந்தச் சமயத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி கிளைகளில் பங்கெடுத்தவர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை கட்டி எழுப்பியதில் இவருடைய தலைமையிலான குழுவின் பங்கு மறக்க முடியாதது.

கம்யூனிஸ்ட் கூட்டங்களில் முதன்முதலில் சிரிப்பலையை உருவாக்கியவர் நன்மாறன். கடினமான விஷயத்தையும் எளிமையான தமிழில் சிரிக்க வைத்து விளக்குவார்.

இன்றைக்கு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கும் மதுக்கூர் ராமலிங்கம் அவருடன் நிறைய பயணித்திருக்கிறார்.

ஒருமுறை மதுக்கூர் ராமலிங்கமும் நன்மாறனும் மலேசியா சென்றார்கள். அங்கு நடந்த நிகழ்ச்சிகள் முடிந்து, நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் கடைத்தெருவுக்கு அழைத்துப் போனார்கள். நகைக்கடைகள் சிலவற்றை பார்த்துவிட்டு ஒன்றும் வாங்காமல் திரும்பினார்கள்.

“என்ன தோழர் ஒன்றும் வாங்கவில்லையா?” என்று நண்பர்கள் கேட்டார்கள்.

“நாங்கள் வாங்க முடியாது. ஏங்கத்தான் முடியும்” என்றார் நன்மாறன்.

நன்மாறனின் பஞ்ச்களில் பல வாய்விட்டு சிரிக்கும்படியாக இருக்கும். ஒருமுறை மேடையில் பேசிய மதுக்கூர் ராமலிங்கம்,

“மூப்பனார் நாலுமுள வேட்டிதான் கட்டுவாரம், ரப்பர் செருப்புதான் போடுவாராம். அதனால அவர் எளிமையானவர் என்று சொல்கிறார்கள். நன்மாறனும் அப்படித்தான்…” என்றார்.

பின்னர் பேசிய நன்மாறன், “எல்லாத்தையும் வச்சுக்கிட்டு போடாம இருந்தா அதுக்கு பேரு எளிமை. நான் இப்படி இருக்கேன்னா அதுதான் என்னோட நெலமை” என்றார்.

“ஒரு மேடையில் நன்மாறனை, மதுரை தந்த மாணிக்கம், கருப்புத் தங்கம்” என்று கூறினார்.

“நீங்கபாட்டுக்கு எதையாவது சொல்லாதீங்க. வீட்டுக்கு ரெய்டு வரப்போறாங்க” என்றார் நன்மாறன்.

“அப்படியே ரெய்டு வந்தாலும், உங்கள் வீட்டில் அள்ள அள்ள குறையாத நகைச்சுவையும், தமிழ்சுவையும்தானே கிடைக்கும் தோழர்” என்றார் மதுக்கூர்.

சிபிஎம்மில் எவ்வளவு பெரிய தலைவர்களாக இருந்தாலும், மத்தியக்குழு உறுப்பினர், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் என்று அழைப்பது நன்மாறனுக்கு பிடிக்காது. இப்படி சொல்வதால், பொதுமக்களுக்கு அவருடைய அருமை தெரிவதில்லை என்பார். ஒருமுறை மதுரைக்கு அன்றைய சிபிஎம் பொதுச்செயலாளர் சுர்ஜித் வந்தார். அவரைப் பற்றி நன்மாறன் பேசியது இது..

“மதுரை மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. உங்களை காண ஒரு மகான் வருகிறார். இவர் இமயமலையிலிருந்து வரும் மகான் அல்ல. இவரை பார்த்தால் உங்கள் பாவம் தீராது. ஆனால், இவரால் நாட்டைப்பிடித்த பாவம் போயிரும்” என்றார்.

“மதுரை மக்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். வாழ்க்கை என்பது கோரிப்பாளையம் மகப்பேறு மருத்துவமனையில் தொடங்கி, தத்தனேரி சுடுகாடு போற தூரம்தான். ரொம்ப அலட்டிக்காதீங்கÓ

“மதுரை மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் எப்போ பார்த்தாலும் ஆங்கிலப்படம்தான் போடுறான். ஒரு படத்துக்கு ரத்தத்தை உறைய வைக்கும் என்கிறான். இன்னொரு படத்துக்கு ரத்தத்தை சூடாக்கும் என்கிறான். ஏன்தான் ரத்தத்தை இந்த பாடு படுத்துறானுகளோ”

தமுஎகச கலைவிழாவில் மணிரத்னத்தை வைத்துக்கொண்டு பம்பாய் திரைப்படம் குறித்து பேசும்போது, “சகோதரி மனிஷா கொய்ராலா” என்று நன்மாறன் சொன்னதும், சிரிக்காத மணிரத்னமே குலுங்கிச் சிரித்தார். அதுபோலத்தான், பட்டிமன்றம் ஒன்றில் “சகோதரி சில்க்” என்று சொல்லி சிரிக்க வைத்தார். மனிஷாவையும், சில்க்கையும் சகோதரியாக பார்த்தவர் நன்மாறன்.

சட்டமன்றத்தில் கலைஞர் இருக்கும்போது கேள்வி கேட்டு பதில் பெறுவதில் ரொம்ப விருப்பம் என்பார் நன்மாறன்.

ஒருமுறை “மதுரையில் டைடல் பார்க்கிற்கு எப்போது அடிக்கல் நாட்டப்படும்?” என்று கேட்டார் நன்மாறன்.

“கல் தயாரானவுடன் நாட்டப்படும்” என்றார் கலைஞர்.

அடுத்து “டைடல் பூங்கா எந்த அளவில் இருக்கிறது?” என்றார் நன்மாறன்

“அரும்பும் நிலையில் இருக்கிறது” என்றார் கலைஞர்

சட்டமேலவை தேவையில்லை என்பதே சிபிஎம் நிலை. மேலவையை மீண்டும் கொண்டுவர தீர்மானம் கொண்டுவந்தபோது, அதை எதிர்த்து பேசினார் நன்மாறன்.

“மேலவை மீண்டும் வந்தால் சிபிஎம் பங்கேற்குமா, பங்கேற்காதா” என்று திமுக அமைச்சர் கேட்டார்.

“விலைவாசி உயர்வு போராட்டத்தை நடத்தினால், அப்புறம் ஏன் சாப்பிடுகிறீர்கள் என்று கேட்பதைப் போல இருக்கிறது” என்றார் நன்மாறன்.

நன்மாறன் கல்லூரியில் பியுசி படிக்கும்போதே கட்சிக்கு வந்துவிட்டார். அது அவருக்குள் குறையாகவே இருந்தது. அவருக்கு 45 வயதாகும்போது, மதுரை காமராஜர் பல்கலையில் அஞ்சல் வழியில் எம்.ஏ., படித்துத் தேறினார்.

“கண்டதைப் படித்தால் பண்டிதனாவான்” என்று அடிக்கடி சொல்வார் நன்மாறன். இளைஞர்களிடம் அவர் கூறுவது இதைத்தான்.

மதுரையில் நன்மாறன் இறுதி நிகழ்ச்சியில் தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சன்யா ஒரு விஷயத்தை குறிப்பிட்டார்.

“மதுரையின் வீதிகளில் இறந்தால் நன்மாறனைப் போல இறக்க வேண்டும் என்று கூறுவதை கேட்க முடிந்தது. நன்மாறனைப் போல சாக வேண்டும் என்றால் அவரைப் போல வாழ வேண்டும்“ என்று கூறி கலங்க வைத்தார்.

நன்மாறனின் சீடர் என்றே சொல்லப்படும் மதுக்கூர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதையும் கூற வேண்டும்.

“தாய்ப்பறவை போல எத்தனையோ மேடைகளுக்கு அழைத்துப்போன ஆசான், தகன மேடைக்கு தனியாக போய்விட்டார்”

கட்சிக்கு உழைத்த கடமை உணர்வுள்ள போராளியை அவருடைய கட்சி மிகப்பெரிய கவுரவத்துடன் வழியனுப்பி வைத்தது.

Leave a Reply