Home > கட்டுரைகள் > தந்தை பெரியார் இதற்காகத்தான் நாய் வளர்த்திருப்பாரோ?

தந்தை பெரியார் இதற்காகத்தான் நாய் வளர்த்திருப்பாரோ?

இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது நினைவுகள் பின்னோக்கி இழுக்கின்றன.
மேடையில் பேசுவது என் தந்தை இறையனார்.

எனக்கு 5 அல்லது 6 வயது இருக்கலாம், தந்தை பெரியார் தேவகோட்டை வந்திருந்தார். (அதுதான் அவர் கடைசியாக தேவகோட்டை வந்ததும்) அரசு பயணியர் விடுதியில் தங்கியிருந்தார். எங்கள் அம்மா அய்யாவுக்காக பகலுணவை தயார் செய்துகொண்டு என்னையும் இழுத்துக்கொண்டு விடுதிக்கு விரைந்தார்.

பகல் 2 மணிக்கு மேலாகிவிட்டதால் அய்யாவின் பசியறிந்து உணவை எதிர் பார்த்து கொண்டிருந்த என் அப்பா இறையனார் என் அம்மாவை ஏன் தாமதமாக வந்தாய் என்று திட்ட, “விடுங்க இறையன் ;நம்ம சொல்லிடுவோம் சமைச்சு கொண்டு வர்றவங்களுக்கில்ல கஷ்டம் தெரியும், நீங்க சாப்பாடை வைங்கம்மா” என்று சொன்னார் அய்யா. ஆட்டுக்கறி குழம்பும்,கறிக்கோலா உருண்டையும் கோழி வருவலுமாக என் அம்மா திருமகள் எடுத்து வைக்க, என் அம்மாவை முறைத்துக்கொண்டே அய்யாவுக்கு மணியம்மையார் ஒவ்வொரு கறித்துண்டை மட்டுமே வைத்தார்.

அய்யா சாப்பிட்டுவிட்டு “குழம்பு நல்லாருக்கு, வறுவல் நல்லாயிருக்கு” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். அப்படியென்றால் இன்னும் கொஞ்சம் வை என்று அர்த்தம்.

“ம்ம்.. போதும் போதும்” என்று அதட்டலாக மணியம்மையார் சொன்னார். அந்த அதட்டலுக்கு பின்னால் உள்ள அக்கறை அன்று எனக்கு புரிந்திருக்கவில்லை. பயந்து கொண்டே கடுமையாக முகத்தை வைத்திருந்த மணியம்மையாரை பார்த்து கொண்டு நின்றேன்.

இப்போது நினைத்துப்பார்த்தால் சிறுகுழந்தையை பாதுகாப்பது போலல்லவா அய்யாவை அம்மா இந்த இனத்திற்காக காப்பாற்றி வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது!

அன்று மாலை தேவகோட்டை ஆர்ச் பகுதியில் பொதுக்கூட்டம். அய்யாவுக்கு நாங்கள் (என்அக்கா பண்பொளி, நான், என் தங்கைகள் இறைவி, மாட்சி) ஹார்லிக்ஸ் பாட்டில் கொடுப்பதற்காக மேடையேறி அன்று காலையிலிருந்து சொல்லி பார்த்துக்கொண்ட கடவுள் இல்லை கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று நான் சொல்லச்சொல்ல என் அக்கா தங்கையெல்லாம் பின்னால் சொன்னார்கள்.

சொல்லி முடிந்தவுடன், தந்தை பெரியார் அவர்களுக்கு இந்த ஹார்லிக்ஸ் என்று சொல்வதற்குள் அய்யா அவர்கள் ஒரு அட்டையை கொடுத்து (இந்த அட்டைகள் அப்போது எல்லா திராவிடர் கழக தோழர்கள் வீடுகளிலும் மாட்டி விடப்பட்டிருக்கும்) இதையும் சொல்லு என்றார்.

“ஆத்மா, மோட்சம் நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் ஆகியவைகளை கற்பித்தவன் அயோக்கியன், நம்புகிறவன் மடையன், இவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகா மகா அயோக்கியன்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் ஒருமுறை தந்தை பெரியார் அவர்களுக்கு ஹார்லிக்ஸ் பாட்டிலை பிள்ளைகள் சார்பாக கொடுக்கிறோம் என்று சொல்லி விட்டு இறங்கினோம்.

இது என்னுடைய முதல் மேடை அனுபவம்.ஏதோ பெரிதாக ஒன்றை சாதித்தது போல் சிறுபிள்ளைக்கு உரிய நினைப்பு எனக்கு!

அதிலும் அய்யாவின் பக்கத்திலேயே அழகான பெரிய நாய் வேறு மேடையிலேயே உட்கார்ந்திருந்தது. அய்யா பால் குடித்த போது ஒருதட்டு வைத்து (மேடையில்) அதற்கும் ஊற்றினார். நக்கி நக்கி குடித்ததையே பார்த்து கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தில் மேடைக்கு மற்ற முக்கிய பெருமக்கள் வந்தபோது, ஏ நாயி பெரியவங்கல்லாம் வர்றாங்க இறங்கிப்போ என்றார். உடனே அதுவும் மேடையிலிருந்து இறங்கி அய்யாவுடைய வேனுக்கு வந்துவிட்டது.

கூட்டம் முடியும்வரை அந்த நாயைத்தான் பார்த்து கொண்டிருந்தேன். அய்யா அந்த நாயின் மேல் கொள்ளைப் பிரியம் கொண்டிருந்தார். மீண்டும் மீண்டும் நாய்களை அய்யா வளர்த்து கொண்டேயிருந்தார்.

ஒருவேளை அவரால் பயனடைந்த இந்த மனித சமூகம் காட்டாத நன்றியை அந்த நாய்கள் காட்டியதால் தானோ என்னவோ?

#Isai_Inban இசை இன்பன்

Leave a Reply