Home > கட்டுரைகள் > இயக்குனர் பா.ரஞ்சித்தின் அரைவேக்காடு அரசியல்….

இயக்குனர் பா.ரஞ்சித்தின் அரைவேக்காடு அரசியல்….

ஒரு நாளேனும் வந்தது நன்றே; ஒவ்வொரு நாளும் உடனிருந்தோரை மறைத்தல் அத்தனை நன்றா? திரைப்பட இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் இன்று தீவுத்திடல் பகுதியில் வசிக்கும் மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவருக்கு பாராட்டுகள்.

ஒரு பிரபலமாக இருந்துகொண்டு மக்கள் பிரச்சினைக்காக பேசுவதென்பது நல்ல ஒரு கவன ஈர்ப்பை அப்பிரச்சினைக்கு பெற்று தரும்.

அதே நேரத்தில், அந்த கவன ஈர்ப்பு உண்மைகளிலிருந்து மக்களின் பார்வையை திசை திருப்புவதாகவும் ஆகிவிடக் கூடாது.

தீவுத்திடல் பகுதியிலிருந்து பா.ரஞ்சித் பேசியவை என சில கருத்துகள் போஸ்டர் ஆக வடிவமைக்கப்பட்டு சமூகதளங்களில் பகிரப்படுகின்றன.

தொடர்ந்து அந்த கருத்துகளை பிற செய்தி தளங்களும் ரஞ்சித்தின் ஆதரவாளர்களும் பகிர்கின்றனர்.

அந்த போஸ்டரில் நான்காவது கருத்தாக ‘எந்த கட்சியினரும் இப்பகுதி மக்களை சந்திக்க வரவில்லை’ என்றும் ‘மக்களின் உயிரையும் உடைமைகளையும் யாரும் பொருட்படுத்தவில்லை’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பா.ரஞ்சித் இப்படி பேசினாரா என்பது தெரியவில்லை. ஆனால் நீலம் பண்பாட்டு மையம் நீலம் பண்பாட்டு மையம் அக்கருத்துகளை கொண்ட படத்தை ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருப்பதால் தோழர் பா.ரஞ்சித் அப்படி பேசியதாகவே புரிந்து கொள்கிறேன்.

தீவுத்திடலுக்கு அருகே இருக்கும் பகுதிக்கு தோழர் பா.ரஞ்சித் வந்த நிமிடத்திலிருந்து சுற்றி யார் இருக்கிறார் என்று கூட கவனிக்காமல் எந்த கட்சியும் வரவில்லை எனப் பேசியிருக்கிறார்.

அதையொட்டி அவரின் ஆதரவாளர்கள் ஓட்டுக்காகத்தான் கட்சிகள் வருகின்றன என்ற வகையில் சமூகதளங்களில் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

இன்று காலையே (9/12/20) தீவுத்திடல் பகுதிக்கு சென்று மக்களுக்காக களத்தில் நின்று கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை Cpim Central Chennai மாவட்டச் செயலாளர் தோழர் செல்வாவை G Selva அருகில் வைத்துக் கொண்டுதான் பா.ரஞ்சித் இப்படி பேசியிருக்கிறார்.

மாவட்டக்குழு தோழர்கள் பலரும் அங்குதான் இருக்கின்றனர். அப்பகுதி மக்களை வெளியேற்றப் போகிறார்கள் என்ற தகவல் வந்த நேற்று இரவே தோழர்கள் தாமோதரனும் ஜமாலும் குமாரும் அங்கு சென்று மக்களை சந்தித்திருக்கின்றனர்.

இன்று போய் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக் குழுவினர் சந்தித்திருக்கின்றனர்.

நேற்றே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளை தோழர் எம்.வி.கிருஷ்ணன் உட்பட சந்தித்திருக்கின்றனர்.

இதற்கும் முன்னால் நவம்பர் மாதம் 4ம் தேதி மொத்தம் 327 குடும்பங்களையும் அழைத்துக் கொண்டு தோழர் செல்வாவின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்திருக்கிறது.

தீவுத்திடலுக்கு அருகே இருக்கும் அன்னை சத்யவாணி முத்து நகர், காந்தி நகர், இந்திரா காந்தி நகர் முதலிய பகுதிகளில் இருக்கும் மக்களை வெளியேற்றும் அரசின் முயற்சியும் அம்முயற்சிக்கு எதிரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டமும் இன்று நேற்று மட்டும் நடந்த விஷயங்களல்ல.

நீண்ட நெடிய போராட்டம் அது.2019-ம் வருடம் டிசம்பர் 29ந் தேதி காவல்துறையினர் உதவியோடு திடீரென ஆக்கிரமிப்பை அகற்றுவதாக பொதுப்பணித்துறை அதிகாரி வந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை திரட்டி அவர்களை எதிர்கொண்டது.

அப்போது கட்சியின் கிளைச் செயலாளர் ஆசைத்தம்பி காவல்துறையால் தாக்கப்பட்டார். அடுத்த நாளே மார்க்சிஸ்ட் கட்சியின் CPIM Tamilnadu மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அப்பகுதிக்கு சென்றார்.

தலைமை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தீவுத்திடலுக்கு அருகே வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் அரசின் முயற்சிகளை ஒரு வருட காலமாக ஆர்ப்பாட்டம், போராட்டம், மனு கொடுப்பது என பல்வேறு வழிகளில் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து மக்களுக்கான நியாயத்தின் பக்கம் நின்று கொண்டிருக்கிறது.

இவை எதையும் தெரிந்து கொள்ளாமலும் அதிகபட்சமாக களத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கட்சியின் உறுப்பினர்களை அருகிலேயே வைத்துக் கொண்டும் யதார்த்தத்துக்கு முரணான கருத்துகளை தோழர் பா.ரஞ்சித் பேசுவது யாருக்கு உதவியாக இருக்கும்?

மக்களுக்கென களத்தில் நின்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் கட்சியை புறக்கணித்துவிட்டு பேசுவதென்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்?

மக்களுக்கென போராடுவோரையும் மக்கள் பக்கம் நிற்காதவரையும் ஒரே தட்டில் வைத்து பேசுதல் என்ன நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் ?

இனியாவது பா.ரஞ்சித் இது போன்ற விஷயங்களில் பேசுகையில் களத்தில் நடக்கும் விவரங்களை சேகரித்து, எந்த கட்சி அங்கு மக்களுக்காக நிற்கிறது என்பதையும் தெரிந்து கொண்டு பேச வேண்டும்.

அது மட்டும் தான் உண்மைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கான சரியான வழியாக இருக்கும். மக்களுக்கான நியாயமாகவும் இருக்கும்.

தோழர். Kanagaraj Karuppaiah

You may also like
மார்க்சின் சிந்தனையை எங்கெல்ஸ் சிதைத்தாரா? – ஏங்கெல்ஸ் பற்றிய தொடர் 2
எங்கெல்ஸ் அருணன் என்கிற நான்..! – ஏங்கெல்ஸ் பற்றிய தொடர் 1
கொசஸ்தலை ஆறு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க, ஆட்சியர் அறிவுறுத்தல்
சென்னை காசிமேட்டில் கடும் கடல்சீற்றம் : அச்சத்தில் மக்கள்!
சென்னை காசிமேட்டில் கடும் கடல்சீற்றம்

Leave a Reply