Home > கட்டுரைகள் > லெஸ்பியன் என்ற வார்த்தை எப்படி வந்தது?

லெஸ்பியன் என்ற வார்த்தை எப்படி வந்தது?

கிரீஸின் மூன்றாவது பெரிய தீவு அது. லெஸ்போஸ் என்று பெயர். மைட்டிலினி நீரிணை இந்தத் தீவை துருக்கியிலிருந்து பிரிக்கிறது.   லெஸ்போஸ் தீவின் மைட்டிலினி நகரில் கி.மு.630 ஆம் ஆண்டு பிறந்தவர் ஸப்போ. இவருடைய இளம்பருவ வரலாறு தெளிவாக தெரியவில்லை. இவருடை தாய் பெயர் க்ளெய்ஸ் என்கிறார்கள். தந்தை பெயர் உறுதியாக தெரியவில்லை.   ஸப்போவுக்கு 7 வயதானபோது அவருடைய தந்தை இறந்துவிட்டார். பணக்காரக் குடும்பத்தில் பிறந்த ஸப்போவுக்கு 3 சகோதரர்கள் இருந்தார்கள். நகரின் உல்லாச மண்டபத்தில் இளைஞர்களுடன் சேர்ந்து ஒயின் குடிப்பது ஸப்போவின் வழக்கமானது. யாழ் என்ற இசைக்கருவியுடன் எப்போதும் இருக்கும் ஸப்போ, பல்வேறு இசை வடிவங்களுடன் பாடல் வரிகளை இயற்றி பாடுவார். அவருடைய பாடல்கள் லெஸ்போஸ் தீவில் மிகவும் பிரபலம்.   புலம்பல் பாடல்களையும், துள்ளல் இசையுடன் கூடிய பாடல்களையும் ஸப்போ பாடியிருக்கிறார். இவர் கெர்கிலஸ் என்பவரை திருமணம் செய்ததாக கூறினாலும், நிஜத்தில் இவர் ஒரு லெஸ்பியன் என்றே பதிவாகி இருக்கிறது.   புராதன கிரேக்கத்தில் ஆண்களும் பெண்களும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பது இயல்பான வரலாறாக இருக்கிறது. லெஸ்போஸ் தீவில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின்போது, ஸப்போவின் குடும்பம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது. பின்னர் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் தங்கள் தீவுக்கு திரும்பினார்கள்.   ஸப்போ 10 ஆயிரம் வரிகளை இயற்றி இருக்கிறார். ஆனால், இப்போது 650 வரிகளே மிச்சமிருக்கின்றன. இசைப்பாடல்களில் புலமைபெற்ற ஸப்போவைப் பற்றி கிரேக்க வரலாற்றுப் பக்கங்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றன.   ஸப்போ இப்படித்தான் இருப்பார் என்பதற்கு எந்தவிதமான அடையாளமும் கிடைக்கவில்லை. யாழ் இசைக்கருவியுடன் இருப்பது போன்ற சில ஓவியங்கள் இருக்கின்றன. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் பெண்களின் உணர்வுகள் குறித்து இவர் பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.   பெண்களின் தனித்தன்மை, சுய உணர்வுகள், விருப்பங்கள், பொறாமை, காதல் என்று பல பரிணாமங்கள் இவருடைய பாடல்வரிகளில் பதிவாகி இருக்கின்றன. “சூரிய அஸ்தமனத்துக்கு பின்னர், ரோஜா வண்ண விரல்கள் நீட்டி நட்சத்திரங்களை பின்னுக்கு தள்ளி மிளிரும் நிலவை் போல, இப்போது அவள் லிதுவேனிய பெண்கள் மத்தியில் நிற்கிறாள்” என்று ஸப்போவின் ஒரு வரி அவருடைய கவித்திறனை வெளிப்படுத்த போதும்.   ஸப்போ தனது பேச்சு வழக்கிலேயே பாடல்களை இயற்றினார் என்று இப்போது ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அவருக்கு ஆணைப் போல வாழ வேண்டும் என்ற விருப்பம் இருந்ததாக ஒரு ஆய்வாளர் கூறுகிறார். அதேசமயம், ஓரினப் புணர்வு குறித்த உணர்வுகளே ஸப்போவின் பாடல்களில் அதிகம் இடம்பெற்றிருந்தது என்று பொதுவான கருத்து இருக்கிறது. பெண்களுக்கு இடையிலான உறவுகளையே ஸப்போ மையப்படுத்துகிறார் என்று ஸான்ட்ரா போரிங்கெர் சொல்கிறார்.   ஸப்போவின் காலத்துக்கு பிறகும் அவருடைய காலத்திலும் அவருடைய பாணியை பல கிரேக்க எழுத்தாளர்கள் காப்பியடித்திருக்கிறார்கள். பிளேட்டோ, சாக்ரடீஸ் ஆகியோர் கூட ஸப்போவை தமது எழுத்துகளில் பயன்படுத்தியிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.   ஓரினச் சேர்க்கை உணர்வுகளை ஸப்போ அதிகமாக வெளிப்படுத்தியதால்தான் அந்த உறவுக்கு ஸப்பிக் என்று பெயர் வந்தது என்கிறார்கள். ஸப்போ பிறந்த லெஸ்போஸ் என்ற தீவின் பெயரை வைத்தே, லெஸ்பியன் என்ற வார்த்தை பயன்பாட்டுக்கு வந்ததாகவும் கூறுகிறார்கள்.

You may also like
மக்கள் வெளியேறும் செய்திகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை!

Leave a Reply