Home > கட்டுரைகள் > கொரோனா காலத்திலும் கொரியாவை கலக்கிய தமிழர்!

கொரோனா காலத்திலும் கொரியாவை கலக்கிய தமிழர்!

உலக மக்களின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் புரட்டிப் போட்ட கொடூரமான வைரஸாக கொரோனா இருந்தாலும், இந்தக் காலகட்டத்தில் கிடைத்த தனிமையை பயன்படுத்தி தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தியவர்களும் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களில் தென்கொரியாவில் ஆராய்ச்சி பேராசிரியராக பணிபுரியும் முனைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.

கொரியா தமிழ்ச்சங்கம் வழியாக எனக்கு அறிமுகமானவர் நண்பர் ஆரோக்கியராஜ். தென்கொரியா தலைநகர் சியோலில் உள்ள ஸெஜோங் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். புதுச்சேரியைச் சேர்ந்த இவர், தென்கொரியாவைச் சேர்ந்த யூடியூபரான லஸோல் என்பவரின் உதவியோடு கொரியா தமிழ் மொழி ஒற்றுமை குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ கொரியர்களின் பார்வை இவர் மீது திரும்ப காரணமாகியது.

தமிழ் மொழிக்கும் கொரியா மொழிக்கும் உள்ள ஒற்றுமைகள் முன்னரே தெரிந்திருந்தாலும், இவருடைய வீடியோ, கொரியா வார்த்தைகளுக்கு நிகரான தமிழ் வார்த்தைகளை கொரியரைக் கொண்டே வெளிப்படுத்தியது. அந்த வீடியோ சுமார் 40 லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்து, கொரியர்கள் மத்தியில் தமிழ் வார்த்தைகளை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை அதிகரிக்க உதவியது.

இவருக்கு முன்னரே சில தமிழர்கள் தமிழ் கொரிய மொழி ஒற்றுமை குறித்து பேசியிருந்தாலும், இவர் ஒரு கொரியரின் துணையோடு விளக்கியதே இந்த வெற்றிக்கு காரணமாகியது என்று கூறியிருந்தார்.

பொதுவாக உலகின் பல்வேறு நாடுகளில் தமிழ் சங்கங்கள் இருந்தாலும், அவை வெறும் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகளோடு தங்களை முடக்கிக் கொள்வதே வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில்தான், கொரியா தமிழ்ச்சங்கம் அரசியல், தமிழ், அறிவியல், ஆராய்ச்சி ஆளுமைகளைக் கொண்டு நிகழ்ச்சி நடத்தி புதுமை செய்தது. இதற்கான மூளையாக ஆரோக்கியராஜ் செயல்பட்டார். அதுமட்டுமின்றி பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கிக் கவுரவிக்கும் நடைமுறையையும் அறிமுகப்படுத்த காரணமாக இருந்தார்.
இதையடுத்து கொரியா தமிழ்ச்சங்கம் உலக அளவில் தமிழர்களை இணைக்கும் அமைப்பாக தமிழகத்தில் அறிமுகம் ஆகியது.

கொரோனா காலத்தில் தென் கொரியாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக உலக அளவில் செய்திகள் பரவத் தொடங்கிய சமயத்தில், அங்குள்ள உண்மை நிலைமையை தெளிவுபடுத்தியதில் இவருடைய பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவுக்கே கொரியா அரசாங்கத்தின் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் வகையில் அவருடைய தகவல்கள் இருந்தன.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தென்கொரியா விஞ்ஞானிகள், மருந்து நிறுவனங்கள், அரசு நிர்வாகம் காட்டிய தீவிர அக்கறையையும், மக்களுடைய ஒத்துழைப்பையும் அவருடைய தகவல்கள் உலகம் புரிந்துகொள்ள உதவியாக இருந்தன.

இந்த கொரோனா காலத்தில் அறிமுகமான ஜூம் மீட்டிங் வசதியை பயன்படுத்தி மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழ் ஆர்வலர்கள், அறிவியலாளர்கள் பங்கேற்புடன் கொரியா தமிழ்ச்சங்கம் நடத்திய கருத்தரங்கம் முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்தக் கருத்தரங்கில் ஆரோக்கியராஜ் தனது கொரியா தமிழ் மொழி ஒற்றுமையுடன், உணவுப்பழக்கங்களில் ஒற்றுமை, கிராமப்புற பண்பாட்டு ஒற்றுமை உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்து அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். அவருடைய அந்த ஆய்வுகள் தமிழ் ஊடகங்களிலும் வெளியாகின.

பின்னர் இதுதொடர்பான தனது ஆய்வுகளை கட்டுரையாக்கினார். அந்தக் கட்டுரை ஷான்லாக்ஸ் ஆய்விதழில் வெளியானது.

இதற்கிடையே சியோல் நகரில் ஓடும் நதியில் தவறி விழுந்த கொரிய சிறுவனை ஆரோக்கியராஜ் காப்பாற்றியது கொரிய செய்தி நிறுவனத்தில் மட்டுமின்றி, தமிழ் ஊடகங்களிலும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

கொரியா தமிழ் மொழி உறவுகள் குறித்து இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், அதுதொடர்பாக மேலும் ஆய்வுகளை முன்னெடுக்கவும் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தார். அதில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று சிறப்பான உரை நிகழ்த்தினார். இந்தக் கருத்தரங்கமும் கொரியா தமிழ்ச்சங்கத்தின் முன்னெடுப்புகளை உலகத் தமிழர்களுக்கு உணர்த்துவதாக அமைந்தது.

சிறப்புக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதுடன் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் இணையவழி கருத்தரங்குகளிலும் பங்கேற்று ஆய்வுரைகளை நிகழ்த்தினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தான் தொடங்கிய கொரியா தமிழ் உறவு தொடர்பான ஆய்வுகளை விரிவுபடுத்தி, ஆங்கிலத்தில் முதல்முறையாக ஒரு கட்டுரையை எழுதினார். அந்தக் கட்டுரையும் ஷான்லாக்ஸ் சர்வதேச ஆய்விதழில் வெளியாகியது.

இதேசமயத்தில் சென்னை லொயோலா கல்லூரி சார்பில் கபசுரக் குடிநீரின் கொரோனா எதிர்ப்பு தன்மை குறித்து நடந்த ஆய்விலும் இவர் பங்கேற்றார். அந்த ஆய்வில் கபசுரக் குடிநீரில் உள்ள 145 வகையான மூலக்கூறுகள் எப்படி கொரோனா கிருமியை எதிர்ப்பதில் உதவுகின்றன என்பது கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வு முடிவுகள் அவர் பணிபுரியும் ஸெஜோங் பல்கலைக்கழகத்தில் இவருக்கு பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது. அதுமட்டுமின்றி, இதுவரை எந்த தமிழருக்கும் கிடைத்திராத அளவுக்கு, கொரிய மொழியில் வெளியாகும் ஐந்து செய்தி நிறுவனங்கள் அவருடைய ஆய்வை பாராட்டி செய்தி வெளியிட்டிருந்தன.

ஆர்வமும் அதை நிறைவேற்றுவதற்கான உழைப்பும் இருந்தால் எதுவும் மனிதனை முடக்கிப் போட்டுவிடாது என்பதற்கு முனைவர் ஆரோக்கியராஜ் நல்லதோர் முன்னுதாரணமாக செயல்படுகிறார்.

You may also like
கொரிய தமிழ்ச்சங்க பொங்கல் விழாவுக்கு, கவிஞர் வைரமுத்து, நக்கீரன் கோபால் வாழ்த்து!
கொரியா தமிழ்ச் சங்கத்தின் தமிழ் புத்தாண்டு விழா!
கொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் விழாவில் சங்கத் தலைவர் உரை

Leave a Reply