Home > கட்டுரைகள் > வாழ்க்கை கற்றுதந்த மனிதநேயம்

வாழ்க்கை கற்றுதந்த மனிதநேயம்

கொரோனா காலத்தில் வருமானம் இழந்து, சேமிப்பு பணம் அனைத்தும் செலவாகி மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு ரூபாய் கிடைத்தாலும் சேமித்து வைக்கவே பலரும் எண்ணுகின்றனர். ஆனால் இந்த இளைஞன், மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே உழைத்து வருகிறார்.

மற்றவர்களுக்கு உதவுவது மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியும், நிம்மதியும், சம்பாதித்துச் சேமிப்பதன் மூலம் மட்டுமே கிடைத்துவிடாது என்பதை உணர்த்தியிருக்கிறார் இந்த இளைஞன்.

உதவும் கைகள் என்ற பெயரில் சென்னையில் தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று கொரானா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த அமைப்புக்கு தொடர்பு கொண்டு சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த சூரியகலா என்ற பெண் உதவி கேட்டிருக்கிறார் தனக்கு துணி தைக்க தெரியும் என்றும், தையல் மெஷின் வாங்கி கொடுத்தால் அதன் மூலம் வரும் வருவாயை கொண்டு குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

வீட்டு வேலை செய்து வந்த இவர் ஊரடங்கு காரணமாக வேலை இழந்து, தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்க்கையை நடத்துவதற்குச் சிரமப்பட்டு வந்துள்ளார்.

உதவும் கைகள் அமைப்பிடம் இப்பெண் உதவி கேட்டிருந்த நிலையில் இந்த அமைப்பைச் சேர்ந்த வெங்கடேசன் வாட்ஸ் அப் குழுக்களில் இப்பெண்ணின் விபரத்தை அனுப்பி ஸ்பான்சர் கேட்டிருக்கிறார்.

இந்நிலையில் மதுரையிலிருந்து அப்பெண்ணுக்கு ஒருவர் உதவ முன்வந்தார். 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தையல்மிஷினை வாங்கிக் கொடுத்துள்ளார் அந்த நபர். அதோடு ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகை பொருட்களையும் வாங்கிக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து வெங்கடேசன், சூரியகலாவிற்கு உதவியதற்காக நன்றி தெரிவிக்க அந்த நபருக்கு வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டபோது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இதுகுறித்து வெங்கடேசன் கூறுகையில், ”அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தவர் ஒரு தொழிலதிபராக இருப்பார் என்று கருதினேன். ஆனால் அவர் 23 வயது இளைஞர் தமிழரசன்B.sc கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான அவர், டீ விற்பனை செய்து பிழைப்பை நடத்தி வருகிறார்.

மற்றவர்களுக்கு உதவுவதற்குப் பணமும் வயது தடையாக இருக்காது மனமிருந்தால் போதும் என்பதை இந்த இளைஞர் நிரூபித்திருக்கிறார்“என்று தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் தமிழரசன் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவரது வாழ்க்கை பின்னணியும் சோக கதையாகத்தான் உள்ளது.

ஒன்றரை வயதிலேயே தாய் தந்தையை இழந்த தமிழரசன் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்துள்ளார்.

திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் B.sc முடித்த தமிழரசன் தனது 22 வயதில் வேலைக்காக சென்னை வந்துள்ளார்.எப்படியும் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையோடு வந்த தமிழரசனுக்கு, அங்கும் பெரிய அதிர்ச்சிகாத்திருந்தது.

சென்னையில் தங்குவதற்கு இடம் கொடுத்து உதவத் தமிழரசனுக்கு யாரும் இல்லாத நிலையில் மெரினா கடற்கரை அவருக்கு வீடாக மாறியது. ஒரு நாள், அவரது உடைமைகளும், சான்றிதழ்களும் திருடப்பட்டு விட்டன.

இந்த சூழலில் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த தமிழரசன், பிச்சை எடுக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது உடைமைகள் எல்லாம் திருடப்பட்டன. வேறு வழியின்றி பிழைப்பதற்காகப் பிச்சை எடுக்க ஆரம்பித்தேன். பின்னர் 2019ல் மதுரைக்குச் செல்ல முடிவெடுத்தேன்.

மதுரை வந்தாலும் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் பிச்சை எடுக்கும் நிலைதான் ஏற்பட்டது. ஊரடங்கு காரணமாக அதிலும் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அலங்காநல்லூரிலும், அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிலரது உதவியுடன் சைக்கிளில் டீ விற்பனை செய்யத் தொடங்கினேன் .

ஊரடங்கு காரணமாக கடைகள் எல்லாம் மூடப்பட்டதால், என்னால் நல்ல லாபம் ஈட்ட முடிந்தது. இதன்மூலம் மற்றவர்களுக்கு உதவி வருகிறேன்.

கைவிடப்பட்டவர்களுக்குத் தேநீர் மற்றும் உணவை வழங்கி வருகிறேன். அவர்களைப் பார்க்கும் போது எனது முந்தைய காலம் நினைவுக்கு வரும். எனவே நான் சம்பாதிக்கும் பணத்தால் நாளொன்றுக்கு 40 பேருக்கு உதவி செய்வேன் என்று தெரிவித்துள்ளார் தமிழரசன். தற்போது ஒரு தேநீர்க் கடையையும் திறக்க திட்டமிட்டுள்ளார்.

”பசியின் கொடுமை எனக்குப் புரியும், வீடற்றவர்களுக்கு உணவு வழங்குவதே எனது ஒரே லட்சியம்” என்றும் தெரிவித்துள்ளார் தமிழரசன்.

ஒரு டீ விற்பனை செய்யும் வியாபாரிக்கு 18,000 ரூபாய் என்பது மிகப்பெரிய பணமாகும். ஆனால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அதை விட பெரியது என்பதைத் தமிழரசனின் செயல் உணர்த்தியுள்ளது.

இந்நிலையில் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வந்தாலும், அவரது படிப்புக்கு ஏற்ப எதாவது வேலை வழங்க அரசு முன் வர வேண்டும் என்று ட்விட்டர் வாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

You may also like
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
கொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை?
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா

Leave a Reply