Home > கட்டுரைகள் > கால்பந்து விளையாட்டும் சேகுவேராவும் மாரடோனாவும்…!

கால்பந்து விளையாட்டும் சேகுவேராவும் மாரடோனாவும்…!

சேகுவேரா குழந்தைப் பருவத்திலிருந்தே ஆஸ்த்மா நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். ஆனால், அவனுக்கு பிடித்த விளையாட்டு கால்பந்து என்பதும், அதில் அவனுடைய வேகம் வெறித்தனமானது என்பதும் உங்களுக்குத் தெரியுமா தெரியாது. ஆனால், மாரடோனாவின் புஜத்தில் குத்தப்பட்டிருந்த சேகுவேராவின் உருவம் அந்த அற்புதமான தொடர்பை எனக்கு நினைவூட்டியது.

பள்ளியில் சேகுவேராவுக்கு தாமஸ் கிரனடா என்ற நண்பன் கிடைத்தான். அவனுடைய அப்பா ரயில்வேயில் கண்டக்டராக வேலை செய்தார். தொழிற்சங்கத்திலும் இருந்தார்.

அவனுடைய அண்ணன் ஆல்பர்ட்டோ கிரனாடா பயோ கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்தான். குவேராவை விட ஆறுவயது மூத்தவன்.

நீண்ட மூக்கு, ஏராளமான முடி, நகைச்சுவையான பேச்சு, கால்பந்து விளையாட்டில் திறமை என்ற வேறுபட்ட கலவையுடன் இலக்கியமும் பேசுவான்.

குவேராவுக்கு தாமஸை விட, அவனுடைய அண்ணனின் நட்பு அவசியமாகப் பட்டது. கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த ஆல்பர்ட்டோவிடம் தன்னையும் அணியில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டான். ஒல்லியான நலிந்த தோற்றமுடைய குவேராவை சேர்க்க யாரும் அனுமதிக்கவில்லை.

ஆனால், குவேராவின் ஆர்வத்தைப் பார்த்த ஆல்பர்ட்டோ, அவனை அணியில் சேர்த்தான். முதல் இரண்டு நாட்கள் தடுமாறிய அவன் மூன்றாவது நாள் பந்தை எதிரணியிடமிருந்து கடத்திப் போன விதமும், பந்தை அவன் உதைத்த விதமும் ஆல்பர்ட்டோவை அசத்திவிட்டது. விரைவிலேயே ரக்பி என அழைக்கப்படும் கால்பந்து விளையாட்டில் அதிரடி ஆட்டக்காரன் என்று அழைக்கப்பட்டான்.

ஒருநாள் குவேரா வீட்டுக்குள் நுழைந்தபோது, அவனது அப்பாவும் அம்மாவும் மற்ற இரு குழந்தைகளுடன் அவனை எதிர்பார்த்து ஹாலில் அமர்ந்திருந்தனர். குவேரா களைத்துப் போயிருந்தான். உடலெல்லாம் அழுக்குப் படிந்திருந்தது.

விடுமுறைக்காக வந்திருந்த அப்பாவைப் பார்த்ததும் குவேராவுக்கு உற்சாகம் பீறிட்டது. “ஹாய் டேட்…” என்று கூவியபடி அப்பாவின் கன்னத்தில் முத்தமிட்டான். பின்னர், உடை மாற்றுவதற்காக கிளம்பினான்.

“குவேரா கொஞ்சம் இரு.”

அப்பா சொன்ன விதம் வித்தியாசமாக இருந்தது. குவேரா தயக்கத்துடன் அவரருகில் அமர்ந்தான்.

“குவேரா, நீ விளையாடுவதில் எங்களுக்கு பெருமைதான். ஆனால், உன்னுடைய ஆக்ரோஷமான விளையாட்டைப் பற்றி உன்னுடைய நண்பர்கள் கூறுவதைப் பார்க்கும்போது, உனக்குள்ள நோயின் தீவிரம் எங்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. தயவு செய்து வேறு விளையாட்டில் கவனம் செலுத்தக்கூடாதா?”
அப்பாவின் இந்த வார்த்தைகள் அம்மாவின் முகத்திலும் பிரதிபலித்தது.

குவேராவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தனது நோயின் தன்மையை அவன் பலமுறை அனுபவித்திருந்தான்.

“சரி அப்பா. இனி நான் உங்களுக்கு கவலை தரும்வகையில் நடந்துகொள்ள மாட்டேன்” என்று பதிலளித்தான்.
அதன்பிறகு அவனுக்கு செஸ் விளையாட்டை சொல்லிக் கொடுத்தார். செஸ் போர்டில் அவன் காய் நகர்த்தும் திறன் விரைவிலேயே வெளிப்படத் தொடங்கியது. அப்பாவையும், குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் எளிதில் தோற்கடித்தான்.

கோரடோபா நகரில் சிறுவர்களுக்கான செஸ் போட்டிகள் அறிவிக்கப்பட்டால் அதில் பரிசு பெறும் நபராக குவேரா மாறினான். செஸ் போட்டிகள் நடைபெறும் விவரங்களைச் சேகரித்து அவனைப் பங்கேற்க செய்வதில் தாய் செலியா தனியாக கவனம் செலுத்தினார்.

ஆனாலும், குடும்பத்தினருக்குத் தெரியாமல் ரக்பி மைதானத்தில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவான். தங்கள் வீட்டுக்கு அருகே இருந்த கோல்ப் மைதானத்திற்கு சென்று கோல்ப் விளையாடுவான்.
கால்பந்து விளையாட்டை அவனால் தொடர முடியாவிட்டாலும், கோல்ப் விளையாட்டைத் தொடருவதில் அவனுக்கு சிரமம் இருக்கவில்லை.

இந்தக் காலகட்டத்தில் குவேரா தனது சகோதரர் மூலம் சியரா கோல்ப் மைதானத்தை விரிவுபடுத்தும் ஒப்பந்தம் எர்னஸ்டோவுக்குக் கிடைத்தது. இதையடுத்து நிலையான வருமானம் வரத்தொடங்கியது. நகரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள மலைச்சரிவில் தனக்கென வீடுகட்டினார் எர்னஸ்டோ.

இந்த வீடு அமைந்த பகுதியில் சாதாரண மக்கள் வசித்து வந்தனர். புதிய புதிய நபர்களைச் சந்திக்கும் வாய்ப்பு குடும்பத்தினருக்கு கிடைத்தது. மனிதர்களை வேடிக்கை பார்ப்பது, அவர்களுடைய குணங்களை பகுத்து ஆய்வது குவேராவுக்கு பழக்கமாகியது.

கால்பந்து விளையாடுவதில் முன்புபோல குவேரா ஆர்வம் காட்டுவதில்லை. இது நண்பன் ஆல்பர்ட்டோவுக்கு வியப்பை அளித்தது.

“ஏண்டா, கிரவுண்டுக்கு வர மாட்டேங்கற?”

“ஆஸ்த்மா இருக்கதால, விளையாட வேண்டாம்னு சொல்லிட்டாங்க”

“அவங்க சொல்லிட்டா…”

“நான் விளையாட மாட்டேன்னு சொல்லிட்டேன். அவ்வளவுதான்.”

“அதுக்காக கிரவுண்ட் பக்கமே தலைவைத்து படுக்க மாட்டியா?”

அப்புறம் மாலை நேரத்தில் கால்பந்து மைதானத்திற்கு வருவான். மைதானத்தின் இரும்பு போஸ்ட் ஒன்றில் சாய்ந்து படிக்கத் தொடங்கிவிடுவான். முதலில் பாடப்புத்தகங்களைப் படிப்பதாகத்தான் ஆல்பர்ட்டோ நினைத்தான். ஒருநாள், அவன் என்ன படிக்கிறான் என்று பார்ப்பதற்காக வந்தான் ஆல்பர்ட்டோ.

குவேரா கையில் இருந்தது பிராய்டின் புத்தகம். தான்தான் பெரிய படிப்பாளி என்று அதுவரை ஆல்பர்ட்டோ நினைத்திருந்தான். அந்த நினைப்பு தகர்ந்துவிட்டது. தன்னைவிட ஆறுவயது சின்னவன் பிராய்டைப் படிக்கிறான் என்பது அவனுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.

இதுதான் சேகுவேரா. தனது பெற்றோருக்காக கால்பந்து விளையாடுவதை விட்டார். ஆனால், அவருக்கு பிடித்த கால்பந்து விளையாட்டில் அவருடைய தீவிர ரசிகன் மாரடோனா சாதனை நிகழ்த்தினார்.
சேகுவேரா வாழ்க்கைக் கதையை படிக்க இந்த லிங்க்கை சொடுக்கவும்…
https://play.google.com/store/books/details?id=5E_2DwAAQBAJ

You may also like
கால்பந்து போட்டியின் போது அரங்கேறிய விபரீதம்: 4 பேர் பலி
மரடோனாவுக்கு வெற்றியை காணிக்கையாக்கிய மெஸ்ஸி
ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை அணி வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை அணி வெற்றி
இங்கிலாந்து கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார்

Leave a Reply