Home > கட்டுரைகள் > ரஜினி அண்ணனின் யாகமும் சாபமும்!

ரஜினி அண்ணனின் யாகமும் சாபமும்!

திராவிட இயக்கத்தை வீழ்த்தவே ரஜினி களம் இறக்கப்படுகிறார் என்பதற்கு தமிழருவிமணியன் கட்டுரை, எச் ராஜா பேச்சு, வானதி பேட்டி ஆகியவை உள்ளன.

இப்போது ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணாவின் பேட்டியும் சேர்ந்து கொண்டுள்ளது.

பெங்களூரில் உள்ள இவரிடம் சென்று ரஜினி ஆசிர்வாதம் வாங்கியது ஏதோ
மூத்தவர் என்பதால் மட்டுமல்ல, அரசியல் சித்தாந்த ரீதியாக உடன் பயணிப்பவர் என்பதாலும் என்பது தெரிய வந்துள்ளது.

திருவண்ணாமலையில் யாகம் நடத்திவிட்டு பேட்டி கொடுத்தவர் (தினத்தந்தி11-12-20) “ரஜினி அரசியலுக்கு வரவுள்ளதால் கூட யாகம் நடத்தப்பட்டதாக வைத்துக் கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார். அரசியல் வெற்றிக்காக யாகம் நடத்துவது பாஜக பாணி. அது அப்படியே இங்கும் வந்துவிட்டது!

பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவர் ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பளராக நியமிக்கப்பட்டது அவரது ரசிகர்மன்றத் தலைவர்களுக்கு அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது எனப்படுகிறது.

“ரஜினி ரசிகர்மன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைக்கும்” என்று சத்தியநாராயணா இப்போது கூறியிருப்பது அந்த அதிருப்தி உண்மைதான் என்பதை உறுதிப் படுத்தியுள்ளது.

அப்புறம் “பகவான் விரும்பினால் திருண்ணாமலையில் ரஜினி போட்டியிடுவார்” என்று ஒரு அரசியல் ரகசியத்தையும் உடைத்திருக்கிறார். அப்ப இந்த யாகம் எல்லாம் அதையும் மனதில் கொண்டுதான் போலும்! திருவண்ணாமலைக்காரர்களுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்? ஜென்ம சாபல்யம் அடைந்தது!

பேட்டியில் இப்படி அரசியல் மட்டுமல்ல சித்தாந்தமும் உண்டு. கேளுங்கள் அதை: “திராவிடக் கட்சிகளுக்கு கடைசிக் காலம் வந்துவிட்டது. யாரும் அவர்களை நம்பவில்லை. கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் அவர்கள். ரொம்ப நாள் இருக்கமாட்டார்கள்”. யாகத்தை தொடர்ந்து சாபம்! பொருத்தம்தானே?

பெரியாரின் காலம் முடிய வேண்டும் என்று அந்நாளில் சநாதனிகள் யாகம் நடத்தினார்கள். ஆனால் அதற்குப் பிறகும் அவர் நீண்ட காலம் வாழ்ந்தார், அவர் கண்ட திராவிட இயக்கம் தமிழகத்தில் வேர்விட்டு வளர்ந்தது எனும் வரலாறு எல்லாம் பாவம் இந்த கன்னடத்துக்காரருக்கு தெரியாது போலும். ஓர் இயக்கம் பிறந்தது, வளர்ந்தது என்றால் அதற்கான சமூக, அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்று பொருள். அவை பற்றிய ஞானம் இல்லாமல் இப்படி சாபம் விடுவது சுத்த அபத்தம்.

“யாரும் அவர்களை நம்பவில்லை” என்கிறாரே, 2019 மக்களவை தேர்தலில் அதிமுகவை நம்பித்தானே கூட்டணி வைத்தது பாஜக! அந்த அணிக்கு மக்கள் படுதோல்வியை தந்தாலும் பெரும் வெற்றியைத் தந்தது திமுக எனும் திராவிடக் கட்சி தலைமையிலான அணிக்குதானே? மொத்த வாக்குகளில் ஆகப் பெரும்பாலானவற்றைப் பெற்றது
திமுகவும் அதிமுகவும்தான்.

அதாவது இவரது கருத்தில் “கடவுள் இல்லை என்று சொல்பவர்கள்!” ஐயோ பாவம், அதிமுக தலைவர்களையும் நாத்திகர்கள் பட்டியலில் சேர்த்து விட்டார்! அறிவுக்கொழுந்து!

“கழகங்கள் இல்லாத தமிழகம்” என்பது பாஜகவின் லட்சியம். திராவிடக் கட்சியினரை நாத்திகர்கள் எனச் சொல்வது பாஜகவின் பிரச்சாரத் தந்திரம். அதை அப்படியே ரஜினியின் அண்ணனும் எதிரொலித்திருக்கிறார். ஆக ரஜினி அரசியலுக்கு வருவது பாஜக வின் ஏற்பாடு, அதற்கு இந்த மனிதரும் உடந்தை என்பது நிச்சயமாகிறது.

குடும்ப அரசியல் கூடாது என்று பாஜக சொல்லும். சமீபத்தில் தமிழகம் வந்த அமித் ஷா கூட அப்படியாகப் பேசினார். ஆனால் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் போதே அவரது அண்ணன் அது சார்பாகப் பேட்டி கொடுக்கிறார்.

ஆக உச்ச நட்சத்திரத்தின் கட்சியிலும்
குடும்ப கிரகங்களின் சஞ்சாரம் இருக்கும் போலும்! பாஜக இதையெல்லாம் கண்டு கொள்ளாது!

You may also like
அதிமுகவின் பரிதாப நிலைக்கு அதிமுகவே காரணம்!
ரஜினி பிறந்தநாள் பரிசாக அண்ணாத்தே முதல் பார்வை?
ரஜினிகாந்த் பாஜக பினாமியா? மாநில தலைவர் முருகன் பதில்
ரஜினி கட்சிக்கு விஜய் பிரச்சாரம் செய்ய அரசியல் நெருக்கடி

Leave a Reply