Home > கட்டுரைகள் > மதசார்பற்ற இந்தியாவும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவும்

மதசார்பற்ற இந்தியாவும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவும்

குஜராத்தில் புனரமைக்கப்பட்ட சோமநாதர் கோயிலை திறந்துவைக்க 1951 ஆம் ஆண்டு அப்போதைய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அரசு சார்ந்தவர்கள் மதத்தை தனித்து வைப்பதில் மிகவும் உறுதியாக இருந்த சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத்துக்கு இதுதொடர்பாக எழுதிய கடிதத்தில், “இந்த நிகழ்வுக்கு நீங்கள் தலைமை தாங்கவில்லை என்றால் அது நல்லது” என்று குறிப்பிட்டிருந்தார்.

முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியின் கீழ் கவனிக்கப்படாமல், பராமரிப்பு இன்றி இருந்த சோமநாதர் கோயில் முகலாய மன்னர் ஒளரங்கசீப்பால் தகர்க்கப்பட்டது. 1947ஆம் ஆண்டில் சர்தார் படேல் அதைப் பார்வையிட்டபோது, அதன் மறுகட்டமைப்பு தொடங்கி 250 ஆண்டுகள் கடந்திருந்தன.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை பின்நடக்கும் இதுபோன்ற நிகழ்வில் அரசு சார்பில் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் கலந்துகொள்வது மேலும் பிரச்சனையை தீவிரமாக்கும் என்று பிரதமர்நேரு கவலை கொண்டார்.

“துரதிர்ஷ்டவசமாக, இதனால் பல தாக்கங்கள் உள்ளன, இந்த நேரத்தில் சோம்நாத் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டாம் என்று நான் நினைத்தேன்என்றநேருவின் ஆலோசனையை புறக்கணித்து ராஜேந்திர பிரசாத் அந்த நிகழ்வுக்கு சென்றார். ஆனால், அங்கே அவர் முழுமையான சகிப்புத்தன்மை குறித்த காந்திய வழியை, மதங்களின் சாராம்சத்தில் கவனம் செலுத்துவதை, நல்லிணக்கத்தை அவர் வலியுறுத்தி பேசினார்

ஆனால் இன்று
அயோத்தியில் நடைபெறவுள்ள ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவையும், சோமநாதர் கோவில் திறப்பு நிகழ்வையும் ஒரே மாதிரியாக பார்க்க முடியாது. தலித் சமூகத்தை சேர்ந்த இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதே சமயத்தில், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடும் கொரோனா வைரஸ் உலகத் தொற்றுப் பரவல், மோசமான நிலையில் இருக்கும் நாட்டின் பொருளாதாரம், வெள்ள சேதம்,பாதுகாப்பு சார்ந்த அச்சுறுத்தலில் இருக்கும் இந்தியாவின் கிழக்கு எல்லைப்பகுதி உள்ளிட்டவை இந்த விழாவில் பங்கேற்பதற்கு இந்திய பிரதமருக்கு எவ்வித வகையிலும் தடையாக இல்லை.

உள்துறை அமைச்சர், சில மத்திய மாநில அமைச்சர்கள் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் விழா நடக்கும் உத்திரபிரதேச அமைச்சர் ஒருவர் கொரானாவால் மரணம் அடைந்திருக்கிறார் இவற்றையெல்லாம் புறந்தள்ளி அயோத்திராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா வரலாற்று நிகழ்வாக கடந்த ஒரு வார காலமாக மிகைப்படுத்தப்பட்டு வருகிறது

சரயு ஆற்றங்கரையில் உள்ள இந்தியாவில் உள்ள அழகான நகரங்களில் ஒன்றான அயோத்தி கடந்த காலத்தில் ஒரு செழுமையான நகரமாக இருந்தது. இந்த நகரத்தைபௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் சாகேத் என்று கூறுகின்றனர். ராம ஜென்ம பூமி வளாகம் ஒருகாலத்தில் புத்த மத தலமாக இருந்ததாக கூறிய பௌத்த பிக்குகள், அந்த இடத்தை யுனெஸ்கோ அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்று கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதையடுத்து, கடந்த ஜூலை 15ஆம் தேதி ஆசாத் பவுத் தரம் சேனா அமைப்பு சார்பில் அங்கு உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

சமணர்கள் உரிமை கோரும் இந்த இடத்தில் சீக்கியர்களுக்கும் தொடர்பு உள்ளது. மேலும், இதே இடத்தில்தான் பாபர் மசூதி 400 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது. இதை ராமர் பிறந்த இடமாக கூறுவதை விட இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் சமூக நல்லிணக்க மையமாக மாற்றியிருக்க முடியும்.

ஆனால் வேறு விதமான அரசியலை முன் எடுப்பதற்கான கருவியாக ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் அமைதியற்ற இளம் தலைமுறையினரிடையே சமநிலையை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பாக அல்லாமல், மத நம்பிக்கையை ஆழமாக
பதியவைக்கபயன்படுத்தப்படுகிறது.

இந்த விவகாரத்தின் கடந்த காலம் கடுமையானது. இந்திய இந்துக்களை உணர்வுபூர்வமயமாக்கி தட்டி எழுப்ப ரத யாத்திரை ஒன்று 1990ல் எல்.கே. அத்வானியால் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கப்பட்டது. இந்த பிரசாரம் இந்தியாவின் எட்டு மாநிலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரத்துக்கு நீண்டது. ஆனால், இது இந்தியாவின் சாதி ஏற்றத்தாழ்வுகள் குறித்த மண்டல் கமிஷன் அறிக்கையை வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டதை திசை திருப்புவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது என்கிற விமர்சனம் அப்போது எழுந்தது1990ஆம் ஆண்டில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலம் நடந்த இந்த ரத யாத்திரை பிரசாரத்தின் காரணமாக சுமார் 300 பேர் இறந்ததாகவும், மேலும் கலவரங்களும் வன்முறைகளும் ஏற்பட்டதாகவும் அரசியல் அறிஞர்களின் பதிவுகள் கூறுகின்றன.

இதையடுத்து பீகாரின் அப்போதைய முதலமைச்சர் லாலு பிரசாத் சமஸ்திபூரில் அத்வானியின் ரத யாத்திரையை நிறுத்தி முடிவுக்கு கொண்டுவந்தார். இதைத்தொடர்ந்து, 1992இல் பாபர் மசூதி தகர்க்கப்பட்ட சம்பவம் இந்திய மக்களையும், சர்வதேச சமூகத்தையும் அதிர்சிக்குள்ளாக்கியது மட்டுமின்றி, தேவையற்ற மரணங்களுக்கும் மதமோதல்களுக்கும் அடிப்படையானது.

2019ஆம் ஆண்டில் அயோத்தி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில், முழு நிலத்தையும் கோயிலுக்கு வழங்கிய போதிலும், 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று மசூதியை இடித்தது மிக மோசமான சட்ட விதிமீறல் என்றும் பொது வழிபாட்டுத் தலத்தை அழிக்கும் திட்டமிடப்பட்ட செயல்என்றும் தெரிவித்திருந்தது.

இருந்தபோதிலும், அயோத்தி ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நாட்டின் பிரதமரே செல்வது, பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு ஆபத்துக்குள்ளானது என்றால், இந்த நிகழ்வு இந்தியா குடியரசாக நாம் தற்போது அங்கீகரித்திருக்கும் கட்டமைப்பை வேறு ஏதோவொன்றாக மாற்றுவதாக அச்சுறுத்துகிறது.

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் நகரில் வசிக்கும் ஆய்வாளரும்,’தி எமர்ஜென்சி க்ரோனிகல்ஸ்’ என்ற தனது புத்தகத்திற்காக விருது வென்ற எழுத்தாளருமான பேராசிரியர் ஞான் பிரகாஷ், “இந்த அடிக்கல் நாட்டு விழா என்பது சம குடியுரிமைக்கான அரசியலமைப்பு கொள்கையின் அடித்தளத்தின் மீதான தாக்குதலாகும். ஒரு மதச்சார்பற்ற குடியரசின் யோசனை ஒருபுறம் இருக்க, மதத்தைப் பொருட்படுத்தாமல் சம குடியுரிமையின் அடிப்படை ஜனநாயகக் கொள்கை கூட இனி பாதுகாப்பாக இருக்காது.

பாஜக அரசாங்கமும், அச்சுறுத்தப்பட்ட நீதித்துறையும் ஒரு எதேச்சதிகார இந்து ராஷ்டிரத்திற்கு முறையாக அடித்தளம் அமைத்து வருகின்றன. என்று கூறுகிறார். நார்வேஜியன் ஸ்கூல் ஆஃப் தியாலஜியை சேர்ந்த ஆய்வாளரான எவியன் லீடிக், “இது ஒரு நீண்ட செயல்முறையின் புதிய தொடக்கம் என்பது மட்டுமின்றி இந்திய குடியரசு மாற்றியமைக்கப்படுவதும் ஆகும். ஆகஸ்டு 5ஆம் தேதி ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டுவது, 1992இல் பாபர் மசூதி தகர்க்கப்பட்டதுக்கு பிறகு இந்துத்துவா இயக்கம் சந்திக்கும் ஒரு வரலாற்று தருணத்தை பிரதிபலிக்கிறது.

ஒரு காலத்தில் கொடிய கலவரத்தால் மேற்கொள்ளப்பட்ட செயல், இன்று அரசாங்க ஆதரவுடன் சட்டபூர்வமானது. ராமர் கோயிலைக் கட்டுவது ஒரு பெரும்பான்மை தேசியவாதத்தைக் குறிக்கிறது. இதில் இந்து மதம் மற்ற எல்லா மதங்களுக்கும் மேலாக மதிப்பிடப்படுவதை போன்று தெரிகிறது. இது மோதி அரசிடமிருந்து இந்திய மக்கள் சந்திக்கும் இந்து மததீவிரத்தின் கடைசி நிகழ்வாக இருக்காது.”

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதை விட அது நடத்தப்படும்தேதி ஏதோ ஒன்றை அரசியல் ரீதியாக பொதுசமூகத்திற்கு உணர்த்துவதாக தெரிகிறது கடந்த ஆண்டு இதே நாளில்தான் ஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டு. காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது இந்த நிகழ்வுகளை ஒப்பிட்டு பார்க்கையில் அரசியலமைப்பின் பன்முக கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதையே நோக்கமாக கொண்டுள்ளன என அரசியல் விமர்கர்கள் கருதுகின்றனர் இதன் மூலம், இஸ்ரேல், துருக்கி, பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளின் வரிசையில் இந்தியாவும் காலடி எடுத்து வைக்கிறது என எண்ணத் தோன்றுகிறது

மகாத்மா காந்தி, ஆகஸ்ட் 9, 1942இல் ஹரிஜன் பத்திரிகையில் இவ்வாறு எழுதுகிறார் “இந்துஸ்தான் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள், வேறெந்த நாடும் இல்லாதவர்கள் அனைவருக்கும் சொந்தமானது. எனவே, இது பார்சிக்கள், பெனி இஸ்ரேலியர்கள், இந்திய கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பிற இந்து அல்லாதவர்கள் என அனைவருக்குமான நாடு. சுதந்திர இந்தியாவில் எந்த இந்து அரசும் இருக்காது, இது எந்தவொரு மத பிரிவினருக்கோ அல்லது சமூகத்தினருக்கோ அல்லாமல், மாறாக மத வேறுபாடு இல்லாமல் முழு மக்களின் பிரதிநிதிகளையும் அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசு ஆகும்.”எனவேராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழா இந்திய அரசின் புதிய மற்றும் தனித்துவமான அடித்தளமாகும் என கருத வேண்டியுள்ளது இதில் விசித்திரம் என்னவென்றால்,மிகச் சிறந்த மனிதனுக்கு அடையாளமாக கூறப்படும் ராமரின் பெயரில் இவையெல்லாம் நடக்கிறது.

You may also like
அம்மன் ஆலயம் கட்ட உதவும் ஒசூர் திமுக எம்எல்ஏ சத்யா!
அயோத்தியில் புதிய கின்னஸ் சாதனை…
தமிழகத்தில் இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்!
பாபர் மசூதி இடிப்பு வழக்கு : குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை

Leave a Reply