Home > கட்டுரைகள் > 3. திரு.வி. கலியாண சுந்தர முதலியார் – TAMIL LEADERS – 4

3. திரு.வி. கலியாண சுந்தர முதலியார் – TAMIL LEADERS – 4

பாலுக்கு நிகரான கதர் உடையைத் தரித்துக் கொண்டு, இடது கை ஆட்காட்டி விரலால், எச்சரிக்கைப் பாணப் பிரயோகம் செய்வதுபோல, உச்சிக் குடுமி சகிதமாய், நெற்றியில் அழகான சந்தனப் பொட்டுத் துலங்க, அதோ, தேன் மொழிப் பிரசங்கம் செய்கிறாரே, அவரை உங்களுக்குத் தெரியுமா?

அவர்தாம், குழைந்து குழைந்து கொஞ்சுவதைப் போலப் பேசும் கல்யாண சுந்தர முதலியார். வாய்தான் வலிக்காதா? வார்த்தைக்கேனும் தடை கிடையாதா? ராமஸ்வாமி நாய்க்கரின் பிரசங்கம் கூடுவாய் மூலை மழை; அது கடகடவென்று கொட்டித் தீர்த்து விடும். வியர்க்கும் உடலைக் குளிரக் குளிர இன்புறச் செய்யும் தென்றல் காற்றைப் போன்றது முதலியாரின் சொற்பொழிவு.

முதலியார் சாது; அவருடைய அச்சுக்கூடத்துக்கும், சாது அச்சுக்கூடம் என்று பெயர். முதலியாரின் முகத்தைக் கண்டவர்களுக்கு, அவரோடு சண்டை போட வேண்டும் என்றே தோன்றாது. மழலையைப் பேசும் குழந்தைகளுடனே, எவரேனும் சண்டை போடத் துணிவார்களா? அன்னையையும் பிதாவையும் முன்னறி தெய்வங்களாகக் கருதிக் கொண்டாடும் குழந்தையைப் பார்த்தால், யாருக்குத்தான் இரக்கம் உண்டாகாது? சூதுக் கலப்பில்லாத குழந்தையின் முகவிலாச பாக்கியம் படைத்தவர் முதலியார். இந்தப் பாக்கியம் அவரது பெற்றோர்களின் குண விசேஷங்களின் பயனோ அல்லது முதலியாரின் பயிற்சிப் பயனோ? அது எதுவென்று, என்னால் விளக்கி, விவரமாய்ச் சொல்ல முடியவில்லை.

சேலம் விஜயராகவாச்சாரியாருக்குப் பெஸண்டு அம்மையாரிடம் எவ்வளவு ஆத்திரமோ. அவ்வளவு ஆர்வம் கலந்த அன்பும் மதிப்பும், முதலியாருக்கு, அம்மையாரின் பேரில். இதற்கு நியாயமுண்டு. முதலியார் அவர்கள், அரசியல் உலகில் அடிவைத்ததற்கு பெஸண்டு அம்மையார்தான் காரணம். சென்னை வெஸ்லி காலேஜில் தமிழ்ப் பண்டிதராயிருந்த முதலியாருக்கு அரசியல் வானத்தின் அழகுக் கவர்ச்சி கண்ணில் படக் காரணமில்லை. ‘‘டானா’’ என்று பரம்பரைப் பட்டப்பெயர் வாங்கிய வாத்தியார்கள் கனம் சீனிவாச சாஸ்திரியாரைத் தவிர… அரசியலில் நமது தேசத்தில் கலந்து கொண்டு, பெயர் வாங்கினதேயில்லை, கலியாணசுந்தர முதலியார் அவர்களைப் பார்த்த பின்னர், ‘‘கற்பனையில்லாத தமிழ்ப் பண்டிதர்’’ என்று புலவர்களைக் கடியும் வழக்கத்தை விடத்தான் வேண்டும். என்ன செய்வது.

பெஸண்டு அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கக் காலத்திலேயே, வெளி வர வேண்டும் என்ற ஆவல் முதலியாருக்கு ஏற்பட்டு விட்டது. நல்ல காரியம் செய்வதில் பல பேர்களுக்கு ஆவலும் ஆர்வமும் இருக்கலாம். ஆனால் சமையலறை அடுப்பில், பூனை படுத்துறங்கக் கூடிய வறுமைக்கு ஆட்பட்டவர்கள், குடித்தனத்தைக் கவனிப் பார்களா, அல்லது கொடுங்கோலனை எதிர்ப்பார்களா? எப்பொழுதுமே, வயிற்றுக்கும் லட்சியத்துக்கும், ஓயாத போராட்டம். வயிறு தற்காப்பு யோசனையைச் சொல்லும்; லட்சியமோ, காதல் கன்னிகையைப் போல, கடைக்கண்ணால், ஜாடை செய்து சமிக்கினை காட்டி ஆளை உருக்கிவிடும்.

வயிற்றை ஜயித்தவன் வீரன். வயிற்றுக்குப் பணிந்தவன் ‘‘வவுரன்’’ (வயிறன்) வயிறு ‘‘குழந்தை குட்டிகளை’’க் காட்டி குடித்தனச் சுமையை, கடமையாக அலங்காரம் செய்து தன் தற்காப்புக் கட்சிக்குக் கோட்டை அரண் செய்து கொள்கிறது. லட்சியமோ மனிதனுக்குக் கற்பனை, தியாகம் முதலிய இறக்கைகளைக் கொடுத்து, வயிற்றுக் கோட்டைக்கு வெளியே பறக்கத் தூண்டுகிறது. இவை இரண்டுக்கும் நடுவே அகப்பட்டுக் கொண்டு, சதா தர்மசங்கட மந்திரம் ஜபித்துக் கொண்டிருப்பவர் முதலியார். சாதாரண மனிதனுக்கு எளிதாகத் தோன்றும் காரியங்கள் யாவும், முதலியார் அவர்களின் கண்களில், வகுத்துப் பிரிக்க முடியாத தர்மசங்கடங்களாகத் தோன்றும். இது கற்பனை மிகுதியும் கலந்த இரக்கத்தின் கோளாறாகும்.

தம்மிடம் பெண் தன்மை நிறைந்திருக்கிறது என்று முதலியார் சிறிதளவு பெருமையாகவும் பெரிதும் கேலியாகவும் சொல்லிக் கொள்ளுவதுண்டு. பெண் தன்மை இல்லாத ஆணுக்கு வசீகர சக்தி கிடையாது என்று முதலியார் நண்பர்களிடம் பல காலும் சம்பாஷணை பிரசங்கம் செய்வார். அவர், இதை தம்மைப்பற்றித்தானே சொல்லிக் கொள்ளுகிறார் என்கிற சந்தேகம் கேட்பவர்களின் மனதில் நிச்சயமாய்த் தோன்றும், மனக் கொடுமையினால் எவனும் வீவனாவதில்லை. துணிவுக்கும் இரக்கத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. அறிவுக்கும் கோழைத்தனத்துக்கும் சம்பந்தம் உண்டு. எனவே எதிரிகளைப் போலப் பார்வைக்குப் படும், ‘‘ஆணில் பெண் தன்மை’’ உண்டு. பெண்ணில் ஆண் தன்மை உண்டு. இந்த இயற்கை வினோதத்தைச் சில மலர்களிலே காணலாம். முதலியாரின் ஆண்தன்மை, ‘‘வீட்டை விட்டு வெளியே போய், வீர வாழ்வு வாழ்வாயாக’’ என்று அவரை அதட்டுகின்றது. ‘‘வெளியே போனால் வீடு பாழாய்ப் போகும். வீட்டுப் பொறுப்பை மறக்காதே’’ என்று அவருடைய பெண் தன்மை அவருக்கு இங்கிதக் குரலில் இதோபதேசம் செய்கின்றது. என்ன தர்மசங்கடமான ‘‘ஆண்பெண்’’ தன்மை! வீட்டுக்கும் நாட்டுக்கும் இடையே நசுக்குண்டு கரைந்து உருகுகின்றார் முதலியார் அவர்கள்.

தனித்து இயங்கும் தனிமொழி என்று பண்டிதர்கள் பலர் கூச்சலிடும் கூச்சலைப் பேருண்மை என்று முதலியார் அவர்கள் ஏற்றுக்கொள்ளுவதில்லை. தமிழ் பாஷை வளரவேண்டும் என்ற ஆசை, முதலியாரின் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரையில், காலியிடம் துளிக்கூட இல்லாமல், அவர் தேகமுழுவதும் நிறைந்து நிற்கின்றது.

திசைச்சொற்களும் வழக்குச்சொற்களும் கிராமியப் பேச்சும், தமிழ் மொழியில் கலந்து கொண்டாலொழிய, தமிழுக்கு நவநாகரிகச் சிறப்பும் மதிப்பும், வன்மையும் வளர்ச்சியும் ஏற்படமாட்டா என்பது முதலியாரின் திடநம்பிக்கை. இதிலும் அவரது இயல்பான தர்மசங்கட உள்ளம் அவரைப் பெரிதும் வேதனை செய்கின்றது. இந்தக் கொள்கையைக் கையாளுபவர்களை, முதலியார் முழுவதும் ஆதரிப்பார். ஆனால், இந்தக் கொள்கையை முதலியார் தாமே கையாள மாட்டார்!

தமிழ்நாட்டு அரசியல் உலகில், தலைமைப் பதவி சம்பந்தமாக ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாருக்கும் ஸ்ரீமான் சீனிவாஸய்யங்காருக்கும் இடையே சிறிது ‘‘ஊடல்’’ இருந்தது. ‘‘சீனிவாஸய்யங்காரு நல்லவர்; ஆச்சாரியார் பெரியவர். யாரைத் தள்ளி, யாரைக் கொள்ளுகிறது. என்ற தர்மசங்கடம், முதலியாருக்கு முன்னே ஒரு காலம் பிரமாதமாய் உரு எடுத்து நின்று, அட்ட ஹாஸம் செய்தது. தர்மசங்கடத்தை, இவர் சம்பந்தப்பட்ட வரையில் இவருடைய பிறவிக்கூடம் பெரிதும் வளர்கின்றது என்றே சொல்லவேண்டும்.’’

தூய தமிழின் இன்னிசை ஒலியைக் கேட்டு அனுபவிக்க உளங் கொண்டவர்கள், முதலியார் நடத்திவந்த ‘‘தேசபக்தன்,’’ என்ற பத்திரிகையின் பழைய பிரதிகளைக் கண்டெடுத்துப் படிப்பார்களானால், மனப்பூரிப்பு அடைவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தமிழிலும் ஒலியழகு, நடையழகு, பொருளழகு, வர்ணனை அழகு உண்டோ என்று சந்தேகப்படும் ஆத்மாக்கள், முதலியாரின் ‘‘முருகன்’’ என்ற சிறு நூலைப்படித்து மனம் தேறலாம். முதலியார் நடையழகு பயிலும் நிகண்டு. அழகுபட ஒலிக்கும் அகராதி. முதலியார் பொருள் செறிவுடன் பேசும் புலவர். பழைய தமிழ் நாகரிகத்துக்கும் புதிதாய்த் தோன்றியிருக்கும் நவநாகரிகத்துக்கும் இடையே நின்று ஊசலாடுபவர் முதலியார். இதிலும் தர்மசங்கடம்தான்.

முதலியார் தொழிலாளர்களின் சகோதரன்; முதலாளிகளின் தோழன். இளைஞர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் இங்கித நண்பன். சலிக்காமல் பேசும் கிழவர்களுக்கு, அலுப்பின்றிக் காது கொடுத்துக் கேட்கும் பக்தன். பண்டிதர்களுக்குப் பிரதிநிதி, பெண்களுக்கு நல்லுபதேசம் செய்யும் சாது.

முதலியாருக்கு நோயைப் பற்றிப்பேசுவதில் என்ன ஆசை! வாகட சாஸ்திரத்தை, இதற்கெனப் படித்திருக்கிறாரோ, என்னவோ? என்ன சொல்லி என்ன? பழைய படிப்பிலும் பிடிப்பிலும் வளர்ந்த முதலியார், தேசீய இயக்கத்தினாலும் சாதுக்களின் சங்கத்தாலும், மணம் கமழும் மலர் என விரிந்திருக்கிறார். அவருடன் சம்பாஷணை செய்வது நல்விருந்தாகும். அவருடைய பிரசங்கத்தைக் கேட்டால், உள்ளம் குளிரும், செவிக்குணவு இல்லாத பொழுது, சிறிது வயிற்றிற்கு ஈயப்படும் என்னும் திருக்குறளுக்கு, இலக்கியமாய் வாழ்ந்து விளங்குகின்றார் முதலியார்.

தர்மசங்கடம் என்பது பெரியார்களுக்குத்தான் தோன்றும் கஷ்டமான நிலைமையாகும். சாதாரண மனிதன், காளிக்குப் பூசை போடுகிறான், வாளை எடுக்கிறான், ஆட்டைப் பலியிடுகிறான். அவனுக்குத் தான் செய்கிறதில் சந்தேகமே எழுவதில்லை. காளி பூசை ஒன்றுதான், அவன் கண்ணில் படுகிறது. காளி பூசை தனது கடமை என்று எளிதிலே முடித்துக் கொள்கிறான்.

ஆனால் இரக்கமும் யோசனையும் உள்ள ஒருவன், காளி பூசையைக் கடமையாகக் கொள்ளுவானா? இப்பொழுதுதான், உண்மையான தர்மசங்கட நிலைமை ஏற்படுகிறது. முதலியார், பரம்பரையின் வலுவை அறிவார்; நவீனத்தின் தேவையையும் உணர்கிறார். இவை இரண்டுக்குள்ளும் போர் நிகழ்கின்றது. ஒன்றைத்தள்ளி, ஒன்றைக்கொண்டால், காரியத்துக்குத் தூண்டுதலான உணர்ச்சியும் ஊக்கமும் ஏற்படும். இரண்டையும் பற்றி ஓயாமல் சிந்தனை செய்து கொண்டே இருந்தால். எதையும் செய்து முடிக்க முடியாது. மிகச் சிறந்த தேசபக்தரான முதலியார், காரிய உலகில் சோபை இல்லாமல் இருப்பதற்கு, அதுதான் காரணம்.

என்றாலும் நெருக்கடி வந்தால், முதலியார் எதையும் விட்டுக் கொடுப்பதில்லை. முதலியாருக்கு ஜாதி பேதம் பிடிப்பதே இல்லை. என்றாலும் மனக்கசப்பு என்ற நோயை, அவரிடம் துளிக்கூடக் காண முடியாது. சமரசம்தான் அவரது குறி. அதற்காக, அவர் கொள்கையை விட்டு விடமாட்டார்.

முதலியார் பெரும்புலவர். பண்டைத்தமிழ் நூல்களிலும் ஆராய்ச்சித் துறையிலும் அவர் மிகத்தேர்ந்தவர். எனவே, தமிழ் மொழியின் போக்கைப் பற்றி அழுத்தமாகப் பேசக்கூடிய உரிமை கொண்டவர்.

சிறிது காலத்துக்கு முன்னர், மைலாப்பூரில் பாரதி நிலையம் என்ற ஸ்தாபனத் திறப்புவிழாவில் முதலியார் தலைமை வகிக்கும் பொழுது, ‘நக்கீரர் சகாப்தம், இளங்கோவின் சகாப்தம், கம்பரின் சகாப்தம் என்று சொல்வதைப்போல, தற்போது நடக்கும் காலத்தைத் தமிழ்நாடு சம்பந்தப்பட்ட வரையில் பாரதி சகாப்தம் என்று அழைக்க வேண்டும்’ என்று ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்.

நவீன உலகத்துக்குத் தேவையான புரட்சி மாறுதல்களை, தமிழ் இலக்கியத்திலும் தமிழர்களின் இதயத்திலும் செய்தவர் பாரதியார் என்று முதலியார் சொல்லும்பொழுது, அதைக் கேட்க எவ்வளவு பிரம்மானந்த மாயிருக்கிறது! தாம் சிறந்த பண்டிதர் என்பதை ஆதாரமாக வைத்துக் கொண்டு முதலியார் பாரதியாரைப் போற்றுவதுதான் முறையாகும். பாரதியாரின் பாடல்களில் இலக்கணவழு இருக்கிறது என்று சொன்ன தமிழ்ப் பண்டிதர்களுக்குத் தக்க சூடு கொடுத்திருக்கும் முதலியாரை வாழ்த்தாமல் இருக்க முடியுமா?

இந்த மாதிரி சாதுத்தனமான காரியங்களைச் செய்துகொண்டு சாது முதலியார் நீண்டகாலம் அயுளோடு இருக்கவேண்டும் என்று தமிழர்கள் ஆசைப்படுவது இயற்கைதானே!

You may also like
6. ஜ்யார்ஜ் ஜோஸப் – TAMIL LEADERS – 6
தலைமுறைகளை பாதுகாத்த தலைமுறை இடைவெளி!
5. டாக்டர். டி.எஸ்.எஸ். ராஜன் – TAMIL LEADERS – 6
4. டாக்டர் பி. வரதாஜுலு நாயுடு – TAMIL LEADERS – 5

Leave a Reply