Home > கட்டுரைகள் > உதயநிதி ஸ்டாலின் ஊர் சுற்ற வேண்டும்!

உதயநிதி ஸ்டாலின் ஊர் சுற்ற வேண்டும்!

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே, திமுக தலைமைக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது யோசனையாக இந்த திட்டத்தை முன் வைக்கிறேன்.

திமுக அரசு அமையப் போகிறது என்று தமிழ்நாடு முழுவதும் மக்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். எத்தனை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கப் போகிறது என்ற விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில் தலைவர் ஸ்டாலினின் கடுமையான உழைப்பும், அவருக்கு நிகராக கவிஞர் கனிமொழியும், உதயநிதி ஸ்டாலினும் தங்கள் உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். மற்ற நிர்வாகிகளின் உழைப்பையும் குறைசொல்ல முடியாது.

திமுகவின் அடுத்த நம்பிக்கை என்று உதயநிதி உருவாகிவிட்டார். கழகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல அவர் தன்னை தயார்படுத்தி வருகிறார்.

திமுகவை குடும்பக் கட்சி என்று சொல்லுகிறவர்களின் வாயை அடைத்து, கட்சியின் பிரச்சாரத்தை மிக வலுவாக கொண்டு செல்வதிலும், புதிய வாக்காளர்களை ஈர்ப்பதிலும் உதயநிதி வெற்றிபெற்று விட்டார் என்பதே உண்மை.

எனவேதான் இந்த திட்டத்தை நான் முன்வைக்கிறேன். கட்சியின் தலைவராக இருந்த அண்ணா, கலைஞர் அளவுக்கு தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கால் பதித்தவர்கள் யாரும் இருக்க முடியாது. சாலை வசதி இல்லாத அந்தக் காலகட்டத்திலேயே இவர்கள் குக்கிராமங்களையும் தங்கள் கால்களால் அளந்தவர்கள்.

அவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், இளைஞர் அணியை கட்டியெழுப்ப இன்றைய தலைவர் ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் விரிவான அளவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

அவர்களுடைய காலகட்டத்தைக் காட்டிலும் தகவல் தொழில்நுட்ப வசதி அதிகரித்துள்ள இப்போது, தொண்டர்களையும் பொதுமக்களையும் சென்றடைவது இப்போது எளிதுதான்.

ஆனால், உதயநிதி தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக எல்லா ஊராட்சிகளுக்கும் நேரடியாக பயணிக்க வேண்டும். அவருடைய பயணம், கிராமங்களில் புதிய தலைமுறையை திமுகவின் பக்கம் ஈர்க்கும் என்பது எனது எண்ணம்.

எல்லா ஊர்களிலும் கழகக் கொடியேற்ற வேண்டும். எல்லாக் கிராமங்களிலும் கலைஞர் படிப்பகம் உருவாக்க வேண்டும். இதில் கட்சி நிர்வாகிகளை ஈடுபடுத்த வேண்டும்.

எல்லா மட்டத்திலும் உதயநிதி தனக்கான புதியவர்களை அடையாளம் காண வேண்டும். கலைஞரைப் போல அடிமட்ட அளவில் தொண்டர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக இனிவரும் 5 ஆண்டுகளில் திமுக அரசு சாதனைகளுடன், கட்சியின் அடித்தளத்தை மேலும் உணர்வுபூர்வமானதாக வலுப்படுத்த வேண்டும். அப்போதுதான், கழகத்தின் அடுத்த 5 ஆண்டுகள் மட்டுமல்லாது, மேலும் பல ஆண்டுகள் பலம் மிக்கதாக அமையும்.

இப்போதிருந்தே உதயநிதி தனக்கான புதிய நிர்வாகிகளை, திராவிட அரசியலில் பக்குவப்பட்ட நிர்வாகிகளை எல்லா மட்டத்திலும் கண்டறிந்து நியமிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் கழகத்தை அதன் கொள்கைசார்ந்து இயக்கும் அனுபவத்தை பெறுவார்கள்.

You may also like
தலைமைச் செயலாளர் இறையன்புவின் தலைமைப் பண்பு – கிள்ளை ரவீந்திரன்!
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!
தமிழக அரசுக்கு ஒத்துழைக்க வேல்முருகன் எம்.எல்.ஏ., வேண்டுகோள்!
ஒரே பார்வையில் எதிரிகளுக்கு ஸ்டாலின் சொன்ன பதில் – அசோக்.R

Leave a Reply