Home > கட்டுரைகள் > தமிழர் திருநாளுக்கும் சங்கிகளுக்கும் என்ன சம்பந்தம்?

தமிழர் திருநாளுக்கும் சங்கிகளுக்கும் என்ன சம்பந்தம்?

தனது மதவெறி நோக்குக்காக பொங்கல் நாளை பாஜக கொண்டாடுகிறது. அரசின் பொங்கல் பரிசை இந்து அல்லாதவருக்கு தரக் கூடாது என்கிறது இந்து மக்கள் கட்சி.

அனைத்து மதத்தவரும், மத நம்பிக்கை இல்லாதவரும் தரும் வரிப்பணத்தில் அதுதரப்படுகிறது என்பதைக்கூட மறந்து போனார்கள். மதவெறி அந்த அளவிற்கு அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது.

பணரீதியாக மட்டுமல்ல, பண்பாட்டு ரீதியாகவும் பொங்கலை ஒரு பிராமணியப்பண்டிகையாக மாற்றப் பார்க்கிறார்கள். விட்டால், புரோகிதர்களைக் கொண்டு
பொங்கல் அன்று யாகம் வளர்த்து விடுவார்கள்! காரணம் அவர்கள் அறிவார்கள், பொங்கலை “தமிழர் திருநாளாக” சில இயக்கங்கள் முன்வைத்தன என்பதை. அது அவர்களது நெஞ்சை அரித்து வருகிறது.

காங்கிரசிலிருந்த ம.பொ.சி. அதற்குள்ளேயே தமிழரசுக் கழகம் என்கிற துணை அமைப்பை நடத்தி வந்தார்.

அதன் சார்பாகத்தான் 1947 பொங்கல் நாள் “தமிழர் திருநாள்” என்று முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது. சென்னையில் நடந்த அந்த விழாவைத் துவக்கிவைத்தவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. தலைமை தாங்கியது தமிழறிஞர் தெ. பொ. மீ. இன்னும் பேரா. ரா. பி. சேதுப்பிள்ளை போன்றோர் பங்கேற்றனர். நிறைவுரை ஆற்றினார் ம.பொ. சி. இப்படியாகத தமிழின் தொன்மை, பெருமை பேசும் தமிழ்ப் பெரும்விழாவாகப் பொங்கல் விழா நடத்தப்பட்டது.

1949இல் தி. க. விலிருந்து தி.மு.க. உதயமானது. அதற்குப் பிறகு வந்த முதல் பொங்கல் நாளைக் கொண்டாட அது முடிவு செய்தது. அதன் தலைமை நிலையப் பிரச்சாரக்குழுச் செயலாளர் நெடுஞ்செழியன் விடுத்த அறிக்கை “பொங்கல் விழா-அறுவடை விழா- உழவர்தம்விழா- மகிழ்ச்சி விழாவினைக் கிளைக் கழகங்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்” என்றது. மதப் பண்டிகையாக அல்லாது விவசாயிகளின் விழாவாக அதைக் கொண்டாட ஓர் இயக்கம் முன்வந்தது. அந்த ஆண்டு மட்டுமல்ல ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடியது.

இப்படித்தான் பொங்கல் விழா, தமிழர் விழாவாக, உழவர் விழாவாக, மதங்கள் கடந்த விழாவாக, சில அரசியல் மற்றும் பண்பாட்டு இயக்கங்கள் நடத்தும் விழாவாகப் புதுப் பரிமாணம் கண்டது.

காலப்போக்கில், தமிழ் இலக்கியங்களை, குறிப்பாக சிலப்பதிகாரம், திருக்குறள் போன்றவற்றின் பெருமைகளை மக்களிடம் பரப்பும் விழாவாகவும் இது மாறியது.

இந்த மரபுக்கும் சங் பரிவாரத்திற்கும் சம்பந்தமேயில்லை. சங்கிகள் பிற மத வெறுப்பாளர்கள், சமஸ்கிருதவாதிகள். அதுமட்டுமா? தமிழர்கள் ஒரு தேசிய இனத்தவர்,

அவர்களின் மொழி தனிச்செம்மொழி, சமஸ்கிருதம் அல்லாத மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்பதை ஏற்காதவர்கள். இத்தகையவர்கள் இதுகாறும் பொங்கல் நாளை தமிழர் திருநாளாகக் கொண்டாடியதில்லை.

இப்போது கொண்டாடுகிறார்கள் என்றால் அதன் நோக்கம் அதை இந்துப் பண்டிகையாக மாற்றுவதே.

சங்கிகள் மநுவாதிகள். மநு சாஸ்திரம் விவசாயத்தை உயர்ந்ததாகக் கருதுவதில்லை. விவசாயத்தால் பிழைக்கும் பிராமணரை சிராத்தத்திற்கு அழைக்கக் கூடாது என்று அது கறாராக விதி வகுத்துள்ளது.

ஒருபுறம் அந்த மநுவை துதித்துக் கொண்டு, மறுபுறம் உழவர் திருநாளைக் கொண்டாடுகிறார்கள் என்றால் அதன் நோக்கம் அறுவடைத் திருநாளை வரும் தேர்தலுக்கான வாக்கு அறுவடைக்குப் பயன்படுத்தவே. மக்களே கவனம்..கவனம்.

Leave a Reply