Home > கட்டுரைகள் > சூனியக்காரி – வீரமங்கை – புனிதர் பட்டங்களின் பயணித்தில் ஜோன் ஆஃப் ஆர்க்

சூனியக்காரி – வீரமங்கை – புனிதர் பட்டங்களின் பயணித்தில் ஜோன் ஆஃப் ஆர்க்

பிரான்சு நாட்டின் விடுதலைக்காக பத்தொன்பது வயதே நிரம்பிய பெண் போராடி வெற்றிப் பெற்றாள் என்றால் நம்புவதற்கு கடினமாகத் தான் இருக்கும் . இந்த நம்ப முடியா பணியைச்  செய்து முடித்த அந்தச் சிறுப்பெண்ணிற்கு மதம் கொடுத்த தண்டனை மரணம் என்பது தான் வரலாற்றில் கொடுமை !!

யார் அந்தப் பெண்? 

பிரான்சு நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் உழவர் குடும்பத்தில்  பிறந்தவள். பதினைந்தாம் நூற்றாண்டில், நூற்றாண்டுப் போரில் இங்கிலாந்து படைகளை எதிர்த்துப் பிரான்சு படைகளைக் கொண்டுச் சென்று, மிகப் பெரிய வெற்றி ஈட்டித் தந்தார் ஜோன் ஆஃப் ஆர்க். எந்த கல்வி அறிவும் இல்லாதவள், இராணுவ தந்திரங்கள்  , யுத்தங்கள் பற்றி அறியாதவள் , கடவுள் தனக்கு அவ்வாறு கட்டளையிட்டார் என்று குரல் கேட்பதாகக் கூறிக்கொண்டு இளவரசர் சார்ல்ஸ் வலோய்ஸ்சிடம்  (Charles Of Valois ) கூறியபோது அவர் அதை நம்பவில்லை. இந்தச் சிறுபெண் எப்படி போரில் வெற்றி ஈட்டித் தர முடியும்? என மறுத்துவிட்டார். பின் ஜோன் ஆஃப் ஆர்க் அவரிடம் தொடர்ந்து நம்பிக்கையோடு பேசியதைக் கண்டு சம்மதித்தார். 

சிறு பெண்ணாக இருந்தக் காரணத்தினால் ஆண்கள் போல முடி வெட்டிக்கொண்டு , உடை உடுத்திக் கொண்டு போருக்கு தயாரானாள் ஜோன் ஆஃப் ஆர்க். இங்கிலாந்து மற்றும் அதன் தோழைமை  படைகளான பருகெண்டிய படைகளை எதிர்த்து வென்றார் .அந்த வெற்றியைத் தொடர்ந்து இளவரசர் ஏழாம் சார்லஸ்   மன்னனாக முடிசூட்டப்பட்டார். ஜோன் ஆஃப் ஆர்க் ஈட்டித்தந்த தொடர் வெற்றிகள் பிரான்சு படை வீரர்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தது. ஜோன்  பிரான்சின் இதயமான பாரிஸை மீட்டெடுக்க, ஏழாம் சார்லஸின் அனுமதியைக் கேட்டார். மன்னனும் அனுமதி தந்தார். படையை அனுமதித்த போதிலும் ஏழாம் சார்லஸ் பருகெண்டி பிரபுக்களுடன் அமைதியையே விரும்பினார். அதனால் களத்தில் தோல்விகளைச் சந்தித்துத்துக் கொண்டிருந்த ஜோன் மன்னனின் ஆணையால் முயற்சியைக் கைவிட்டு திரும்ப வேண்டியதாகியற்று.

கொம்பியன் என்னும் இடத்தில் ஆங்கிலேய பருகெண்டிய படைகளை எதிர்த்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது ஜோன் சிறைப்பிடிக்கப்பட்டார். சிறைப் பிடிக்கப்பட்டவர்களை அக்கால வழக்கப்படி ஏழாம் சார்லஸ் மீட்பார் என எண்ணிக்கொண்டிருந்த போது மன்னன் ஜோனைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 

பருகெண்டியர்களோ  ஜோனை ஆங்கில அரசிடம் விற்றுவிட்டனர். அவர் மேல் 70 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது . மதத்திற்கு எதிராக நடந்து கொண்டாள் , ராஜ துரோகம் (ஏழாம் சார்லஸின் போட்டி அரசன் இங்கிலாந்து ஆதரவு பெற்ற ஆறாம் ஹென்றிக்கு எதிராக) போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அந்தக் குற்றங்களை ஒத்துக் கொள்ளும்படி ஜோன் கொடுமைப்படுத்தப்பட்டார் . பல முறை சிறையில் இருந்து தப்பிக்க நினைத்த ஜோனின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் மட்டுமே முடிந்தது. 

அவருக்கு எதிராக மக்களிடம் இருந்து ஆதாரங்கள் திரட்டப்பட்டது. அவள் வினோதமாக நடந்து கொண்டாள் , குரல்கள் கேட்பதாக கூறினாள் , தான் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவள் எனக் கூறினாள் ,ஆண்களைப் போல் உடை உடுத்திக் கொண்டாள் போன்ற குற்றச்சாட்டுகளை மக்கள் அவள் மீது வைத்தனர். இறுதியில் அவள் மீது சுமத்தப்பட்ட 70 குற்றச்சாட்டுகள் குறுகி 12 ஆக ஆக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட வழக்கு விசாரணையின் போது ஜோன் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட, ஆங்கில அரசு அவர் ஒரு போதும் இயற்கையாக மரணம் அடைந்து விடக் கூடாது என்பதில் குறியாக இருந்தது. அவரை சூனியாக்காரி என்றே பரப்புரை செய்தது. அதை நிரூபித்து அவளுக்கு மரண தண்டனை நிறைவேற்றவே அவர்கள் விரும்பினார்கள் .

ஒரு சார்பான நீதி விசாரணைக்குப்பின்  , ஜோனிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை எதிர்த்து அவர் போப்பிடம் மேல்முறையீடு செய்ய விரும்பினார். ஆனால் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. 

இறுதியாக மே 30, 1431 ஆம் ஆண்டு ஜோன் உயிருடன் கொளுத்தப்பட்டார். வரலாறு நெடுகிலும் பெண்கள் எப்படி மதங்களால் வஞ்சிப்பட்டனர் என்பதற்கு ஜோனின் வாழ்க்கையே சாட்சியாக இன்றும் இருக்கின்றது. 

அவரின் மரணத்திற்குப்பின் இருபத்தியிரண்டு ஆண்டுகள் பிரான்சு தொடர்ந்து போரை நடத்தி தன் பகுதிகள் அனைத்தையும் ஆங்கிலப்படைகளிடம் இருந்து மீட்டெடுத்தது. போப் மூன்றாம் காலிக்ஸ்டஸின் முயற்சியால் ஜோனின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு பிரான்சு நாட்டின் விடுதலை அவரால் மட்டுமே சாத்தியப்பட்டது என்பது ஒத்துக்கொள்ளப்பட்டது . ஜோனிற்கு மாவீரர் என்ற பட்டம் அளிக்கப்பட்டது. பின் போப் பெனடிக்ட் 15 ஜோன்னுக்கு மே  16 1920 ஆம் ஆண்டு புனிதப்பட்டம் வழங்கினார்.  

இரண்டு தலை சிறந்த எழுத்தாளர்கள் ஜோனை எப்படி தங்கள் படைப்புகளில் பயன்படுத்தினர் என்பதற்கு உதாரணம், ஷேக்ஸ்பியர்  ஆறாம் ஹென்றி முதல் பாகத்தில் ஜோனை  எதிர்மறைக் கதாப்பத்திரமாகவே சித்தரித்தார் ,  ஆனால்  “ஸெயின்ட் ஜோன்” என்னும் தலைப்பில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுதிய வரலாற்று நாடகங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப் படுவது, ஜோன் ஆஃப் ஆர்க் எனும் நாடகம்.

ஒவ்வொரு ஆண்டும் மே முதல் வாரத்தில் ஓர்லியான்ஸ் நகரில் ஜோன் ஆஃப் ஆர்க்கின் நினைவாக விழா எடுக்கப்படுகிறது. எந்த மதம் அவரை வஞ்சித்துக் கொன்றதோ அதை மறைக்க ,  அந்த மதமே அவரை புனிதர் என்றும் கூறி கொண்டாடுவது தான் வரலாற்றில் வியப்பு!!

Leave a Reply